வேந்தன். இல. : நாம் தமிழர் கட்சி ஏற்பாடு செய்திருந்த தமிழரா? திராவிடரா? கருத்தரங்கில் ம.செந்தமிழன் பேசிய 'தமிழர் மெய்யியல் - இறையுரை'யை எனக்கு நாம் தமிழர் தோழர் அனுப்பி இருந்தார். தோழர் மன்னிக்கவும். அது இறையுரையல்ல. பொய்யுரை.
இப்படி சொல்வதற்கு காரணம் அந்த உரையில் முழுதும் மலிந்து கிடந்த பொய்கள். அவர் சொன்ன ஒவ்வொரு கருத்திலும் உள்ள பொய்கள். ஆதாரங்களோடு மறுக்கலாம். ஆனால் அதற்கு முகநூல் பதிவு இடம் தராது.
கழுகு பார்வையில் (கழுகு பார்வையே கூரிய பார்வைதானே) மேலெழுந்த வாரியாக சில புள்ளிகளை தொட்டுக்காட்டினாலே அவரின் பொய்களும் அறியாமையும் அம்பலமாகும்.
1. ஐம்பெருங்காப்பியங்களில் வளையாபதியும் குண்டலகேசியும் குப்பை என்கிறார். ஏனெனில் அது சமண (ஜைன) காப்பியமாம். அதில் மறுபிறவி குறித்து தான் அதிகம் பேசப்பட்டுள்ளன. ஆனால் சிலப்பதிகாரம் தமிழரின் மரபை பேசிய காப்பியம் என்கிறார்.
ஐயோ பாவம். சிலப்பதிகாரத்தில் மறுபிறவி கூறும் வஞ்சி காண்ட பகுதிகளை மட்டும் கிழித்து விட்டு யாரோ அவருக்கு புத்தகத்தை தந்திருக்கிறார்கள் போலும்.
வஞ்சி காண்டத்தின் படி கோவலன் முற்பகுதியில் 'பரதன்' எனும் வணிகனாக பிறந்தான். அவன் முற்பிறவியில் 'சங்கமன்' எனும் வணிகனை வேறு நாட்டு ஒற்றன் (உண்மையில் அவன் ஒற்றன் அன்று) என சொன்னதால் அவன் அநீதியாக மன்னனால் கொல்லப்படுகிறான். 'சங்கமன்' மனைவி 'நீலி' இத்துயர் கேட்டு மலைமேல் சென்று தற்கொலை செய்து கொள்கிறாள். தற்கொலை செய்து கொள்வதற்கு முன் "என் கணவனுக்கு உண்டான இதே நிலை அதற்கு காரணமானவனுக்கு (பரதன்) ஏற்படவேண்டும்" என சாபமிட்டாள்.
அதன் விளைவாகத்தான் பரதன் மறுபிறவியில் கோவலனாக பிறந்து அவனும் இதே போன்று பொய் குற்றச்சாட்டில் சிக்கினான் என்பது தான் இளங்கோவடிகள் சொல்லும் 'சிலப்பதிகாரம்'. ஆக, மறுபிறவி வளையாபதி,குண்டலகேசியில் மட்டுமல்ல இவர் தமிழரின் மரபு இலக்கியமாக எதை சொல்கிறாரோ அந்த சிலப்பதிகாரத்திலேயும் உள்ளது. இன்னும் சொல்லப்போனால் இவர் பேச்சில் ஒவ்வொரு முறையும் சாடும் அந்த சமணத்தை (ஜைனம்) தழுவியர் தான் இளங்கோவடிகள் என தமிழ் அறிஞர்கள் கூறுகிறார்கள்.
2. 'த்ரமிள சங்க'த்தை உருவாக்கி 'தமிழ்ச் சங்க'த்தை அழித்தவர் என வச்சிரநந்தியின் மீது விஷத்தை கக்குகிறார் செந்தமிழன்.
'தமிழ்ச் சங்கம்' முடிவுற்றது பொது ஆண்டு 200 அல்லது 3ம் நூற்றாண்டு. ஆனால் 'த்ரமிள சங்கம்' ஏற்படுத்தப்பட்டது பொது ஆண்டு 470. இரண்டு சங்கங்களுக்கும் 270 அல்லது 300 ஆண்டுகால இடைவெளி உள்ளது. 470ல் த்ரமிள சங்கத்தை உருவாக்கி வச்சிர நந்தி காலப்பயணம் (Time travel) மேற்கொண்டு பொ.ஆ. 200க்கு சென்று தமிழ்ச் சங்கத்தை அழித்தாரா? என்னவொரு தர்க்கமற்ற குற்றச்சாட்டு இது?
இன்னொரு வேறுபாடு என்னவென்றால், தமிழ்ச் சங்கங்கள் உருவானதற்கு தமிழ் மொழியை செம்மைப்படுத்தும் இலக்கிய நோக்கம் உண்டு. ஆனால் வச்சிரநந்தி உருவாக்கிய த்ரமிள சங்கம் சமய நோக்கம் கொண்டது. புத்தர் 2600 ஆண்டுகளுக்கு முன் தம்மத்தை பரப்ப எப்படி சங்கத்தை உருவாக்கினாரோ அதுபோல, சாதாரண மக்களுக்காக ஜைன கருத்துகளை பரப்ப (தமிழ் மொழிக்காக அல்ல) 470ல் த்ரமிள சங்கத்தை உருவாக்கினார் வச்சிரநந்தி. முற்காலத்தில் பாண்டியர்களால் உருவாக்கப்பட்ட தமிழ்ச் சங்கம் வேறு. பிற்காலத்தில் வச்சிர நந்தியால் உருவாக்கப்பட்ட த்ரமிள சங்கம் வேறு. அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களை மதிப்பதாக உரையில் குறிப்பிடுகிறார் இவர். அந்த மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதிய 'களப்பிரர் ஆட்சியில் தமிழகம்' என்கிற புத்தகத்தில் மேற்சொன்ன கருத்துகளை அவரே பதிவு செய்திருக்கிறார். அவர் எழுதியதையெல்லாம் படிக்கிறது கிடையாது. சும்மா இவரை மதிக்கிறோம். அவரை மதிக்கிறோம் என பணிவு புருடா மட்டும் விட்டுக்கொள்வது. ம.செந்தமிழனுக்கு அதிர்ச்சியளிக்கும் இன்னொரு தகவல் என்னவென்றால் அறிஞர் மயிலை. சீனி.வேங்கடசாமி அவர்கள் குடியரசு பத்திரிக்கையில் பல கட்டுரைகளை எழுதியவர்.
கொஞ்சம் கூட அடிப்படை வரலாறு தெரியாமல் போகிற போக்கில் சொல்லும் இக்கதைகளை கூட்டம் கைத்தட்டுகிறது. பாவம் அவர்கள் களப்பிரர் ஆட்சி குறித்தும் பௌத்த ஜைனம் குறித்தெல்லாம் படிக்கமாட்டார்கள் என்பது அவர்களுக்கு தெரியும். ஏனெனில் அவர்களே படித்ததில்லை. "நானெல்லாம் அதிகம் படித்தவனில்லை. அதிகம் உணர்ந்தவன்" என அவரே condition apply* மாதிரி போட்டுக்கொள்கிறார். இந்த உள்ளுணர்வால் உந்தப்பட்டவர்களின் உணர்வு எப்படி பார்ப்பனீயமயமாக இருக்கிறது என்பதற்கு காந்தியடிகளே இந்தியாவுக்கு தெரிந்த உதாரணம். வரலாற்றை படிக்காமல் உணர்வதெல்லாம் புராணத்தை எழுத உதவலாமே தவிர வரலாற்றை கட்டமைக்க உதவாது.
50 ஆண்டுகால அரசியல் வரலாற்றையே படிக்காதவர்கள் 2000 ஆண்டுகால வரலாற்றையா படிக்க போகிறார்கள்?
ஆமைக்கறி செய்தி பொய் என எளிதாக யாரும் மறுத்து பேசலாம். ஆனால் வச்சிர நந்தி, களப்பிரர், சமணம், வளையாபதி அப்படி இப்படின்னு பேசும் பொய்களை கண்டறிவது கடினம். காரணம், அதற்கு ஆழ்ந்த வாசிப்பு தேவைப்படுகிறது. அந்த வகையில் சீமானை விட ம.செந்தமிழன் போன்றவர்கள் தான் மிகவும் ஆபத்தானவர்கள். அவர் பேசுவது தமிழர் மெய்யியல் இல்லை. சைவ மெய்யியல்.
தமிழர் மெய்யியல் பன்மைத்துவ மரபு கொண்டது. சாதி, இனம், மொழி கடந்து மக்களுக்கு தேவையான எல்லா முற்போக்கு கருத்துகளையும் உள்வாங்கிய விசால மரபு வாய்ந்தது.. ஆனால் இவர்கள் அதை 'சைவம்' எனும் ஜாடிக்குள் அடைக்க முற்படுகிறார்கள்.
இவர்களுக்கு களப்பிரர் ஆட்சியை பிடிக்காது. அவர்கள் தமிழை அளித்த அழிவுவாதிகள் என்பர். ஏனெனில் அந்த அழிவுவாதிகள் தான் உழைக்காத பார்ப்பனர்களுக்கு தமிழ் மன்னர்கள் கொடுத்த நிலங்களை பிடுங்கினர். தமிழர் வரலாற்றில் யாரும் செய்யாத செயலை துணிந்து செய்தவர்கள் களப்பிரர்கள். அதனால் தான் களப்பிரர் ஆட்சியை பார்ப்பனர்கள் இருண்ட காலம் என்கிறார்கள். அதையே இந்த ம.செந்தமிழன் போன்றவர்களும் சொல்கிறார்கள். இது தான் தமிழ் பார்ப்பனீயம். இந்த வரலாற்று தகவலையெல்லாம் 'கோவில்-நிலம்-சாதி' புத்தகத்தில் ஐயா பொ வேல்சாமி அவர்கள் விரிவாகவே எழுதியுள்ளார்.
3. களப்பிரர்கள் தமிழ் மொழியை அழித்தார்களாம் சொல்கிறார் ம.செந்தமிழன்.
தமிழில் 'யாப்பிலக்கணம்' என்ற இலக்கண பிரிவு உண்டல்லவா? அதை உருவாக்கியவர்கள் யார் என செந்தமிழனுக்கு தெரியுமா? அதை உருவாக்கியவர்கள் களப்பிரர்கள். முடிந்தால் களப்பிரர் கொடுத்த யாப்பிலக்கணமே வேண்டாம் என சொல்ல இவர்கள் தயாரா?
களப்பிரர் ஆட்சியில் தான் பார்ப்பன ஆதிக்கத்தின் வாலறுக்கப்பட்டது. சமத்துவ கருத்துகள் தழைத்தோங்கின.
களப்பிரர் வீழ்ச்சிக்கு பிறகு சமத்துவத்தை போதித்த களப்பிரர் தொடர்பான வரலாறு வருங்காலத்துக்கு தெரியக்கூடாதென தீயில் எரித்தவர்கள் பார்ப்பனர்கள்.
பிறகு வந்த பாண்டிய சோழ மன்னர்களிடம் உங்கள் முப்பாட்டனார் வழங்கிய பிரம்மதேய நிலங்களை களப்பிரர் பிடுங்கினர். அதை மீண்டும் தருமாறு கெஞ்சி வாங்கியதெல்லாம் கல்வெட்டு சாட்சியாக இன்றும் இருக்கிறது.
ஆக, பார்ப்பனர்களுக்கு இருண்டகாலமாக இருக்கும் களப்பிரர் ஆட்சி, இவர்களுக்கு இருண்ட காலமாக இருக்கிறதென்றால் இவர்கள் யார் என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.
'களப்பிரர்கள் காலம்; இருண்ட காலமல்ல; அது ஒரு பொற்காலம்' - சொன்னவர் பாபாசாகேப் அம்பேட்கர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக