செவ்வாய், 18 ஜனவரி, 2022

திமுக ஐடி விங் செயலாளராக டி.ஆர்.பி.ராஜா MLA நியமனம்! பழனிவேல் தியாகராஜன் ராஜினாமா கடிதம் ஏற்பு!

டி.ஆர்.பி ராஜா: வயது, வாழ்க்கை வரலாறு, கல்வி, மனைவி, சாதி, சொத்து மதிப்பு  -Oneindia Tamil

Arsath Kan  -   Oneindia Tamil :     சென்னை: திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ.வை நியமனம் செய்வதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே அந்த அணியின் மாநிலச் செயலாளராக இருந்த அமைச்சர் பழனிவேல் தியாரகாரன், அரசுப் பணிகளில் முழுக்கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், அவர் அளித்த விலகல் கடிதம் ஏற்கப்படுவதாக தெரிவித்திருக்கிறார்.
இதேபோல் திமுக அயலக அணி செயலாளராக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திமுக தகவல்தொழில் நுட்ப அணி செயலாளராக பணியாற்றி வந்த தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அரசுப் பணிகளில் முழுக்கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், அப்பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாக கழகத்தலைவர்கள் அவர்களிடம் கொடுத்த கடிதத்தை ஏற்றுக்கொண்டு, அவரை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து கழக சட்டத்திட்ட விதி 31-பிரிவு 19-ன் படி அவருக்கு பதிலாக கழக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. நியமிக்கப்படுகிறார்.



அயலக அணிச் செயலாளராக இருந்த டி.ஆர்.பி.ராஜா, எம்.எல்.ஏ. கழக தகவல் தொழிநுட்ப அணிச் செயலாளராக நியமிக்கப்பட்டதால், கழக சட்டதிட்ட விதி 31- பிரிவு: 20-ன் படி அவருக்கு பதிலாக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா கழக அயலக அணிச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் இவர்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள். இவ்வாறு துரைமுருகன் தனது அறிவிப்பில் தெரிவித்திருக்கிறார்.

திமுக ஐடி விங் செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விலகல் கடிதம் அளித்து 10 நாட்களுக்கு மேல் இருக்கும். இந்நிலையில் அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்பதா அல்லது நிராகரித்து மீண்டும் அவரையே அந்தப்பொறுப்பில் தொடர வைப்பதா என பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனிடையே பிடிஆரின் ராஜினாமா கடிதம் நீண்ட யோசனைக்கு பிறகு ஒரு வழியாக ஏற்கப்பட்டு புதிய அறிவிப்பும் வெளிவந்துவிட்டது.

கருத்துகள் இல்லை: