1948ஆம் ஆண்டில் இலங்கை நாடாளுமன்றத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை இலங்கை பிரதமர் டி.எஸ். சேனநாயக்க பின்வருமாறு அறிமுகப் படுத்தினார்.
“இது எளிமையான சட்டமாக இருந்தாலும், மிக முக்கியமான சட்டமாகும். எவரது நலன்களுக்கும் நாம் தீங்கு விளைவிக்க எண்ணவில்லை.
வேறு ஒரு நாட்டில் பிரஜைகளல்லாத இலங்கையிலுள்ள மக்களு க்கு பிரஜா உரிமை (குடியுரிமை) வழங்க முயற்சிக்கி றோம். நாம் எமது சொந்த பிரஜாவுரிமை (குடியுரிமை) சட்டங்களை வைத்திருப்பது அவசியமானதாகும்”என்று தனது உரையில் வெளிப்படுத்தினார்.
இலங்கை குடியுரிமையைப் பெற்றிருந்த சுமார் பத்து லட்த்தினரின் குடியுரிமையும், வாக்குரிமைபறிப்புகளும் அவரது மென்மையான உரையில் மறைந்திருக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கூட அறிந்திருக்க வில்லை. குடியுரிமை திருத்தம் என்ற பெயரில் இந்திய வம்சா வழித் தமிழர்களின் குடியுரிமையைப் பறித்து. நாடற்ற வர்களாக ஆக்கியது. குடியுரிமை த்திருத்தச் சட்டம்.
எழுபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்தேறிய இந்த அவ லங்களின் அடையாளங்களாக தமிழகத்தின் அகதிகள் முகாம்களில் நாடற்றவர்களாக ஆயிரக் கணக்கில் இன்றும் உள்ளனர்.
கடந்த 19/ 07/ 2016 ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்ட த்தில், பாகிஸ்தான், பங்காளதேஷ், ஆப்கானிஸ்தான் என மூன்று நாடுகளை மட்டும் உள்வாங்கிக் கொண் டது. அதிலும் தீண்டத்தக்கது தீண்டத்தகாதது என்ற ஒரு நிலைப்பாட்டையும் சட்டம் வெளிப்படுத்தியது..
குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறை வேற்றியதும், இது தொடர்பான விவாதங்களும் போரா ட்டங்களும் நாடுமுழுதும் எழத் தொடங்கின.
தமிழக முகாம்களில் பல்லாண்டுகளாக இருந்து வரும் இலங்கை தமிழ் அகதிகளுக்கான குடியுரிமை தொடர் பான விவாதங்கள் தமிழக ஊடங்களிலும், தமிழக சட்டமன்றத்திலும் “இலங்கை அல்லது ஈழத் தமிழ ர்கள்” என்ற அடையாளப் படுத்தலுடன் வெளிப்படு த்தப் பட்டன. ஆனால், நாடற்றவர்களாக முகாம்களில் உள்ள மலையகத் தமிழர்கள் குறித்த பேச்சாடல்இடம் பெறவில்லை.
குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இவர்களுக்கு குடியு ரிமை பெறுவதற்கான சட்டப்படி மட்டுமல்ல, தார்மீகம், ரீதியிலான கடப்பாடும் ஒன்றிய அரசுக்கு இருந்தும் தவிர்த்துள்ளது குறித்தும் நமது நாடாளுமன்ற உறுப் பினர்களின் குரல்லும் எழவில்லை என்றே தோன்று கிறது.
2008 இல் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிபரப்படி தமிழ கத்தில் உள்ள 117 முகாமில் 95,219 பேர்கள் உள்ளதாக குறிப்பிடப் பட்டுள்ளன.
பொதுத் துறையின் ஆண்டு கொள்கை குறிப்பு 2019- 20 படி தற்பொழுது தமிழகத்தில் இருபத்தைந்து மாவட்ட ங்களில் 107 அகதிகள் முகாம்கள்உள்ளன. இதில் 18,871. குடும்பங்களை சேர்ந்த 60,438 பேர்கள் தங்கியுள்ளனர். முகாமிற்கு வெளியில் (தமிழகத்தின் வெவ்வேறு மாவ ட்டங்களில்) 13,684 குடும்பங்களைசேர்ந்த 34,684. பேர்க ளும்உள்ளனர். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சிறப்பு முகாமில் 31 நபர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வும் அரசு அறிக்கை கூறுகின்றன.
முகாமிற்கு வெளியில் உள்ளவர்கள் தமிழகத்தில் தங்களது இருப்பை தொடர்வதற்காக தாங்கள்வாழும் பகுதிகளில்உள்ள காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆண்டுக்கு ஒருமுறை புதுபித்துக் கொள்ளும் நடைமுறையும் தொடர்கின்றது. .
அகதிகள் என்ற அடையாளப்படுத்தலோடு முகாம் களில் உள்ளவர்களில் 28,489 பேர்கள் இந்திய வம்சா வழித் தமிழர்களும் உள்ளனர். என 2008ஆம் ஆண்டு கணக்கெடுப்பு கூறுகின்றன. முகாமிற்கு வெளியிலும் இந்திய வம்சாவழியின தமிழர்களும் உள்ளனர்.
1977, 1981, ஆண்டு இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு, கொழும்பு, கண்டி மத்திய மாகாணம், ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலிருந்தும் இந்திய வம்சாவழி மலையகத் தமிழர்கள் அகதிகளாக வர ஆரம்பித்தனர். இப்படி வந்த பலரும் அகதிகள் முகாம்களுக்கு செல்ல வில்லை.
1983ஆம் ஆண்டு காலத்திற்குப் பின்பு, அகதிகளாக வந்தவர்களில், இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தாயகமாகக் கொண்ட பூர்வீகத் தமிழர் களுடன், 1977க்குப் பின்பு, வடக்கில் குடியேறிய இந்திய வம்சாவழியின மலையகத் தமிழர்களும், மலையகப்ப குதியிலிருந்தும் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர்.
இப்படி வந்தவர்களில் இரண்டு வகைப்பட்வர்கள் தமிழ கத்தில் உள்ள அகதிகள் முகாம்களிலும், முகாமிற்கு வெளியிலும் உள்ளனர்.
.வடக்கு கிழக்கு நிலப்பகுதிகளை தங்களின் தாயகமா கக் கொண்டுள்ள ஈழத் தமிழர்களும். வேறுபட்ட நிலப் பகுதிகளையும், வேறுபட்ட வரலாற்றையும், தொழில், மற்றும், வாழ்க்கை முறையிலும், பண்பாட்டிலும் சில வேறுபாடுகளை கொண்டுள்ள இந்திய வம்சாவழித் தமிழர்கள், ஈழத்தமிழர்களுடன் மொழியால் ஒன்று பட்டவர்கள்.
இரண்டு சமுகத்தினருமே, இன வன்முறைக்கு உள்ளா க்கப்பட்டவர்கள். இவர்கள் அகதிகள் என்ற பொதுதன் மையை கொண்டுள்ள போதிலும், பூர்வீகத்தாயகத்தில் வாழ்ந்து வந்துள்ள ஈழத் தமிழர்களுடன், பல்வேறு நிலைகளில், சம நிலை நிலவாத போதும் இரு சமு கத்தினரையும் ஒற்றை அடையாளப் படுத்தலுக்குள் உள்ளாக்குவது உண்மை நிலைக்கு மாறானதையும் நோக்கப்படவேண்டும்.
இங்கு அகதிகளாக வந்துள்ள வம்சாவழியின மலை யகத் தமிழர்களில் இலங்கை குடியுரிமை இல்லாமல் நாடற்றவர்களாக பல ஆயிரக் கணக்கில் உள்ளனர்.
இதேவேளை ஈழத் தமிழ் அகதிகளுக்கும் இந்திய குடி யுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதில் மாறு பட்ட எண்ணமும் இல்லை.
தமிழகம் வந்திருக்கும் தமிழ் அகதிகள் அனைவரும் “சட்டவிரோதமாக குடியேறியவர்கள்” என இந்திய அர சின் நிலை என்பதால், “ இந்திய குடியுரிமை சட்டம் 1965 பிரிவு 5 மற்றும் 6 இன் படி அவர்கள் இயல்பான இந்திய குடிமக்கள் ஆகமுடியாது” இவர்கள் அனைவ ரும் இலங்கைக்கு திரும்பவேண்டியவர்கள்.என்பதே இந்திய அரசின் எண்ணம்.
“ 2007 ஆம் ஆண்டு நவம்பர்மாதம் 7ஆம் நாள் தமிழ் நாடு அகதிகள் மறுவாழ்வு ஆணையத்தின் ஆணையர் மூலமாக மத்திய அரசாங்கத்தின் அறிவுறுத்தலின் பேரில் இலங்கை அகதிகளின் இந்திய குடியுரிமையை கோரும் விண்ணப்பங்களை பரிசீலிக்கவேண்டாம் என்று அன்றைய அரசு வலியுறுத்தியது, இன்றும் அது நடை முறையில் உள்ளது.
திருச்சி கொட்டப் பட்டு முகாமில் உள்ள 65 பேர்கள் இந்திய குடி யுரிமைகோரி தொடர்ந்த வழக்கில் கடந்த 2019 ஜீன்17ஆம் நாள் சென்னை உயர் நீதி மன்றத்தின் மதுரை கிளையில், நீதிபதி G.R சுவாமிநாதன் அவர்க ளால் வழங்கப்பட்டத் தீர்ப்பில் “குடியுரிமை கோரும் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை அளிக்க பரிசீலிக் கும்படி அரசுக்கு உத்தரவிட்டார்.. ஆனால் மத்திய அரசின் உத்தரவை திரும்பப் பெறாதவரையும் குடியுரிமை கோரும் மனுக்களின் மீது சம்பந்தப் பட்ட அரசு துறையினரால் நீதிமன்றத்தின் உத்தரவையும் நிறைவேற்ற முடியாத ஒரு நிலையும் தொடர்கின்றது.
. குடியுரிமை வழங்குவதில் ஏற்படும் இது போன்ற சட்டத்தடைகளைப் பற்றிய கேள்விகள் மக்கள் மன்ற த்திலும், எழுவதில்லை.. .தமிழர் நல அமைப்புகளின் செயல் பாடுகளின் தாக்கங்களின் எதிரொலிப்புக்குப் பின்பே, கட்சிகளின் குரலும் வெளி வருகின்றன
மலைகளும் மலை சார்ந்த உற்பத்தியோடும் ஈடுபட்டு வருவதால்,. இந்திய வம்சாவழியினரை மலையகத் தமிழர்களாக கடந்த 1960 காலங்களிலிருந்து அடையா ளப்படத்தப்பட்டுவருகிறார்கள்.
இரண்டு நூற்றாண்டு வரலாற்றையும், குறிப்பிட்ட உற் பத்தியுடனும், பண்பாடு, மொழி, பழக்க வழக்கங்களி லும் தனித்த அடையாளத்தை கொண்டுள்ள தங்களை மலையகத் தமிழர் என்றும், இலங்கையில் தேசிய இனங்களில் ஒன்றாக தங்களை அங்கிகரிக்கும் படி யான கோரிக்கையும், அண்மை காலமாக அரசிடம் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. எனவே,மலையகத் தமிழர் என்ற சொல் இலங்கை வாழ் இந்திய வம்சா வழியினரையே குறிக்கும்.
புலம் பெயர்வுகள்
பத்தொன்பதாம் நூற்றாண்டில், பிரிட்டிசாரின் ஆட்சி காலத்தில் விதிக்கப்பட்ட நிலவரி போன்ற வரிவிதி ப்புகளின் பாதிப்புகளும். நாட்டில் நிலவிய கொடும் பஞ்சமும், இந்திய குடிகளை பல்வேறு நாடுகளுக்கு புலம்பெயர செய்தது
. காலனிய ஆட்சி யாளர்கள், தங்களின் காலனிய நாடுகளில் தொடங்க உள்ள பணப்பயிர் உற்பத்திக்காக தமிழகத்திலிருந்தும் கூலிகளாக மக்களை அழைத்துச் சென்றனர். அன்று நாட்டில் நிலவிய பஞ்சத்தையும் ஐரோப்பியர்கள் பயன்படுத்திக் கொண்டனர்..
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கமுதல் தமிழக த்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் புலம் பெயர்வுகள் நிகழ்ந்தன..
இலங்கை மலைப்பகுதிகளில் தமிழர்களின் நிரந்தர குடி அமர்வுகளும் பிரிட்டிசாரின் ஆட்சி யின்போதே நடைப் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது..
1817.ஆம் ஆண்டில்.இலங்கையில் உள்ள மலைப் பகுதிகளுக்குச் செல்ல, புதிதாக சாலைகளை அமை ப்பதற்காகவும் தேவையான கட்டுமானப் பணிகளை தொடங்குவதற்காகவும், 5000 ஆயிரம் பேர்கள் ஒப்பந் தம் மூலம் அழைத்துச் செல்லப் பட்டுள்ளதாக பதிவு கள் உள்ளன.
1820 களில், மலைபகுதிகளில் உள்ள பெருங் காடுகளை அழித்து காப்பித்தோட்டங்களை உருவாக்க இரண்டா வது முறையாக தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கா னோர், கப்பல் மற்றும் படகுகள் மூலம், தரகர்களால் அழைத்துச் செல் லப்பட்டார்கள்,
1820 காலங்களில் ஆயிரக்கணக்கில் சென்றவர்கள், 1843 ஆம் ஆண்டு முதல் 1867 வரையும் 1446407 பேர்கள் தமிழக கிராமங்களிலிருந்து புலம் பெயர்ந் துள்ளார்கள். இதில் 839897 பேர்கள் மீண்டும் நாடுதிரும்பி யுள்ளதாக புள்ளி விபரம் கூறுகின்றன .(land and caste in south india ஆசிரியர் தர்ம குமார்)
காப்பி உற்பத்தி காலத்திலேயே தொடங்கப் பட்ட தேயி லை உற்பத்தி, இருபதாம் நூற்றாண்டின் தொடக் கம்வ ரையும் அதன் சாகுபடியின் பரப்பு 4,26,816ஏக்கராக அதி கரித்திருந்தன.இந்த காலத்தில் தொழிலாளர்களின் பற்றாக்குறையும் நீடித்தன. இதை தீர்க்கவே,
1904ஆம் ஆண்டில்.’சிலோன் தோட்ட அதிபர்கள் சங்கம்’ தமிழகத்தில் திருச்சிராப்பள்ளியை மையமாகக்கொ ண்டு சிலோன் லேபர் கமிசன் (ஆணையம்) ஒன்றை ஏற்படுத்தியது.
இக்கமிசன் திருச்சி, சேலம்,மதுரை, ஆற்காடு ஆகிய மாவட்டங்களில், இருபத்தி ஏழு இடங்களில் ஆள்தி ரட்டும் மையங்களை கொண்டிருந்தது.
தேயிலை தோட்டங்களில் வேலைசெய்ய இலங் கைக்கு செல்கின்றவர்கள் தங்கிச் செல்லவும், மரு த்துவ பரிசோதனைக்கு உட்படுத்தவும் மண்டபத்தில் முகாம் அமைக்கப்பட்டது.
இந்தமுகாமில் தங்கிச் சென் றவர்களின் சந்ததினரை 1964ம் ஆண்டு தொடக்கம் முத்தல் வரவேற்றதுடன் இலங்கையில் நடந்த போரால் பாதிக்க ப்பட்டு தமிழக ம்வந்துள்ள அகதிகளையும் வரவேற்கும் முகாம்களில் ஒன்றாகவும் இன்று அடையாளப் படுத்தப்பட்டு வருகிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடக்கம் முதல், தனது தாயக மண்ணிலிருந்து குடிபெயர நிர்பந்திக்க வைத்த அவல நிலை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையும் தொடர்ந்துள்ளன.
காப்பி பயிர் அழிவுக்குமுன்பே அறிமுகமான தேயி லை, மற்றும் இரப்பர் உற்பத்தியிலும், காப்பி உற்பத் தியில் ஈடு படுத்தப்பட்டவர்களின் சந்ததியினர்ரையே ஐரோப்பியர் கள் பயன்படுத்தினார்கள்.
1860ஆம் ஆண்டு களில் தேயிலை பயிர் உற்பத்தி ஆர ம்பித்தப் பின்பு, அதிக எண்ணிக்கையிலான தொழிலா ளர்கள் இலங்கை மலைப்பகுதிகளில் நிரந்தர மாக தங்களின் இருப்பை தொடர நிர்பந்திக்கப் பட்டார்கள்.
தொடக்க காலத்தில் சென்றவர்களில் பலர் மீண்டும் தனது தாய் மண்ணுக்குத் திரும்பவில்லை..அந்த மண் ணோடு மண்ணாகிப் போனதால் இவர்களின் சந்ததிகள் மலைபகுதியோடு இரண்டற மானார்கள்
பெருந் தோட்ட உருவாக்கத்திற்காகவும், நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகளிலும் தங்களது உழைப்பையும் உயி ரையும் வழங்கிய இவர்களின் உழைப்பு,ஒரு நூற்றாண் டை கடந்துள்ள தருணத்தில், தேசியத்தைப்ப ற்றிய கேள்விகளை, இவர்களின் இரண்டாம் மூன்றாம் தலை முறைகள் எதிர்கொள்ள நேர்வதை காணலாம்.
1927ஆம் ஆண்டு டொனமூர் ஆணைக்குழு அறிமுகப் படுத்திய. சர்வசன வாக்குரிமை 1928 ஆம் ஆண்டில் சட்டநிரூபணசபையில் முன்மொழியப்பட்டு சட்டவடி வம்பெற்றது.. இந்த சட்டத்தால் பல்லாயிரகணக்கான இந்திய வம்சாவழி இனத் தமிழர்களும் வாக்குரிமை யைப் பெற்றனர்.
நாட்டின் பொருளாதாரத்தின் முகெலும்பாக உள்ள இவர்களுக்கு வாக்குரிமை வழங்குவதை சிங்கள தலைவர்கள் கடுமையாக எதிர்த்தனர் இந்த எதிர்ப்பு அத்துடன் ஓய்ந்து விடவில்லை..இன எதிர்ப்பு, இயக்கமாக வடிவெடுக்கத் தொடங்கின.
1948ஆம் ஆண்டில் நாடுவிடுதலையடைந்ததும், நாடா ளுமன்றத்திற்கு நடைப் பெற்ற பொதுத் தேர்தலில், இந் திய வம்சாவழி இன மலையகத்தமிழர்களால் நாடாளு மன்றத்திற்கு ஏழு தமிழ் உறுப்பினர்கள் தேர்வுசெய்யப் பட்டார்கள்
காலனிய ஆதிக்கத்திலிருந்து இலங்கை விடுதலைப் பெற்ற பின்பு, ஆட்சி அதிகாரத்திற்கு வந்த அரசு, 1948 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் குடியுரிமை தொடர்பான சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி யது.இந்திய வம்சாவழியினர் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்புக்கு இந்த சட்டம் வழிவகுத்த துடன் மகலையகத் தேசிய இன உருவாக்கமும் இடையறுக் கப்பட்டது.
.1940 காலம்முதல், இந்திய வம்சாவழியினர் தொடர் பாக இந்திய, இலங்கை தலைவர்களுக்கிடையே, நட ந்த உரையாடலும்,கடிதங்கள்வாயிலான பறிமாற்றங் களும் நடந்தன..ஆனால், ஜவகர்லால் நேரு அவர்க ளின் காலம்வரையும் சட்ட ரீதியிலான தீர்வு எதுவும் இதில் எட்டப்பட வில்லை.
உடன்படிக்கை
1964 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ம் நாள் இந்திய பிரத மர் லால்பகதூர் சாஸ்திரி அவர்களும் இலங்கை பிரத மர் சிரிமாவோ பண்டாரநாயக்க ஆகியோருக்கிடையில் நடைபெற்ற உடன்படிக்கையால், 1948 முதல் 1964 ஆம் ஆண்டு வரை பதினாறு ஆண்டுகளாக நாடற்ற நிலை யில் உள்ள பத்துலட்சம் பேர்களின் குடியுரிமை பிரச்சி னை தீர்வுக்கு வந்தன.
இருநாடுகளும் செய்துகொண்ட உடன்படிக்கையில் சம் பந்தப்பட்ட மக்களின் விருப்பங்களை அல்லது ஆலோ சனைகளுக்கு இடமளிக்க வில்லை. இவர்கள் பண்ட ங்களாக மட்டும் பார்க்கப்பட்டார்கள். .
1964ஆம் ஆண்டு உடன்படிக்கையை மலையகத் தமி ழர் வரலாற்றில் சிரிமா சாஸ்திரி உடன்படிக்கை என .அடையாளப் படுத்தப் பட்டு வருகிறது.
இந்த உடன்படிக்கையின்படி 9,75,000 பேர்கள் நாடற்ற வர்களாக இனங்காணப்பட்டனர். இதில் 5,25,000 பேர்க ளை இந்திய அரசு ஏற்றுக்கொள்வது என்றும், 3,00,000 லட்சத்தை இலங்கை அரசு ஏற்றுக்கொள்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது. . 1974 ஆம் ஆண்டு நடந்த இந்திரா - சிரிமா உடன்படிக்கையின் மூலம் 1,50,000 லட்சம் மக்களை இருநாடுகளும் 75,000 என ஏற்றுக் கொள்வ தென்று முடி வானது.
1964 உடன்படிக்கை நடைமுறைக்கு வரும் நாளிலிரு ந்து பதினைந்து ஆண்டுகளுக்குள் இரு நாடுகளும்இந்த இரண்டு உடன்படிக்கையையும் நிறைவேற்றுவதென்று உடன்பாட்டுக்கு வந்தனர்.. .
. இந்தியாவிற்கு ஏழுபேர்கள் இலங்கையிலிருந்து குடி பெயர்ந்து சென்றால், இலங்கையில் உள்ள இந்தியர் நான்கு பேர்களுக்கு இலங்கை குடியுரிமை வழங்கப்ப டும் என்பது, உடன்படிக்கையின் விதிகளில் ஒறாகும்
1966 ஆம் ஆண்டு முதல்,மன்னாருக்கும் இராமேஸ் வரத்துக்கும் இடையில் நடைபெற்ற கப்பல் போக்கு வரத்து மூலம், தாயகம் திரும்புவோர் என்ற அடையா ளப் படுத்தலுடன் .இவர்கள் தமிழகம் வரத் தொடங்கி னார்கள். இப்படி வேலை வாய்ப்பைப் பெற்று வந்தவ ர்களில் ஒருபகுதியினர் கேரளம்,கர்நாடகம்,ஆந்திரா, அந்தமான் போற்ற இடங்க ளுக்கும் குடும்பம் குடும்ப மாக அனுப்பப்பட்டார்கள்.
1976 ஆம் ஆண்டு களில் வடக்கில் தொடங்கிய, தனி ஈழம் கோரிய ஆயுதப் போராட்டம். 1983ஆம் ஆண்டு காலத்திற்குப் பின்பு, தீவிர மடையத் தொடங்கியதால் இரு நாடுகளுக்கிடையிலான போக்குவரத்தும் இடை நிறுத்தப்பட்டன.
உடன்படிக்கையின்படி இந்தியாவிற்கு வரவேண்டிய ஆறு லட்சம் பேர்களில், இந்திய குடியுரிமைக்கு விண் ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 506000பேர்கள். இதில் 4,22,000 பேர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட் டது. இந்திய குடியுரிமையும் இந்திய கடவுசீட்டையும் பெற்றிருந்த 80000 ஆயிரம் நபர்கள் கப்பல் நிறுத்தப்பட் டதால், இலங்கையிலேயே தங்கிவிட்டனர்.
1984 ஆம் ஆண்டு இறுதி வரையும் 4,45,519. பேர்களும் கப்பல் நிறுத்தப் பட்ட பின், வந்தவர் களையும் கணக் கிட்டால் 4,59,049 பேர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இதில் 3,33,482 பேர்கள் உடன்படிக்கையின் படியும், 1966முதல் இறுதியாக தாயகம் திரும்பிய வரையும் இவர்கள் மத்தியில், ஏற்பட்ட இயற்கை அதிகரிப்புக்கு உட்பட்ட 1,25,567 பேர்க ளும் குடியுரிமை பெற்றனர்.
இரண்டு உடன்படிக்கையின் படியும் இந்தியா வந்துசேர வேண்டிய 6,00,000 பேர்களில் 3,33,482 பேர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். மற்றவர்கள் இலங்கையில் தங்கிவி ட்டனர்.
குடியுரிமை
1988 ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றதில் கொண் டுவரப்பட்ட 39 ஆம் இலக்கசட்டம்;1986ஆம் இலக்க திருத்தத்தின் மூலம் இந்திய கடவு சீட்டைப் பெற்றி ருந்த 80000,பேர்களும்,. இந்திய குடியுரிமைக்கு விண் ணப்பிக்காமலிருந்த 94000பேர்களுக்கும். மேற்குறித்த திருத்த சட்டத்தின்படி இலங்கை அரசால் இலங்கை குடியுரிமை வழங்கப்படடது.
2003 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 35ஆம் இலக்க சட்டத்தின் படி இலங்கையில் நாடற்றவர்களாக இரு ந்த அனைவரும் இலங்கையர்களுக்கான குடியுரிமை யைப் பெறும் வாய்ப்பை இலங்கை அரசு உருவாக் கியுள்ள,தையும் நினைவு கூறத்தக்கது. .
தனி ஈழக் கோரிக் கைக்கு. எதிர் விணை யாற்ற எண் ணிய அரசு 1977ஆம் ஆண்டு தென் மேற்கு பகுதி களில் உள்ள நகரங்களில் வாழும் தமிழர்கள் மீதும், கிராமங் கள், மற்றும் தோட் டப்பகுதிகளில் உள்ள மலையகத் தமிழர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டன.
பாதிப்பின் கடுமையை உணர்ந்த ஈழத் தமிழர்களின் தலைவர்கள். ஈழப்பகுதியில் குடியேறும்படி இந்திய வம்சாவழி இன மலையகத் தமிழர்களுக்கு அழைப் பைவிடுத்தனர்.
இன வன்முறைகள் நடந்த 1977, 1981, 1983 காலப் பகுதிகளில்,மலையகப் பகுதியிலிருந்து புலம்பெயர்ந்த. பலரும் ஈழமக்களின் தாயகப்பகுதியான வடக்கு, கிழக் கை நோக்கிச் செல்லத்தொடங்கினார்கள்.
வன்னி நிலப்பகுதியில்யில் குடியேறியப்பலரையும் பலவந்தமாக மீண்டும் மலைய கப்பகுதிக்குள் கொண் டுவந்துவிட்டது இராணுவம். இவ ர்களிடமிருந்து தப்பிய பலரும் வன்னிப்பகுதியிலேயே தங்கிவிட்டனர்.
தமிழீழத்துக்கான ஆயுதப்போராட்டம், தீவிர மடைந் தவேளை எதிர் விணையாற்றும் அரசுப்படைகளின் தாக்குதலும் தீவிர மடைய ஆரம்பித்தன..
.பாதுகாப்பு இடம் என்று எண்ணி செனற மலையகத் தமிழர்கள். கடும் தாக்குதலை வன்னி நிலப்பகுதியில் எதிர்கொள்ள நேர்ந்தது. திக்கற்று தவித்த நிலையில், இவர்களின் விழிகளுக்கு, தென்பட்டது பொங்கி எழும் கடலும். படகுகளும். படகோட்டிகளும்,
அனைத்தையும் இழந்து தமிழக கடல் எல்லைக்கு அக திகளாக வந்துசேர்ந்த. பல்லாயிரக் கணக்காணவர்கலு க்கு தமிழக அகதிகள் முகாம்கள் அரவணைத்துக்கொ ள்ள, மத்திய மாநில அரசுகள் முன்கை நீட்டின.
இதேவேளை, பாதிக்கப்பட்ட மலையகப் பகுதிகளிலிரு ந்து பயண ஆவணத்துடன் கப்பல், (1984 வரையும்) மற் றும் விமானங்களில் வந்த பலரும் பல மாவட்டங் களில்தங்கினர்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பின்பு முகாமிற்கு வெளியில் உள்ள அகதிகள்,தங்களது இருப்பை தொடர்வதற்கு, மாவட்ட காவல் துறை அலு வலகத்தில் தங்களது பெயர்களை பதிவுசெய்யும் படி அரசு கோரியது.
இலங்கை அரசின் நிலை!.
முகாமில் உள்ள பலர், சிரிமா – சாஸ்திரி உடன்படிக் கையின்படி சட்டபூர்வமாக இந்நாட்டுக்கு வந்து சேர விருந்த நிலையில் தங்களது பயண ஆவணங்களை வன்முறையின் போது இழந்து விட்டதாகவும் கூறு கின்றனர் இவர்கள் தொடர்பாக கடந்த 2007ஆம் ஆண் டில் இலங்கை அரசால் மேற்கொண்ட ஆய்வு பின்வரு மாறு கூறுவதை நோக்கலாம்.
“தமிழ்நாட்டில் அகதி முகாம்களில் உள்ள இந்திய வம்சாவழியினரான ஆட்களுக்கு இலங்கை பிரசா உரி மையை வழங்கும் பொருட்டு 2003 ஆம் ஆண்டில் 35 ஆம் இலக்க பிரசா உரிமை சட்டத்தை திருத்துவதற்கு ஏனைய வசதிகளும் ஏற்பாடு செய்வதற்குமான பாரா ளுமன்ற தெரிவு குழுவை இலங்கை நாடாளுமன் றம்..அரசியல் கட்சி பிரதிநிதிகளை கொண்ட 22 பேர் அடங்கிய குழுவை கடந்த 2007 ஆகஸ்ட் 21 ஆம் நாள் அமைத்தது.” (இலங்கை பாராளுமன்ற தொடர் இல6)
இந்த குழுவின் அறிக்கையில் “இலங்கையில் பிரசா உரிமையைப் பெற முடியாதுள்ளவர்களும் எமது நாட் டுப் பிரசா உரிமைக்காக கோரிக்கை விடுத்துள்ளவர் களும் தற்போது “நாடற்றவர்களாக” உள்ளவர்களு மான ஏறத்தாள 28,500 பேர்களுக்கு பிரசாவுரிமையை வழங்க இயலுமாகக் கூடிய விதத்தில்” என, அறிக்கை குறிப்பிடுகிறது.
“2008 பெப்ரவரி 14 அன்று உள்ளவாறு தமிழ் நாட்டி லுள்ள 117 முகாம்களில் 95,219 இலங்கை அகதிகள் வசித்து வருவதாகவும் அவர்களுள் 28489 பேர்கள் நாடற்றவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதா கவும் சென்னைக்கான இலங்கைப் பிரதி உயர் ஸ்தா னிகர், குழு முன்னிலையில் தெரிவித்தார்” (பாராளுமன்றத் இலங்)தொடர் இல.06 ப.
தமிழகத்தில் அகதிகள் முகாம்களில் உள்ள 28489பேர் கள் நாடற்றவர்கள் என்பதை இலங்கை நாடாளு மன் றத்தால் அமைக்கப்பட்ட பிரதிநிதி குழுவால் இனம் காணப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.
எனவே இலங்கை பிரதிநிதி குழுவால் நாடற்ற வர்கள் என்றே அடையாளப்படுத்தப் பட்டிருப்பதால், இதில் சிரிமா- சாஸ்திரி உடன்படிக்கைக்கு உட்பட்டவர்களும், உட்படுத்தவேண்டி உள்ளவர்களும், தமிழக முகாம் களில் தற்பொழுது அகதிகளாக உள்ளனர் என்பதை இந்த அறிக்கை உறுதிபடுத்தி உள்ளதென்றே கூறலாம்.
1964ஆம் ஆண்டு உடன்படிக்கையின் படி இந்திய குடியு ரிமையைப்பெற்று, இந்தியாவரவேண்டிய 6,00,000லட்சம் பேர்களின் 3,33,482பேர்கள் மட்டுமேவந்துள்ளநிலையில், ஆவணங்கள் ஏதுமின்றி முகாம்களின் உள்ள இந்திய வம்சாவழி இன மலையகத் தமிழர்களின் குடியுரிமை குறித்து, 1964ஆம் ஆண்டு உடன்படிக்கையோடு இணைத்து அணுகவேண்டும்.
1964ஆம் ஆண்டு உடன்படிக்கையின்படி இவர்கள் இந் திய குடியுரிமையை கோருவது சாத்தியமா? ஆவணங் கள் ஏதும் இவர்களிடம் இல்லாத நிலையில், எப்படி கோருவது.? என்ற வினாக்களுக்கு இலங்கை நாடாளு மன்றம் அமைத்திருந்த குழுவின் ஆய்வறிக்கையை ஆவணமாக நடுவன் அரசு ஏற்பதைக் குறித்து பரிசீலி க்கவேண்டும்
நாடற்றவர்களாக முகாம்களிலும், முகாமிற்கு வெளியி லும்,,காவல் நிலையங்களிலும் பதிவு செய்துவரும் இந் திய வம்சாவழியினரிடம் குடியுரிமை குறித்து அறிய மத்திய மாநில அரசுகள் முன்வரவேண்டும்!.
உடன்படிக்கையின படி இந்திய குடியினராக இலங் கையிலிருந்து இந்தியா வரவிருந்த சுமார் 2,00000லட்சம் பேர்களுக்குமேல் இலங்கை அரசும் குடியுரிமையை வழங்கி யுள்ளதால், வன் முறைக்கு உள்ளாகி அகதிகளாக வந்துள்ள இந்திய வம்சாவ ழியினருக்கு, இலங்கை அரசு மேற்கொண்டது போல், இந்திய குடியுரிமையை இவர்களுக்கு வழங்குவதற்கான ஞாயங்கள் மட்டுமல்ல, கடப்பாடும் ஒன்றிய அரசுக்குஉண்டு என்பதை இத்தருணத்தில் நினைவு படுத்துவது முக்கியமாகும்.
இலங்கையிலிருந்து கப்பல் மற்றும் விமானங்கள் மூலம், இலங்கை குடிகளுக்கான பயண ஆவணங்க ளோடு,1983 காலம்முதல் தமிழகத்தில் தஞ்சம் அடைந் துள்ள இந்திய வம்சாவழியினரும், இவர்களின் வாரிசு களும், இங்குள்ள தங்களது சொந்தங்களோடும் திரும ணம் போன்ற உறவோடும் இரண்டர கலந்துள்ளதால், இவர்களின்கருத்தறிந்து இவர்களின் விருப்பத்தையும், மத்திய, மாநில அரசுகள் நிறைவு செய்யும் என நம்பு வோம்.
குடியுரிமை குறித்து எழும் வாதம்.
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக ஊடகங்க ளில் நடந்த விவாதங்களின்போது நான்கு லட்சம் வம்சாவழியின தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட் டுள்ளது என்றவாதம் சிலரால் முன்வைக்கப்பட்டது. குடியுரிமை வழங்கு வதற்கான புறக்காரணங்களையும் அன்றைய ,ஒன்றிய அரசுக்கும் ஏற்பட்ட நிர்பந்தம் என்ன என்பதையும் அறிந்தால் 4,00000 லட்சத் தினரு க்கு வழங்கிய குடியுரிமைக்கான விடையைப் பெறலாம்.
இலங்கை வாழ் இந்தியர்கள் தொடர்பான பிரச்சினை யில் தீர்வுகாண 1939ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸ். பண்டிதர் நேருஅவர்களை சிறப்பு தூதுவ ராக இலங்கைக்கு அனுப்பியது. இலங்கையில் உள்ள அரசியல் தலைவர்களிடையே நடைபெற்ற உரையாட லுக்குப்பின்பு, முறைசார்ந்த முதலாவது உரையாடல் கள் 1940 நவம்பர்மாதம் இரு நாடுகளின் பிரதிநிதிகளி டையே டில்லியில் தொடங்கியது.
இந்த கலந்துரையாடலுக்குப் பின்பு, 1941ஆம் ஆண்டில் இருநாட்டு அரசுகளின் தூது குழுவினரின் சந்திப்பு நிக ழ்ந்தது. இதில் எந்த ஒருமுடிவும் எட்டப்படவில்லை.
இரண்டாம் உலகப்போர் காரணமாக, சந்திப்புகள் பின் னடைவை எதிர்கொண்டது.இருநாடுகளின் விடுதலைக் குப் பின்பு. இருநாட்டு பிரதமர்களுக்கிடையே நடைப் பெற்ற உரையாடல்களில்,“இலங்கையில் உள்ள இந்திய வம்சாவழியினமக்களை இலங்கை உள்ளீர்த்து கொள்வ தற்கு இயலுமான எல்லோரையும் உள்ளீர்ப்பது தனது விருப்பமாகும்” என இலங்கை பிரதமர் டி.எஸ்.. சேன நாயக்க குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை “பெருந்தொகையிலான இந்தியர்களை தனது பொருளாதாரத்துக்குள் ஈர்த்துக் கொள்வது இல ங்கைக்கு பெரும் சிரம்மானதாக இருக்கும்” என்றும் குறிப்பிட்டார்..
1948,ஆம்ஆண்டில் செப்டம்பர் 08 மற்றும் ஒக்டோபர் 12 நாள் செப்டம்பர் 21 ஆம் நாட்களிலும் இலங்கைபிரத மரால் இந்திய பிரதமருக்கு அனுப்பிய கடிதங்களுக்குப் பிறகு,1948 செப்டம்பர் 08 ஆம் நாள் இந்திய பிரதமரால் இலங்கை பிரதமருக்கு எழுதிய கடிதத்தில். “இலங்கை வாழ் இந்தியர்களுக்கு பிரஜா உரிமை அளித்து தங்கள் நாட்டில் உள்ளீர்ப்பதற்கான சட்டவாக்கத்தை மேற்கொ ள்வதற்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என தனது கடிதத்தில் கோரியிருந்தார்.
1948 ஆம் ஆண்டு வாக்குரிமை பறிப்புக்குப் பிறகு 1949இல் அறிமுகப்படுத்திய இந்திய பாக்கிஸ்தா னியர் பிரசாவுரிமை சட்டத்தின் கீழ் இலங்கை குடியுரிமை கோரி 8,25,000 லட்சத்தினர் விண்ணப்பித்தனர். இதில் ,675000 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
இதை ஏற்க மறுக்கும் வகையில் 1953இல் நிகழ்ந்த மகா நாட்டில் கலந்து கொண்ட இலங்கை தேசாதிபதி சேர். ஓ. ஈ.குணதிலக்க, பிரதமர், திரு, டட்லி சேனநா யக்கா ஆகியோரோடு நடந்த கலந்துரையாடலின் போது. “766000 இந்திய வம்சாவழி தோட்டமக்கள் அனைவரையும் இலங்கை பிரைஜைகளாகவே இந்திய அரசு கருதுகிறது” என்ற நிலைப்பாட்டை இலங்கைக் கான இந்திய. தூதுவர் அறிவித்தார்.இந்த அறிவிப்புக்கு பின்பு, இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு வந்து செல் லும் இந்தியர்களின் பயணத்திற்கும் 1954 முதல்இந்திய அரசால் தடையும் விதிக்கப் பட்டது.
1953 ஆம் ஆண்டு ஜீன்மாதம் லண்டனில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட இலங்கை பிரதமர் டட்லி சேனநாயக்கா, இந்திய பிரதமருடன் நடத்திய கலந்து ரையாடலில், “4,00000 பேர்களை இலங்கை பிரஜைக ளாக பதிவுசெய்வதாகவும்.3,00000 பேர்கள் அல்லது இத ற்கு அதிக எண்ணிக்கையில் இந்தியா ஏற்றுக்கொள்ள ப்படுவதுடன் கட்டாயம் இந்தியாவிற்குஅனுப்பப்படுதல் வேண்டும்” எனவும், இலங்கை தனது நிலையை வெளி ப்படுத்தியது.
“இலங்கைப் பிரஜாவுரிமையும் நிரந்தர வதிவிட அனு மதியும் வழங்கப்படவேண்டியவர்களின் மொத்த எண் ணிக்கை 7,00000ஆக அதிகரிக்கப்படுதல் வேண்டும்!.எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இந்தியாவிற்கு கட்டாயமாக திரு ப்பி அனுப்பலாகாது”. என இந்திய பிரதமர் தனது நிலையை அறிவித்தார்.
இலங்கை வாழ் இந்திய வம்சாவழி இனர் அனைவரு க்கும் இலங்கை குடியுரிமை வழங்கவேண்டும் என்ப தில், இலங்கை தரப்பினரிடம் இந்தியா வலியுறுத்தியே வந்துள்ளதை அறிய முடிகிறது..
பண்டிதர் நேரு அவர்களின் மரணத்திற்குப் பிறகு 1964இல் சாஸ்திரி சிரிமா உடன்படிக்கை அவசர கதியில் நிறைவேறியது.
இரு நாடுகளுக்கிடையே 1940களிலிருந்து, தொடர்ந்து வந்துள்ள பிரச்சினைக்குத் தீர்வை எட்டுவது அவசி யம்.ஆனால், தீர்வு ஞாயப்படி நடந்துள்ளதா?
இந்திய பிரதமர் ஜவகர்லால் நேரு இறந்து இரண்டு ஆண்டுகளில் இந்த உடன்படிக்கை கையெழுத்தானது. மூன்று லட்சம் பேர்களை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு மாறாக 6,00000லட்சத்தின ரை ஏற்றுக்கொள்ளும் சம்மதிப்புக்கான காரணம்?
மூன்று நான்கு தலைமுறைகளுக்கு மேலாக இலங் கை மண்ணில் தங்களின் உழைப்பை வழங்கியவர் களுக்கு எந்த ஒரு சன்மானமோ, அல்லது ஈவுத்தொ கையோ வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இந்திய தரப்பிலிருந்து முன்வைக்கப் படாமலேயே உடன் படிக்கை நிறைவேற்றப்பட்டது..
சூழலும் ஒரு காரணம்!
நேரு அவர்கள் எடுத்த நிலைப்பாட்டுக்கு மாறாக உடன்படிக்கை நிறைவேறக் காரணம்? அன்றைய இந்தியாவில் நிலவிய புறச் சூழல் ஒரு காரணம் என கூறப்படுவதை நோக்கலாம்.
1962ஆம் ஆண்டில் இந்தியா சீனயுத்தம். நடைப்பெற்ற காலத்திற்குப் பின் தெற்காசிய நாடுகளுடன் சுமுக உற வை மேம்படுத்திக் கொள்ள இந்தியா விரும்பியது.
“அண்டை நாடுகளோடெல்லாம் பிரச்சினைகளால் பிணக்குற்றிருந்த இந்தியா, குறைந்த பட்சம் தனது ஒரு அண்டை நாட்டோடாவது ஓர் ஒப்பந்தம் செய்து முடிக்க ஆவலாயிருந்தது.” என இலங்கைகை கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைவரும் தொழிற்சங்களின் தலைவர்களில் ஒருவருமான காலம் சென்ற திரு, சண்முகதாசன். குறிப்பிட்டார்
“இந்த ஒப்பந்தத்தை செய்வதற்கு இந்திய இலங்கை அரசாங்கங்களுக்கு சொந்த காரணங்களும் இருந்தன. புகழ் பெற்ற தனது கணவன் கையிலிருந்து கூட நழுவிய இப்பிரச்சினையை தேர்தலுக்கு சற்று முந்தய காலத்தில் தீர்ப்பதன் மூலம் சிங்கள இன வெறிக்கு ஈடுகொடுத்து வெற்றிவாகை சூட விரும்பினார் சிரிமாவோ பண்டார நாயக்கா” என்பதையும் இவர் பதிவு செய்தார்..
இரண்டு நாடுகளின் நலனோடு சம்பந்தப்பட்ட இந்த உடன்படிக்கையில் அன்றைய இந்தியாவின் பலவீனத் தை இலங்கை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொ ண்டது. இலங்கைவாழ் மலையகத் தமிழர்களின் நல னோடு மட்டுமல்ல ஈழத் தமிழர்களின் நலனோடும் ஒப்பிடுகையில் இந்த உடன்படிக்கை தொலைநோக்குப் பார்வையுடன் இது நடந்தேறவில்லை.
.1964 ஆம் ஆண்டு உடன்படிக்கையை தனக்கு சாதக மாக இலங்கை அரசு பயன்படுத்திக்கொண்டது போல வே ஈழ விடுதலைப் போராட்டத்தை முற்றாக அழித் தொழிக்கவும் இந்திய அரசை பயன்படுத்திக்கொண்ட தையும், அவதானிக்கலாம்.
இந்தியாவிற்கு வரவிரும்பியவர்களை மட்டும் இந்தி யா ஏற்கும் என்ற நிபந்தனையோடு உடன்படிக்கை ஏற் பட்டிருப்பின், மலையகத் தமிழர்கள்சிதைக்கப்படுவதை தடுத்திருக்கலாம்.
1920களில் இந்திய வம்சாவழியினருக்கெதிராக தோன் றிய எதிர்ப்பு, ஓய்ந்து விடவில்லை.மதத்தின் மூலம் இனவாதத்தை அரசியல் களத்திலும் முன்னிலைப் படுத்தியது. மலையகத் தமிழர்களுக்கு உள்ளாட்சி தேர் தலில் பங்கெடுக்கும் உரிமையை வழங்க முடியாது என்ற சட்டத்தை 1937இல் நிறைவேற்றியது இவர்களின் இனவாதப் பசி இத்தோடு தீரவில்லை.1948ஆம்ஆண்டில் இவர்களின் குடியுரிமை பறிப்பதன் மூலமாக தற்காலிக மாக ஓய்வு கொண்டது.
இரண்டு மூன்று தலைமுறையினரின் உழைப்பு இலங் கை பொருளாதார வளர்ச்சிக்கு முதன்மையானதாக இருந்தும், இவர்களை நாடு கடத்துவதில் குறியாக இருந்தவர்களுக்கு சாதகமான நிலையை தோற்றுவித் தது. உடன்படிக்கை..
மதத்திற்குளே இனவாதத்திற்கான கூர்வாளையும் கொண்டு, அரசியல் களமாடும் நாட்டில் வாழும் சிறுபான்மையினரின் எண்ணிக்கை குறையும் நிலை உருவாகும்போது, அவர்களின் அரசியல் பலமும் பலவீனப்படுத்தும் என்பதை கணக்கில்கொள்ளத் தவறியது அன்றைய நடுவண் அரசு,. .
இலங்கை சனதொகையில் இரண்டாம் நிலையில் இருந்த மலையகத் தமிழர்கள். உடன்படிக்கைக்குப் பின் நான்காம் இடத்திற்கு ஆக்கப்பட்டனர்.
அதேவேளை, ஒவ்வொரு மாவட்டங்களி லிருந்தும் இவர்கள் வெளியேறியதால், நாடாளுமன்றத் தெரிவி லும்,உள்ளாட்சி தெரிவிலும் தங்களுக்கான உறுப்பி ணர்களைத் தெரிவு செய்யும் பலத்தையும் இழந்தனர்.
தமிகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த உடன்படிக்கையை கண்டித்தது போலவே மலையக த்தை சார்ந்த தலைவர்களும், ஒப்பந்த கால தொடக் கத்தில் எதிர்க்கத் தவறவில்லை. இவை அனைத்தையும் மீறி ஒரு தலைப் பட்சமாக இது நடந்தேறிது
அன்றைய இந்தியா சந்தித்த புறச் சூழலின் தாக்கம் அதன் வெளியுறவு கொள்கையிலும், இது போன்ற உடன்படிக்கையிலும்,. கச்சைத் தீவை வழங்கியதிலும் வெளிப்பட்டது.
முழுமையாக நடைமுறையானால்….?
”இந்தியக் குடியுரிமைச் சட்டத் திருத்தம் 2019, தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (NPR) தேசிய குடியுரிமைப் பதிவேடு ( NRIC. ) இவற்றின் அடிப்படையில் பார்த்தால் குறிப்பாக இசுலாமியர்கள் ,இந்தியாவில் வசிக்கும் இந்திய வம்சாவழி இலங்கை மலையகத் தமிழர்கள் மற்றும் மழைவாழ் பூர்வக்குடிகள், ஆதிவாசிகள், கல்வி யறிவற்ற ஏழைப் பாமர்கள் என பல தரப்பு மக்களும் பாதிக்கப்படும் வகையில் இருக்கிறது”. (தமிழர்களின் பார்வையில் சரவணன் நடராஜன்) (இந்தியாவில் வசிக்கும் மலையகத் தமிழர்கள் என்பது உடன்படிக்கையின்படி தாயகம் திரும்பிய வர்கள்)
குடியுரிமை தொடர்பாக நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பையும் நோக்கலாம். “கடவுச் சீட்டு, பிறப்புச் சான்றிதழ், ஆதார் அட்டை இவைகள் மட்டுமே ஒருவரது குடியுரிமையை நிரூபிப்பதற்கான சான்றுகள் கிடையாது.”
“2013 இல் மும்பை உயர்நீதிமன்றத்தில் சொன்ன வைதான் இங்கு முக்கியம். இந்தியாவில் ஒருவர் பிறந்திருந்தால் மட்டுமே அவர் இந்திய குடிமகனாக கருதப்பட வேண்டியஅவசியமில்லை. ஏற்கனவே உள்ள சட்டத்தின்படி அவரது பெற்றோரும் இந்திய குடியுரிமையை பெற்வர்களாக இருத்தல் வேண்டும்: மேலும் அதனை அவர் சட்டப்படி நிரூபிக்க வேண்டும்.” என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது
மேலும் இதை உறுதிப்படுத்தும் வகையில், குவாஹட்டி உயர்நீதிமன்றம் குடியுரிமை தொடர்பான வழக்கில் வழங்கிய தீர்ப்பில் “பான்கார்ட், நில ஆவண ங்கள், வங்கி ஆவணங்கள், ஆதாரமாக எடுத்துக்கொள் ளமுடியாது. ஏற்கெனவே நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை பின்பற்றும்படியும் வலியுறுத்தி யுள்ளது (19-2-2020 இந்து தமிழ்)
எனவே இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம் முழு மையாக (CAA, NPR, NRIC. ) நடைமுறைக்கு வருமானால், 1964 உடன்படிக்கையின் படி,1966 ஆம் ஆண்டு முதல் இந்திய வம்சாவழியினத் தமிழர்கள் இந்திய குடிமக்க ளாக தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் குடியேற்ற ப்பட்டார்கள், இதில், வணிகக் கடன் பெற்ற 77,445, குடு ம்பங்களும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்க ளில் குடியேறினார்கள்.
மலைப்பகுதிகளில் நிலவும் காலநிலையோடு இவர் கள் பழக்கப்பட்டுள்ளதால், இவர்களுக்கேற்ற தொழில் வாய்ப்பும், சமவெளியில் நிலவும் காலநிலையும் ஒத்து ப்போகாமையால் வெவ்வேறு இடங்களை நோக்கி இட ம்பெயர்ந்தனர்.
தங்களின் வாழ்வாதாரத்திற்கான, தொழிலைப் பெற முடியாத பல்லாயிரக் கணக்கானவர்கள் எதிர்கொண்ட துன்பங்கள் எண்ணில் அடங்காது.
இதுவரையும் இவர்கள் எதிர்கொள்ளாத கால நிலையும்,, வேலை வாய்ப்பு கிட்டாமையாலும், ஏற்பட்ட மனசோர்வும், உளைச்சலும்,தொடர்ந்த நிலையில், போதிய ஊட்டச் சத்தையும் பெற முடியாமல் போனதல், பல்வேறு நோய்களின் பாதிப்புக்கும் உள்ளாகினர்.
தாங்கள் கொண்டுவந்த சிறு தொகையும் அரசு வழ ங்கிய வணிக கடனும், ஒவ்வொரு நாளும் கறைந்தது. தாங்கள் கொண்டு வந்த அனைத்தையும் இழந்தவர் களின் கையில் இறுதியாக எஞ்சியது, தங்களை இந்த மண்ணுக்கு கொண்டுவந்து சேர்க்கவும், புனர் வாழ்வு உதவிகளைப் பெறுவதற்குமான உள்ள குடும்ப அட்டை யும், கடவுசீட்டுமே
மகா பாரத காவியத்தில், தனது ராஜியம் அனைத்தை யும் துரியோதனனிடம் சூதாடி இழந்த தர்மரிடம் துரோ பதையை முன்நிறுத்தும்படி கேட்டதுபோல்.இவர்களின் நிலையை அறிந்த தரகர்கள், குறுக்கு வழியில் இதைப் பெறுவதற்காக முன்வந்தார்கள்.
வீடு கட்டித் தருவதாக வாக்குறுதி வழங்கினார்கள். ‘கண்ங்களைக் கட்டி காட்டில் விட்டது‘ போன்ற நிலையில் இருந்தவர்களுக்கு,இவர்களின் நம்பிக்கை தரும் சொற்கள் ஆறுதலாகவும், வழிகாட்டலாகவும் ஆனது.
இரண்டாவது தவணையாக உள்ள வணிகக் கடனை யும் பெற்றுத் தருவதாகக் கூறியவர்கள், தங்களின் ‘பெருந் தனத்தை‘ வெளிப் படுத்திக் கொள்ள 500, 600 ரூபா பணத்தையும் இவர்களுக்கு வழங்க முன் வந்தா ர்கள்..வஞ்சகத்தனத்தை அறியாதவர்கள் இரண்டு ஆவ ணங்களையும் வழங்கினார்கள்.
. துன்ப நிலையிலிருந்து விடுபட எண்ணிய வர்களு க்கு தங்களை இந்திய குடி மகனாகத் சட்டத்தின் கண் களுக்குள் அடையாளப் படுத்திக் கொள்ள இலங்கையி லிருந்து பயணித்த பயண ஆவணங்கள் இரண்டும், தலைமுறைகளை கடந்தும் எதிர்காலத்திலும் இது தேவை என்பதை எண்ணவில்லை.
..இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA) 2019, தேசிய மக்கள் தொகைப் பதிவேடு(NPR) மற்றும் தேசி ய குடியுரிமைப் பதிவேடு (NRIC) போன்ற சட்ட விதிகள் நடைமுறைக்கு வருமானால், தாயகம் திரும்பியவர்க ளும் தங்களது குடியுரிமையை உறுதிப்படுத்திக்கொள்ள இந்திய புனர்வாழ்வு துறையால் இலங்கையில் வழங் கப்பட்ட இரண்டு ஆவணங்களும்தேவை.
இந்திய குடிமகனாக அடையாளப்படுத்தவிருந்த இந்த ஆவணங்களை இழந்தவர்களின் நிலை என்னவாகும்? தாயகம் திரும்பி ஜம்பதுஆண்டுகள் கடந்தபின்பும், பாதுகாப்பாக இவைகளை வைத்திருக்க முடியுமா?
அதேவேளை, தாயகம் திரும்பியோரில், குடும்பத் தலைவர், தலைவியை இழந்துள்ள வர்களின் வாரிசு கள் NRIC, CAA போன்ற சட்ட நடை முறையை எதிர் கொள்ள நேரிடும் நிலையும் தோன்றும்..
தங்களது பெற்றோர்கள் தாயகம் திரும்பியுள்ள விபர ங்களை அறியாதவர்களும்,. பயண ஆவணங்களை பாதுகாக்கத் தவறிய வர்களும் உள்ளனர். இவர்களின் நிலைகுறித்தும், கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
ஆவணங்கள் ஏதும் இல்லாதவர்கள் விடையத் தில் தமிழக அரசும் என்ன முடிவை எடுக்கப் போகிறது?
1962 கால ங்களில் பர்மாவிலிருந்து பல்லாயிரக் கணக் காணோர் அகதிகளாக தமிழகம் வந்தார்கள்.இப்படி வந்தவர்களிடம் ஆவணங்களை எதிர்பார்ப்பது சாத்திய மா? இவர்களின் சந்ததியும் தங்களின் குடியுரிமையை எவ்வாறு நிரூபிப்பது? போன்ற கேள்விகளும் எழுகி ன்றன.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் முழுமையாக அமுலு க்கு வரும்போது, இந்தியப் பூர்வ குடிகளாக உள்ளவர் களும் ஆவணங்களை நிரூபிப்பதில் தவறும் நிலை உருவானால்……? பாரதியாரின் பாடல் வர்களே நினைவில் வருகின்றன.
“எந்தையுந் தாயு மகிழ்து குலாவி
யிருந்தது மிந்நாடே அதன்
முந்தைய ராயிர மாண்டுகள் வாழ்ந்து
முடிந்தது மிந்நாடே அவர்
சிந்தையி லாயிர எண்ணம் வளர்ந்து
சிறந்தது மிந்நாடே ” என்று பாரதி கண்ட குடிகளிடமும், கேள்விகள் எழவே செய்யும்!..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக