ஒருவர் உண்மையையோ, பொய்யையோ சொல்லும்போது நமக்கு ஒரு தொல்லையும் இல்லை. ஆனால் உண்மையும் உண்மையை போலவே இருக்கும் பொய்யும் கலந்து தரப்படும்போது ஏற்படும் பிரச்சினைகள் கே.பி.யின் நேர்காணல்களை படிக்கும்போது ஏற்படுகிறது. அவர் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறாரா, அரசு விருந்தாளியாக கெளரவப்படுத்தப்பட்டிருக்கிறாரா என்பதில் தொடங்கி அவர் தொடங்கியிருக்கும் ஈழத் தமிழர் நிவாரணத்திற்கான என்.ஜி.ஓ. அமைப்பிற்கு நன்கொடை கேட்கும் விவகாரம் வரை மர்மத்திற்குப் பஞ்சமே இல்லை. விடுதலைப்புலிகள் அமைப்பிற்காக வேலை செய்தபோது என்னென்ன வேஷத்தை எல்லாம், எவ்வளவு கச்சிதமாகப் போட்டேன் என பெருமை தொனிக்கும் வகையில் அவர் டி.பி.எஸ்.ஜெயராஜிடம் பேசியிருக்கிறார். அவர் இப்போது என்ன வேஷம் போடுகிறார் என்பதையும் புதிர் போடாமல் சொல்லிவிட்டால் தேவலாம். அன்று பல்வேறு பெயர்களில், உருவங்களில் உலக நாடுகளை வலம் வந்தது ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கவா, விடுதலைப்புலி இயக்கத்தைப் பாதுகாக்கவா? இப்போது இவர் எடுத்திருக்கும் அவதாரத்தின் நோக்கம் ஈழத் தமிழர் நலனுக்காகவா அல்லது தனது தனிப்பட்ட நலனுக்காகவா? ஒரு மாயாவியாக (அது நல்லவிதத்திலா, கெட்ட விதத்திலா என்பது பார்வைகளுக்கேற்ப மாறுபடலாம்) அறியப்பட்ட கே.பி. இன்றும் தனது காலடித் தடமே இல்லாமல் ஏதோ ஒரு காரியம் செய்கிறார்.
இந்திய உளவு அமைப்பான ‘ரா’வின் கைக்கூலி. இலங்கை அரசிடம் சரணடைந்துவிட்ட சிங்கள அடிவருடி. பிரபாகரனுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் முடிவைத் தேடித் தந்த கருங்காலி. அவர் மீதான ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் அவரிடம் பதில் இருக்கவே செய்கிறது. நெடியவனின் “துரோகம்” பற்றிப் பேசுகிறார். வரலாற்று எதிரியுடன் கைகோர்ப்பது குறித்துக் கேட்டால் “கள நிலவரத்தை” புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார். பல சிக்கலான கேள்விகளுக்கு அவரின் பதில் இதுதான். மீண்டும் ஒரு முறை தமிழ் மக்களை விவாதங்களற்ற அரசியல் பயணத்திற்கு அவர் அழைக்கிறார். எங்கு என்று கேட்காமல், கேட்க உரிமையில்லாமல் பல்லாயிரம் பேர் கொலைக் களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட வரலாறு போதாதென்று மீண்டும் ஒரு முறை கே.பி. என்ற தனி நபரின் தெரிந்துகொள்ள முடியாத நோக்கத்தின் பின்னால் தமிழ் மக்களை அணிவகுக்கச் சொல்கிறார். தமிழர்களை நன்றாக வாழ வைக்கப் போகிற இந்த ஹீரோவை நம்பி நன்கொடை தர வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்.
தனக்கு சாதகமான தமிழ் அரசியலை உருவாக்குவதற்காக சிங்கள அரசு உருவாக்கும் எண்ணற்ற நிழலான அரசியல் தலைவர்களுக்குப் பஞ்சமே இல்லை. பிள்ளையான், கருணா இப்போது கே.பி. இவர்கள் எல்லோரும் சிங்கள அரசின் இந்த சிறப்பு அந்தஸ்தைப் பெறும் முன்பு என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்பதை நினைவுபடுத்த வேண்டிய கொடிய வரலாற்று யுகத்தில் நாம் வாழ்கிறோம். சிறு வயதிலேயே துப்பாக்கி ஏந்தத் தொடங்கிய ஒரு நபர், ஒரு குரூரமான ராணுவத் தளபதி, ஒரு தந்திரமான சர்வதேச ஆயுத, போதைப் பொருள், பணக் கடத்தல் வியாபாரி. எவ்வளவு பெரிய தலைவர்களிடம் தமிழர்களின் வாழ்வை ஒப்படைக்க இலங்கை அரசு ஆர்வமாக இருக்கிறது! தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற மக்களின் அதிக ஆதரவைக் கொண்ட, தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட (அது ஒரு மோசமான தேர்தல் என்றாலும்கூட) தலைவர்கள் இருக்கிறார்கள் என்பது சிங்கள அரசிற்கு ஒரு பொருட்டாகக்கூட இல்லை என்பது ஈழத் தமிழர் பிரச்சினை அவ்வளவு எளிதில் சாத்வீகமாகத் தீர்ந்துவிடாது என்பதற்கான அறிகுறி போல் தெரிகிறது.
எமர்சனின் ஒரு அழகான மேற்கோள் ஒன்று: “யதார்த்தத்தில் மறைக்கப்படும் உண்மையைக் கற்பனை மூலம் காணலாம்.” ஈழத்து நிகழ்வுகளிலும் நம் கற்பனையாற்றல் மூலம்தான் உண்மையையும் பொய்யையும் பிரித்தறிய முடிகிறது. குழப்பங்களும் மர்மங்களும் சூழ்ந்த ஈழத் தமிழ் அரசியலின் கே.பி. அத்தியாய த்தை இவ்வாறு (என் பார்வையில்) கற்பனை மூலம் பார்க்கிறேன். ஒன்று, நான்காவது ஈழப் போர் துவங்கும் முன்பே கே.பி சிங்கள அல்லது இந்திய உளவுப் படைகளின் (அல்லது இரண்டின்) கட்டுப்பாட்டில் வந்திருக்க வேண்டும் அல்லது பிரபாகரன் மரணத்திற்குப் பிறகான விடுதலைப் புலி இயக்கம் தன் கட்டுப்பாட்டில் வரவில்லை என்பதைப் புரிந்துகொண்டவுடன் அவர் சுவாதீனமாக இலங்கை அரசின் சார்பாளராக மாறியிருக்க வேண்டும். கே.பி கைது செய்யப்பட்ட கதையையோ, ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் போன்ற பாதிப்பால் அவர் சிங்கள அரசுக்கு சாதகமாக மாறியதாகச் சொல்லப்படும் கதையையோ நான் நம்பவில்லை. உலகெங்கும் பல்வேறு நாடுகளால் முடக்கப்பட்டிருக்கும் விடுதலைப்புலி இயக்க வங்கிக் கணக்குகளை இலங்கை அரசின் உதவியுடன் அவர் திறக்கிறார் என்றும் அந்தப் பணத்தை ஈழத் தமிழர் நலனுக்காக செலவிடப் போகிறார் என்றும் சொல்லப்படுவது என்னுடைய வாதத்திற்கு வலு சேர்க்கிறது. விடுதலைப் புலிகள் செய்த அத்தனை கிரிமினல் பிசினஸ்களும் இன்று உலகத் தமிழர்கள் தானாக முன்வந்து கொடுத்த அல்லது மிரட்டிப் பிடுங்கப்பட்ட பணத்தை கணக்கு வழக்கில்லாத அளவுக்கு குவியச் செய்திருக்கும். அதை கே.பி. நிஜமாகவே மக்களுக்கு பயன்படுத்தப் போகிறாரா, இலங்கையின் சுனாமி நிவாரண நிதியில் பிற அரசியல்வாதிகள் செய்தது போல தனக்குப் போக மிஞ்சியதைத்தான் தமிழர்களுக்குக் கொடுக்கப் போகிறாரா என்பது தெரியவில்லை. ஆனால் எப்படிப் பார்த்தாலும் ஏற்கனவே பணக்காரராக வளைய வந்த கே.பி. இனி இன்னும் பணக்காரராகத் திகழப் போகிறார். கே.பி. அரசியலுக்கு வரமாட்டார் என்று கருணா உறுதியாகக் கூறுவதைப் பார்த்தால் இவர்களுக்குள் (பிள்ளையான்-கருணா அண்ட் கோ-ராஜபக்க்ஷே-கே.பி) இடையில் ஒரு உடன்படிக்கை எட்டப்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது. அரசியலுக்கு நீ, பணத்திற்கு நான்.
கே.பி. விஷயத்தில் ஒரு cynic ஆகப் பேசுவது போல் தெரியலாம். ஒரு வேளை சிங்கள அரசை எந்த வகையிலும் எதிர்க்க முடியாத வரலாற்றுத் தருணத்தில் இருப்பதால் அரசு அமைப்பின் பக்கத்தில் நின்றுகொண்டு கே.பி. தமிழ் மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கக்கூடும் என்று சிலருக்குத் தோன்றலாம். ஆனால் பித்தலாட்டம், மோசடி ஒன்றையே தன் வாழ்நாள் முழுக்க ஆயுதமாகக் கொண்டிருந்த ஒரு மாயாவி இப்போது ஆடி வருவது நாடகமா, இல்லையா என்று எவ்வாறு தீர்மானிப்பது? ஆயுதக் கடத்தல், போதைக் கடத்தல், சட்ட விரோத பண வர்த்தகத்தில் கில்லாடியான ஒருவர்தான் தமிழர்களுக்கு மீட்சி கொடுக்க வந்த தலைவரா? அரசியல் இயக்கத்திற்கும் ராணுவ இயக்கத்திற்குமான வித்தியாசமே இல்லாமல் இயங்கியதுதான் விடுதலைப்புலிகளுக்கும் கூடவே ஈழத் தமிழருக்குமான வீழ்ச்சியாக மாறியது. இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் நம்பிய வின்சண்ட் சர்ச்சிலைப் போர் முடிந்த அடுத்த தேர்தலிலேயே மாற்றினார்கள் பிரிட்டிஷ் மக்கள். ஈழத் தமிழர் விஷயத்தில் இந்த திடீர் அரசியல் கன்வர்ட்களை நம்பித்தான் களமிறங்க வேண்டுமா என்பதைத் தமிழ் மக்கள் தீர யோசிக்க வேண்டும்.
நன்றி: உயிர்மை வாரஇதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக