செவ்வாய், 30 நவம்பர், 2010

Delhi 2010: 8 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் : சி.பி.ஐ. இன்று அதிரடி சோதனை!

டில்லியில் சமீபத்தில் நடந்த பொதுநலவாய விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகளில் ரூ. 8 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பாக, சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர்.போட்டி ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள் இந்த ஊழலை செய்ததாக கூறப் பட்டது. மத்திய கணக்கு தணிக்கைத்துறையும் இந்த ஊழலை ஆதாரங்களுடன் வெளியிட்டது.

மேற்படி ஒருங்கிணைப்புக் குழு காங்கிரஸ் எம்.பி.யும் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவருமான சுரேஷ் கல்மாடி தலைமையில் அமைக்கப்பட்டிருந்தது. ஊழல் குற்றச்சாட்டுக்கள் வெளியானதும் ஒருங்கிணைப்புக் குழுவில் இருந்து சிலர் அதிரடியாக நீக்கப்பட்டனர்.
முதல் கட்ட விசாரணயில்,பொதுநலவாய விளையாட்டுப் போட்டிக்கான கருவிகளை வாங்கியதில், விளையாட்டு அரங்கம் கட்டுமான பணிகளில் பாரிய அளவில் ஊழல் நடந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி சுரேஷ் கல்மாடிக்கு நெருக்கமானவர்களான டி.எஸ்.தர்பாரி, சஞ்சய் மகிந்திரீ ஆகிய இருவரையும் கைது செய்தனர். போட்டி ஜோதி ஓட்டம் மற்றும் ஒளிபரப்பு உரிமைகளில் தர்பாரியும், சஞ்சயும் கைவரிசை காட்டி இருப்பது தெரிந்தது.
அவர்கள் இருவரும் சி.பி.ஐ. விசாரணைக்குப் பிறகு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். அவர்கள் ஜாமீன் கோரி மனு செய்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு ஜாமீன் கொடுக்கக்கூடாது என்று சி.பி.ஐ. கூறி வருகிறது.
சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த மாதம் டெல்லியில் உள்ள ஒருங்கிணைப்புக்குழு அலுவலகத்தில் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினார்கள். அந்த ஆவணங்களின் அடிப்படையில் சி.பி.ஐ. விசாரணை நடந்து வருகிறது. சி.பி.ஐ.யிடம் காமன்வெல்த் ஊழலுக்கான பல்வேறு ஆதாரங்கள் சிக்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இதை உறுதிப்படுத்த சி.பி.ஐ. அடிக்கடி அதிரடி சோதனைகளை நடத்தி வருகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை டில்லியில் 11 இடங்களில் சி.பி.ஐ. அதிரடி வேட்டையில் ஈடுபட்டது. காலை 7.00 மணிக்கு ஒரே சமயத்தில் இந்த சோதனை தொடங்கியது.
சுரேஷ்கல்மாடியின் நெருங்கிய கூட்டாளிகளும் ஒருங்கிணைப்புக் குழுவில் முக்கிய அங்கம் வகித்தவர்களான லலித்பானட், வி.கே.வர்மா ஆகியோரது வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.
லலித்பானட் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளராக இருந்தவர். வி.கே.வர்மா ஒருங்கிணைப்பு குழு டைரக்டர் ஜெனரலாக பணியாற்றினார். ஒருங்கிணைப்புக் குழு சார்பில் விடப்பட்ட டெண்டர்களில் இவர்கள் முக்கிய பங்கு வகித்தது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக பல்வேறு ஆவணங்களை சி.பி.ஐ. இன்று கைப்பற்றியது. காமன்வெல்த் போட்டியில், ஒருங்கிணைப்பு குழு செய்துள்ள முறைகேடுகளுக்கு இன்று நடந்த அதிரடி வேட்டை மூலம் போதுமான அளவுக்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
லலித்பானட், வி.கே.வர்மா இருவர் மீதும் மின்னணு ஸ்கோர்போர்ட்கள், நேரம் காட்டும் கருவிகள் வாங்கியதில் ஊழல் செய்ததாக ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மின்னணு கருவிகள் வாங்கியதில் மட்டும் லலித் பானட், வி.கே.வர்மா இருவரும் ரூ. 107 கோடி வரை சுருட்டி விட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. அவர்கள் வேறு எந்தெந்த ஏற்பாடுகளில் கைவரிசை காட்டி உள்ளனர் என்பது இன்று நடந்து வரும் சி.பி.ஐ. வேட்டைக்குப் பிறகே தெரியும்.
டெல்லியில் 11 இடங்களில் நடந்து வரும் சோதனை சுரேஷ்கல் மாடிக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சி.பி.ஐ. வேட்டை அவருக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது.
காமன்வெல்த் போட்டி முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. தவிர வேறு சில புலனாய்வு அமைப்புகளும் விசாரணை நடத்தி வருகின்றன. இந்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருப்பதாக சுரேஷ்கல்மாடி நேற்று கூறினார்.
இந்த விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய சுரேஷ் கல்மாடி விரும்புகிறார். இதற்காக அவர் நேற்று சபாநாயகர் மீரா குமாரை சந்தித்துப் பேசினார்.
இந்த நிலையில் சி.பி.ஐ. நடத்தி வரும் அதிரடி வேட்டை அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கி நிலை குலைய வைத்துள்ளது. சி.பி.ஐ. அடுத்து சுரேஷ் கல்மாடியிடமும் விரைவில் விசாரணை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: