வெள்ளி, 21 ஜனவரி, 2022

ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு! நாடாளுமன்றம் முதல் நீதிமன்றம் வரை.. விடாமல் போராடிய திமுக! திராவிட வரலாற்றில் மற்றோரு மைல்கல்

 Vishnupriya R  -   Oneindia Tamil :  சென்னை: எம்பிபிஎஸ் மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாநில அரசுகள் ஒதுக்கும் இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பில் தமிழ்நாடு  அரசின் பங்களிப்பு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
திமுக அரசு நடத்திய சட்ட போராட்டத்தின் மூலம் சமூக நீதி காக்கப்பட்டதாக பாராட்டுகள் குவிகின்றன. மாநில அரசுகள் மத்திய அரசின் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கும் 15 சதவீத எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் 50 சதவீத முதுநிலை மருத்துவக் கல்வி இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான சமூகநீதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்ததாக திமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது.
இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஓபிசி இடஒதுக்கீடு குறித்து மாநிலங்களவையில் திமுக குரல் எழுப்பியது.


இது தொடர்பாக மாநிலங்களவை எம்பி வில்சன் பேசினார்.
பின்னர் அதே ஆண்டு அப்போது சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த ஹர்ஷவர்தனுக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து ஓபிசி இடஒதுக்கீடு குறித்து விவாதிக்க திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

திமுக குரல் எழுப்பியது  -  ஓபிசி இடஒதுக்கீட்டு விவகாரம் குறித்து மாநிலங்களவையில் திருச்சி எம்பி சிவாவும் குரல் கொடுத்தார்.
இவ்வாறு நாடாளுமன்றத்தில் திமுக குரல் எழுப்பியும் மத்திய அரசு சரியான பதில் அளிக்கவில்லை என்பதால் கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது.

ஓபிசி இடஒதுக்கீடு -  இதையடுத்து மருத்துவப் படிப்புகளில் ஓபிசி இடஒதுக்கீட்டை உள்நோக்கத்துடன் மத்திய அரசு மறுத்து வருவதாக கூறி அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக கண்டன தீர்மானம் நிறைவேற்றியது. இதையடுத்து ஓபிசி இடஒதுக்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தனது வாதத்தை எம்பியும் வழக்கறிஞருமான வில்சன் எடுத்துரைத்தார். அப்போது சென்னை உயர்நீதிமன்றத்தை நாடுமாறு நீதிபதிகள் தீர்ப்பளித்துவிட்டனர்.

தீர்ப்பளித்த நீதிமன்றம்  -  இதையடுத்து 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. அப்போது மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓபிசி மாணவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதாக உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இதுவே முதல் கட்ட வெற்றி என திமுக கொண்டாடியது. 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் தேதி தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசிக்கு இடஒதுக்கீடு செய்வதில் சட்ட ரீதியிலோ, அரசியலமைப்பு படியும் எந்த தடைகள் இல்லை என தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம் , ஓபிசி இடஒதுக்கீட்டை அமல்படுத்த ஒரு குழுவை ஏற்படுத்துமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

ஓபிசி இடஒதுக்கீடு -  அதே நேரத்தில் ஓபிசி இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால் 2020- 2021 ஆம் கல்வியாண்டுக்கான சேர்க்கையில் இடையூறு ஏற்படும் என்பதால் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை 2021- 2022 ஆம் கல்வியாண்டில் இருந்து அமல்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து திமுக உச்சநீதிமன்றம் சென்றது. இதனிடையே 2021- 2022 ஆம் கல்வியாண்டு மருத்துவ படிப்புகளில் ஓபிசி இடஒதுக்கீட்டை வழங்குவதற்கான வழிமுறைகளை தீர்மானிக்க ஒரு குழுவை மத்திய அரசு அமைத்தது.


நீதிமன்ற அவமதிப்பு  -  இதையடுத்து ஓபிசி இடஒதுக்கீட்டை அமல்படுத்தவில்லை என மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தாக்கல் செய்தது. எனினும் கடந்த ஆண்டு ஜூலை 29 ஆம் தேதி 2021-2022 ஆம் கல்வியாண்டு முதல் மருத்துவம் மற்றும் மருத்துவ மேல்படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கான 27 சதவீதம் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

2 ஆண்டு கால சட்ட போராட்டம்   -  கடந்த 7ஆம் தேதி மருத்துவ பட்டப்படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டு அறிக்கை செல்லும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட், ஏஎஸ் போபண்ணா ஆகியோர் தீர்ப்பளித்தனர். இந்த வழக்கில் 27 சதவீத இடஒதுக்கீட்டை ஓபிசி பிரிவினருக்கு வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை தன் வாதத்தில் திமுக முன்வைத்தது. இவ்வாறாக சமூக நீதியை காப்பதற்காக திமுக அரசு கடுமையான சட்ட போராட்டங்களை நடத்தியது. இதற்காக பல வழக்குகளை மேற்கோள்காட்டியது. எனவே இந்த வெற்றியை திமுகவை தவிர வேறு யாரும் பங்கு போட்டுக் கொள்ள முடியாது என்பது இந்த 2 ஆண்டு கால சட்ட போராட்டம் சொல்லும் பாடம் என்கிறார்கள் திமுக தரப்பில்

கருத்துகள் இல்லை: