Ravi Kumar : வீரலூர் தாக்குதல்: விரைந்து நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், நேரில் சென்று பார்வையிட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆணையத்துக்கும் நன்றி
16 ஆம் தேதி வீரலூர் அருந்ததியர் குடியிருப்பில் தாக்குதல் நடைபெற்ற நேரத்தில் அந்த ஊரிலிருந்து எனக்குத் தெரிவிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பினேன்.
அதன் பின்னர் உயர் போலிஸ் அதிகாரிகள் அங்கு நேரில் சென்று தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரித்ததோடு சடலத்தை நெடுஞ்சாலை வழியே எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்தனர்.
மாநில எஸ்சி எஸ்டி ஆணையத்தின் தலைவருக்கும் கடிதத்தை அனுப்பினேன். துணைத்தலைவர் தோழர் புனிதப் பாண்டியனிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு நேரில் பார்வையிடவேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன்.
“ தங்களின் தகவலுக்கு நன்றி.ஆணையம் இதை கவனத்தில் எடுத்துக் கொண்டு செயல்படும்” என அவர் உறுதியளித்தார். அதன்படி இன்று ஆணையத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு நேரில் சென்று விசாரித்துள்ளனர். இது பாராட்டுக்குரியது. மாநில எஸ்சி எஸ்டி ஆணையம் அமைக்கப்பட்ட பின்னர் அது நேரில் சென்று விசாரித்த சம்பவம் இதுவாகத்தான் இருக்கும் எனக் கருதுகிறேன்.
எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பொங்கல் நாளில் தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களிலும் தலித் மக்கள்மீதான வன்முறைத் தாக்குதல்கள் அதிக அளவில் நடந்துள்ளன. இதை யதேச்சையாக நடந்ததெனக் கருத முடியவில்லை. இதை ஆணையம் விசாரிக்க வேண்டும்.
தலித் குடியிருப்புகளுக்குள் புகுந்து தாக்குகிற சம்பவங்கள் அதிகரித்து வருவதும் அப்படித் தாக்குகிறவர்கள் சுதந்திரமாக நடமாடுவதும் காவல்துறை மீதான நம்பிக்கையைக் குறைப்பதாக உள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் இட்டுச்செல்ல அரும்பாடு படுகிறார். மாநிலம் வளர்ச்சி பெற வேண்டுமெனில் சமூக அமைதி அவசியம். சாதி வெறியர்களின் வன்முறை வெறியாட்டங்கள் தமிழ்நாட்டில் சமூக அமைதியை சீர்குலைக்கின்றன. இதைக் கட்டுப்படுத்தாவிட்டால் மாண்புமிகு முதலமைச்சரின் ஆசை நிராசையாகிவிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக