சனி, 22 ஜனவரி, 2022

தாலிபன்கள் வந்து விட்டனர், எங்களுக்கு உதவுங்கள்" .. தாலிபனை எதிர்த்த பெண்கள் மாயம்: BBC

BBC : க்வென்டின் சோமர்வில் -      பிபிசிசெய்திகள், காபூல்  : தமனா சர்யாபி பர்யானி, தாலிபன்கள் தமது வீட்டுக்கு வெளியே வந்தபோது உதவிக்காக கெஞ்சும் வீடியோவை வெளியிட்டார்
தாலிபன்கள் மிரட்டலாம். 20 ஆண்டுகால வன்முறைப் போராட்டத்துக்குப் பிறகு, பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் உயிர்களை இழந்த பிறகு, மிருக பலத்தைப் பயன்படுத்தி இங்கு அவர்கள் ஆட்சியைப் பிடித்திருக்கிறார்கள்.
அப்படியிருந்தும், ஆப்கானிஸ்தானிய பெண்களில் சிலர் அவர்களின் மிரட்டலுக்கு பயப்பட மறுக்கிறார்கள்.
அந்த பெண்களில் தமனா சர்யாபி பர்யாணியும் ஒருவர். நீங்கள் வாழ்க்கையில் சாதித்த அனைத்தையும் பறிக்க விரும்பும் ஆயுதமேந்திய நபர்களுக்கு எதிராக நிற்க தைரியம் நிச்சயம் தேவை.
கடந்த வார இறுதியில், வேலை செய்யும் உரிமை மற்றும் கல்விக்கான உரிமையைக் கோரி வீதியில் இறங்கி போராடிய டஜன் கணக்கானவர்களுடன் சேர்ந்தார்.



ஆனால், அந்த எதிர்ப்பாளர்கள் மீது தாலிபன் போராளிகள் மிளகு தெளிபான்களை பயன்படுத்தினர். கூட்டத்தை கலைக்க மின்சார பாய்ச்சி கருவியை தாலிபன்கள் பயன்படுத்தியபோது அதிர்ச்சியால் அந்த பெண்கள் திகைத்துப் போனதாகக் கூறினர்.

கடைசியில் எதிர்ப்புக்குரலை ஒலித்த பிறகு அவர்கள் வீடு திரும்பினர். அதில் ஒரு சிலர் தாங்கள் பின்தொடரப்படுவதாக அஞ்சினார்கள்.

அது... புதன்கிழமை இரவு 8 மணி. காபூலின் பர்வான் பகுதியில் உள்ள தமனா பர்யானியின் அடுக்குமாடி குடியிருப்பில் ஆயுதம் ஏந்திய நபர்கள் நுழைந்தனர்.

அப்போது வீட்டில் சகோதரிகளுடன் அவர் தனியாக இருந்தார். வெளியே வந்த ஆண்கள் வாயில் கதவை உதைக்க ஆரம்பித்தனர்.

இதனால், "தயவுசெய்து உதவுங்கள், தாலிபன்கள் என் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள், என் சகோதரிகள் வீட்டில் இருக்கிறார்கள்" என்று சமூக ஊடகங்களில் ஒரு காணொளியை பதிவு செய்து தமனா பரியாணி பகிர்ந்தார்.

"இப்போது நீங்கள் (தாலிபன்கள்) இங்கு வருவதை நாங்கள் விரும்பவில்லை. நாளைக்கு வாருங்கள். நாளை பேசலாம்" என்று தாலிபன்களிடம் கெஞ்சும் காட்சிகளும் அந்த காணொளியில் இருந்தது.

"இந்த இரவு நேரத்தில் பெண்கள் உங்களை பார்க்கக் கூடாது. உதவி செய்யுங்கள். தாலிபன்கள் என் வீட்டிற்கு வந்துள்ளனர்" என்று அந்த காணொளியில் பல முறை கெஞ்சினார் தமனா.

2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி தாலிபன்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இங்கு வாழும் பெண்கள் தங்கள் சொந்த வீடுகளிலேயே கைதிகளாக இருப்பதாக புகார் கூறுகின்றனர்.

சொந்த நாட்டிலேயே அவர்கள் பாதுகாப்பாக இல்லை. பெண்கள் மட்டும் இருக்கும் வீட்டிற்குள் நுழைவது ஆப்கன் கலாசாரத்தை மீறுவதாகும்.

ஆனால், காவல்துறையில் பணியாற்றி வந்த பெண்களை தாலிபன் நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ள நிலையில், பெண்களை விசாரிக்க பெண் காவலர்கள் தாலிபன்களிடம் இல்லை.

தமனா பரியாணி காணாமல் போய் இரண்டு நாட்களாகின்றன. அவரைக் கண்டுபிடிக்க முயற்சி செய்ய நான் அவரது குடியிருப்பிற்குச் சென்றேன்.

அவரது வீட்டிற்குள் யாரும் இல்லை. முன் கதவில் ஒரு பெரிய சேற்று அச்சு நிறைந்த பூட்ஸ் தடம் பதிந்திருந்தது.

தமனா தனது இரண்டு சகோதரிகளுடன் அழைத்துச் செல்லப்பட்டதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். அவர்கள் வந்து சென்ற பிறகு யாரும் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு செல்லவில்லை என அறிந்தோம்.

"ஒரு ஆயுதக் குழு" சகோதரிகளை அழைத்துச் சென்றது என்று மட்டுமே சிலர் கூறினார்கள்.

போராட்ட நடந்த அன்று இரவு தமனாவைப் போலவே பிற பெண் எதிர்ப்பாளர்களும் இலக்கு வைக்கப்பட்டனர். அவருடன் போராட்டத்தில் பங்கெடுத்த பரவானா இப்ராஹிம்கேலையும் இப்போது காணவில்லை. இருப்பினும், இந்த பெண்களை தாங்கள் அழைத்துச் செல்லவில்லை என தாலிபன்கள் மறுத்தனர்.

கடந்த வியாழக்கிழமை பிபிசிக்கு அளித்த பேட்டியில், ஐ.நாவுக்கான தாலிபன் தூதராக வருவார் என்று நம்பப்படும் சுஹாய் ஷஹீன் "[தலிபான்கள்] அவர்களைத் தடுத்து வைத்திருந்தால், அதை அவர்களே ஒப்புக் கொள்வார்கள். அதுவே ஒரு குற்றச்சாட்டு என்றால் நீதிமன்றத்தில் அதை அணுகுவார்கள். அவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வார்கள்... இது சட்டபூர்வமான விஷயம். ஆனால் குறிப்பிட்ட அந்த பெண்கள் வெளிநாட்டில் தஞ்சம் அடைவதற்காக இதுபோன்ற போலிக் காட்சிகளை உருவாக்கி படம் எடுக்கிறார்கள்," என்கிறார்.
காணொளிக் குறிப்பு,

தமனா பர்யானியின் வீடியோ போலியானது என்று தலிபான் அதிகாரி சுஹாய் ஷஹீன் பிபிசியிடம் தெரிவித்தார்

தமனா பரியாணியின் தோழி ஒருவர் இந்த விஷயத்தில் வேறு கதையை தெரிவித்தார்.

பாதுகாப்பான இடத்திலிருந்து, பிபிசிக்கு அளித்த பேட்டியில், "நான் தமனாவிடம் சீக்கிரம், உனது வீட்டை விட்டு வெளியேறு. நீ ஆபத்தில் இருக்கிறாய் என்பதை இன்னும் தீவிரமாக எடுத்துக் கொள்..." என்றார்.

நான் வீட்டிற்கு வந்ததும், எங்களின் தோழி, அவரும் தாலிபன் எதிர்ப்பாளர் தான் - அவரது பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை - தாலிபன்களால் தமனா கைது செய்யப்பட்டதாகவும் சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அவர் அழுது கொண்டிருப்பதாகவும் கூறினார்.

தாலிபன் அதிகாரிகள் உண்மையிலேயே இதுபோன்ற பெண்களை தேடுகிறார்களா என தெரியவில்லை. ஆப்கானிஸ்தானின் சட்டபூர்வமான ஆட்சியாளர்களாக தாலிபன்களை அங்கீகரிக்க உலகின் பெரும்பாலான நாடுகள் மறுக்கின்றன.

மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் பட்டினி கிடக்கின்றனர். தாலிபன் ஆட்சியின் கீழ், பாலின அடிப்படையில் கல்வியை பகிரங்கமாக கட்டுப்படுத்தும் உலகின் ஒரே நாடாக ஆப்கானிஸ்தான் மாறியுள்ளது.

இது தாலிபனின் சட்டபூர்வ வேட்கையிலும், பொருளாதாரத் தடைகளை நீக்குவதிலும் முக்கிய தடங்கலாக உள்ளது. இப்பிரச்னையை வலியுறுத்தி பெண்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துவது, தாலிபனுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமனா பரியாணி, அவரது சகோதரிகள் மற்றும் அவரது நண்பர்கள் யாராக இருந்தாலும், தாலிபான்கள் ஆப்கன் பெண்களை கூட்டாக தண்டிக்கின்றனர் என்பதன் அடையாளமாகவே பார்க்க முடிகிறது.

கருத்துகள் இல்லை: