செவ்வாய், 30 நவம்பர், 2010

பலாலி, காங்கேசன்துறை வீதி அகலிப்பு:பொதுமக்களுக்கு விளக்கம்

யாழ்ப்பாணம் பலாலி வீதி மற்றும் காங்கேசன்துறை வீதி ஆகியவற்றை அகற்றுப் பணி தொடர்பாக அந்த வீதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டங்கள் நல்லூர் பிரதேச செயலாளர் செந்தில்நந்தனன் தலைமையில் அண்மையில் நடைபெற்றபோது, வீதிகளில் இரு மருங்கிலும் இருக்கும் வீட்டு உரிமையாளர்கள் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. வீதியில் மத்தியிலிருந்து 23 அடி வரையில் வீதி புதிதாக அகலப்படுத்தப்படவிருப்பதாக இதன்போது பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வீதியில் மத்தியிலிருந்து 23 அடிக்கு உட்பட்ட பகுதிக்குள் இருக்கும் வீட்டு மதில்கள் மற்றும் பிற கட்டுமானங்களை அகற்றுமாறு வீட்டு உரிமையாளர்களுக்குப் பணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அகற்றப்படும் மதில்கள் மீளவும் வீட்டு உரிமையாளர்களுக்குக் கட்டிக் கொடுக்கப்படும் என்றும் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த எல்லைக்குள் இருக்கும் வீட்டுக் கட்டுமானங்கள் எதுவும் அகற்றப்பட நேர்ந்தால், அதற்குரிய நட்ட ஈடு எதுவும் வழங்கப்படமாட்டாது என்றும் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, காங்கேசன்துறை வீதி அகலிப்புக் காரணமாக, யாழ் நகருக்குச் சமீபமாக அந்த வீதியிலுள்ள பல புராதன கட்டடங்கள் பாதிக்கப்படும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வண்ணை சிவன் கோவிலின் ஒரு பகுதி, நாவலர் வித்தியாசாலை முன்புறக் கட்டடம், யாழ் இந்துக் கல்லூரியின் புராதன பிரார்த்தனை மண்டபத்தின் ஒரு பகுதி என்பன இதன்போது அகற்றப்படவேண்டி ஏற்படும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: