திங்கள், 17 ஜனவரி, 2022

11 மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு! சென்னை, தாம்பரம் உள்ளிட்ட - தமிழ்நாடு அரசு அதிரடி

file youtube

  Shyamsundar  -  Oneindia Tamil : சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி பதவிகளுக்கான இட ஒதுக்கீடு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டு இருக்கிறது.
இதில் சென்னை, தாம்பரம் உள்ளிட்ட 11 மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் சில நாட்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும் திமுக அரசு இதற்கு தீவிரமாக தயாராகி வருகிறது.
நகராட்சி, மாநகராட்சி பதவிகளுக்கு நடக்கும் இந்த தேர்தல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரூ.6230.45 கோடி நிவாரணம்.. 3 முறை கேட்டும் கொடுக்கவில்லை.. அமித் ஷாவிற்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஏற்கனவே வென்றுள்ள ஆளும் திமுக அரசு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெல்லும் முனைப்பில் இருக்கிறது. இதற்காக அக்கட்சி ஏற்கனவே சில ஆலோசனை கூட்டங்களை நடத்திவிட்டது. விரைவில் இதற்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படலாம். பிப்ரவரி முதல் வாரம் அல்லது கொரோனா மூன்றாம் அலை முடிந்ததும் தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக ஜனவரி மாத இறுதியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது . ஆனால் திடீரென ஓமிக்ரான் கேஸ்கள் தமிழ்நாட்டில் வேகமாக உயர்ந்தது. தமிழ்நாட்டில் ஜனவரி இறுதியில் கொரோனா கேஸ்கள் உச்சம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கொரோனா பரவல் முடிந்ததும் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி பதவிகளுக்கான இட ஒதுக்கீடு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டு இருக்கிறது. சென்னை, தாம்பரம் மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் பட்டியலின பிரிவு பெண்களுக்கு ஒதுக்கி அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. ஆவடி மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.


இது போக மற்ற முக்கியமான மாநகராட்சிகள் மேயர் பதவிகளும் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், சிவகாசி, காஞ்சிபுரம், மதுரை, கோவை, ஈரோடு மாநகராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு (அனைத்து ஜாதியினரும் போட்டியிடலாம்) செய்துள்ளது. மொத்தமாக சென்னை, கடலூர் உள்ளிட்ட 11 மாநகராட்சிகளின் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.

கருத்துகள் இல்லை: