சனி, 22 ஜனவரி, 2022

கர்நாடகா: பள்ளியில் ஹிஜாபுக்கு அனுமதி மறுப்பது மத சுதந்திர தலையீடாகுமா?

இம்ரான் குரேஷி  -    பிபிசி இந்திக்காக : கர்நாடகாவின் கடலோர நகரான உடுப்பியில் பள்ளி வகுப்பறையில் ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும் எனக் கோரி கடந்த சில நாட்களாக, சுமார் அரை டஜன் பதின்ம வயது மாணவிகள் நடத்தி வரும் போராட்டம் சமூக ஊடகங்கள் உட்பட ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாகியிருக்கின்றன.
முன்-பல்கலை கல்லூரி எனப்படும் பள்ளியின் 12ஆம் வகுப்புக்கு இணையான பாடமுறையில் இரண்டாம் ஆண்டு படிக்கும் அந்த மாணவிகள், ஹிஜாபை அகற்றிய பிறகு வகுப்புகளுக்குச் செல்லுமாறு மாவட்ட உதவி ஆணையர் அந்தஸ்து கொண்ட அதிகாரி தலைமையிலான அரசு அதிகாரிகள் குழு வேண்டுகோள் விடுத்த பிறகும் அதை ஏற்க மறுத்துள்ளனர். இப்போது அவர்கள் வகுப்பறைக்கு வெளியேயும் படிக்கட்டுகளிலும் அமர்ந்து படிக்கிறார்கள்.



`பள்ளி முதல்வர் மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் நீண்ட நேரம் பேசினார். ஆனால், எங்களுடைய பார்வையை யாருமே சரியாகக் கேட்கவில்லை. உதவி ஆணையர் கேட்ட கேள்விகளுக்கு மட்டுமே நாங்கள் பதில் தர வேண்டும் என்றனர்," என்கிறார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவிகளில் ஒருவர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 6 மாணவிகளில் 5 பேர், ஹிஜாப் அணிவது எங்களின் உரிமை என்று எழுதப்பட்ட ஒரு காகிதத்தை ஏந்தியவாறு பள்ளி முன்பு நின்றனர்.
புர்கா அணிய தடை விதித்த கேரள கல்வி நிறுவனம்: தனிநபர் உரிமையை பறிக்கும் செயலா?

ஆனால், பெண்கள் மட்டுமே படிக்கும் கல்லூரி என்பதால், தலைக்கவசம் அணிய வேண்டும் என்று மாணவிகளை வலியுறுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று பள்ளி நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. அதுவும், அவர்கள் கற்பிக்கப்படும் போது மட்டுமே.
`எங்கள் பள்ளியில் ஐந்து அல்லது ஆறு ஆண் விரிவுரையாளர்கள் உள்ளனர். ஆண்களுக்கு முன்பாக எங்களுடைய தலைமுடியை மறைக்க வேண்டும். அதனால்தான் நாங்கள் ஹிஜாப் அணிகிறோம்,'' என்கிறார் ஏ.ஹெ. அல்மாஸ் என்ற மாணவி. அறிவியல் பிரிவைச் சேர்ந்த இந்த மாணவி, தங்களுடைய ஆண் ஆசிரியர்கள் ஹிந்து மற்றும் ஆங்கில பாடங்களை எடுப்பதாக பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.

ஹிஜாப் அணிவது கடந்த இரண்டு ஆண்டுகளாக மாநிலத்தின் கடலோரப் பகுதியில் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது, குறைந்தபட்சம் இரண்டு கல்லூரிகளில் ஹிஜாபுக்கு தடை உள்ளது. ஒன்று சிக்கமகளூரு மாவட்டம் கொப்பாவிலும் மற்றொன்று மங்களூருவிலும் உள்ளது.

மாணவர்கள் வழக்கத்தின்படி காவி நிற ஷால் அணிவதையும், மாணவிகள் ஹிஜாப் அணிவதையும் பரஸ்பரம் தடை செய்து அவர்களின் பெற்றோருடனான சந்திப்பில் பிரச்னையை தீர்த்துக் கொண்டிருக்கிறது சிக்கமகளூரு கல்லூரி. அந்த கல்லூரி பெண்களிடம் ``தலையை மறைக்கும் ஆடை போடவேண்டாம்'' என்று கேட்டுள்ளது.

இது சாத்தியமான தீர்வா?அல்லது ஒரு மாணவி ``நிகாப்'' அணிவதற்கு எதிராகவும் மாணவர்களுக்கு சீருடையை வலியுறுத்தும் பள்ளி நிர்வாகத்தின் உரிமையையும் நிலைநாட்டிய கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் இந்த பிரச்னைக்கு வேறு ஏதேனும் தீர்வு உள்ளதா?

அரசியலமைப்பு, சிவில் மற்றும் கிரிமினல் சட்ட வழக்குகளில் ஆஜராகி வரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் காளீஸ்வரன் ராஜ் இந்த விவகாரத்தில் மாறுபட்ட கருத்தை வாதிடுகிறார்.
``எங்கள் கல்லூரியில் சுமார் 1,000 மாணவிகள் உள்ளனர். இவர்களில் 75 பேர் முஸ்லிம்கள். இந்த ஆறு மாணவர்களைத் தவிர பெரும்பான்மையான முஸ்லிம் சிறுமிகளுக்கு எங்கள் விதிமுறைகளில் எந்தப் பிரச்னையும் இல்லை," என்று கல்லூரி முதல்வர் ருத்ரே கெளடா பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.

``இந்த மாணவிகள் ஹிஜாப்/புர்கா அணிந்து வளாகத்தில் சுற்றி வர அனுமதித்துள்ளோம். நாங்கள் சொல்வதெல்லாம் அவர்களின் வகுப்புகள் தொடங்கும் போது அல்லது விரிவுரையாளர் மண்டபத்திற்குள் நுழையும் போது, ​​மாணவிகள் ஹிஜாபை அகற்ற வேண்டும். உதவி ஆணையர் முன் நடந்த கூட்டத்திலும் இந்த கருத்து தெரிவிக்கப்பட்டது,'' என்கிறார் ருத்ரே கெளடா.

மற்ற அரசு கல்லூரிகளைப் போலவே இங்கும் சீருடை உள்ளது. எந்த வித பாகுபாடுகளுக்கும் இடமளிக்கக் கூடாது என்கிறார் அவர்.

``பணக்கார மாணவர்கள் தனியார் கல்லூரிகளுக்குச் செல்கிறார்கள். மீதமுள்ளவர்கள் எங்கள் கல்லூரிக்கு வருவார்கள். அவர்கள் பெரும்பாலும் வட கர்நாடக மாவட்டங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்களின் குழந்தைகள்.''

``இரண்டு வாரங்களுக்கு முன்பு சுமார் ஒரு டஜன் மாணவர்கள் வந்து வகுப்பில் ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். எதற்காக இந்தப் பிரச்னை வருகிறது என்று எங்களுக்குப் புரியவில்லை. மாணவிகளின் பெற்றோரிடம் பேசினேன். கல்லூரியின் நிலைப்பாட்டை எந்த பெற்றோரும் எதிர்க்கவில்லை. பிறகு மாணிகளின் எண்ணிக்கை, நான்கு ஆக குறைந்தது,'' என்றார்.

``இப்போது ஏன் இந்தப் பிரச்னையை எழுப்புகிறீர்கள் என்று கேட்டோம், அதுவும் இறுதித் தேர்வுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு இது அவசியமா என்றும் கேட்டோம். நாங்கள் அவர்களின் பெற்றோருடன் மீண்டும் ஒரு கூட்டத்தை நடத்தினோம். பின்னர் ஒரு வழக்கறிஞர் ஆஜராகி, தாம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) சார்பாக வந்திருப்பதாகக் கூறி எங்களிடம் சட்டம் பேசினார். அதன் பிறகு டிசம்பர் 31இல் பிரச்னை தொடங்கியது,'' என்றார் ருத்ரே கெளடா.

கல்லூரியில் டிசம்பர் 9 முதல் 23 வரை அரையாண்டுத் தேர்வுகள் நடந்தன.

``மாணவிகளில் சிலர் ஒழுங்கற்று நடந்து கொள்பவர்கள். ஆசிரியர்களிடம் கூட ஒருமையிலேயே பேசுவார்கள். எங்கள் கல்லூரி வாயில்கள் காலை 9.15 மணிக்கு மூடப்பட்டு மாலை 4 மணிக்கு திறக்கப்படும். இந்த பெண்களில் சிலர் காலை 11 மணியளவில் கல்லூரிக்கு வருகிறார்கள், பின்னர் புகைப்படம் எடுக்கிறார்கள், இவை சமூக ஊடகங்களில் வைரலாகின்றன,"என்று கெளடா கூறினார்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவி அல்மாஸ் பிஎஃப்ஐ அமைப்பின் மாணவர் பிரிவான கேம்பஸ் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் பிரதிநிதியும் கூட. அவர் முதல்வர் ருத்ரே கெளடாவின் கருத்தை எதிர்க்கிறார்.

``நாங்கள் முதலாவது ஆண்டில் சேர்ந்தபோது எங்களுக்கு ஹிஜாப் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், கல்லூரிக்குள் எங்களுடைய சீனியர்கள் ஹிஜாப் அணிந்திருப்பதை உணர்ந்தோம். எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக நினைத்தோம். அதனால், ஹிஜாப் அணிந்து கொண்டு வந்தோம். ஆனால் இப்படித்தான் நடக்க வேண்டும் என சேர்க்கை நேரத்தில் எங்களுடைய பெற்றோர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக கல்லூரி கூறியது. கடந்த ஆண்டு, கல்லூரி திறக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, கொரோனா காரணமாக எங்களுடைய வகுப்புகள் ஆன்லைனிலேயே நடந்தன," என்று அல்மாஸ் கூறினார்.

ஆஃப்லைன் வகுப்புகள் தொடங்கும் போது, ​​அதே பிரச்னையை எழுப்பியபோது, ​​"அரையாண்டுத் தேர்வுகள் முடியட்டும்" என்று கல்லூரி நிர்வாகம் ஏதாவது சாக்குப்போக்குக் கூறியது. ஹிஜாப் அணிந்து டிசம்பர் 29ஆம் தேதி நாங்கள் வந்தபோது, ​​எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை.

விடுமுறை நாட்களில், எங்கள் பெற்றோர் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில் கல்லூரி சீருடை மட்டுமே கட்டாயம் என்பதையும், ஹிஜாப் பற்றி எதுவும் அதில் இல்லை என்பதையும் உணர்ந்தோம்," என்றார் அல்மாஸ்.

ஹிஜாப் அணிந்து வகுப்பில் அனுமதிக்கப்படாவிட்டாலும், நாங்கள் அனைவரும் ``கல்லூரிக்குச் செல்கிறோம்'' என்று கூறிய அவர், அங்கிருந்தபடி நாங்கள் புகைப்படம் எடுத்து பகிர்ந்ததற்கு காரணம், பிறகு நாங்கள் பள்ளிக்கே வராமல் இருந்தோம் எனக் கூறுவார்கள். எங்களுடைய வருகை பதிவு செய்யப்படுவதில்லை என்றார் அல்மாஸ்.

``நாங்கள் ஒழுங்கற்றவர்கள் அல்லது ஒழுக்கம் இல்லாதவர்கள் என எப்படிக் கூறலாம்? நாங்கள் படிக்கட்டில் அமர்ந்திருக்கும் புகைப்படம் (சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது) ஏனெனில், ஹிஜாப் அணியாமல் வகுப்புகளில் கலந்துகொள்ள துணை ஆணையர் எங்களை அனுமதித்ததாக ஒரு செய்தி இருந்ததால் அந்த படத்தை எடுத்துப் பகிர்ந்தோம். எனவே, நாங்கள் உள்ளே இல்லை என்றும், அந்தச் செய்தி போலியானது என்றும் கூறவே எங்கள் பெற்றோரின் செல்போனில் புகைப்படம் எடுத்தோம்.

வாயிலுக்கு வெளியே காத்திருப்பதைப் படம் எடுத்த நாளில், நாங்கள் துணை ஆணையரிடம் எங்கள் நிலையை விளக்கச் சென்றோம். அதனால் பள்ளிக்குள் வர தாமதமானதாக அல்மாஸ் தெரிவித்தார்.

`அன்றுதான், எங்கள் நான்கு பேரை மட்டும் உள்ளே அழைத்துச் சென்று மன்னிப்புக் கடிதத்தில் கையெழுத்துப் போட வற்புறுத்தினார்கள். படிக்கட்டு படம் தவறானது என்று நாங்கள் கூற வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். நாங்கள் கடிதங்களில் கையெழுத்திட வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்தினர் வலியுறுத்தினர்.

அந்தக் கடிதங்களில் கையெழுத்திடும்படி எங்கள் பெண்கள் மிரட்டப்பட்டனர் என்று கூறும் அல்மாஸ், தாம் CFI அமைப்பில் உறுப்பினராக இல்லை என்றும் கூறினார். பெற்றோருடன் நடத்திய பேச்சுக்கள் நேர்மறையான முடிவுகளைத் தராததால், சிஎஃப்ஐ அமைப்பைத் தொடர்பு கொண்டதாகவும் அவர் கூறினார்.

டிசம்பர் 27ஆம் தேதி மாணவர்கள் ஹிஜாப் அணிந்திருந்தால் வகுப்பிற்குச் செல்லக் கூடாது என அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது, சிஎஃப்ஐ அமைப்பினர் நிர்வாகத்திடம் சென்று பேசினர். நாங்கள் கூடுதல் துணை ஆணையர் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகளிடம் சென்றோம், ஆனால் தரை மட்டத்தில் எதுவும் மாறவில்லை," என்கிறார் CFI அமைப்பின் மசூத் மன்னா.

``எந்தப் புத்தகத்திலும் ஆவணத்திலும் ஹிஜாப் தடை செய்யப்பட்டதாக எந்த விதியும் இல்லை. தடை என்று எழுத்துபூர்வமாக கொடுக்கவும் அவர்கள் மறுத்துவிட்டனர்.

அனுமதித்தால், காவி சால்வை (சிக்கமகளூரு கல்லூரி போல) அணிய வேண்டும் என்ற கோரிக்கை எழும் என்று மட்டுமே எங்களிடம் கூறப்பட்டுள்ளது,'' என்றார் மசூத்.
அடுத்து என்ன?

ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வி அமைச்சர் பி.சி. நாகேஷ் பிபிசி ஹிந்தியிடம் இந்த விவகாரம் பற்றிக் கூறுகையில், ``முழுப் பிரச்னை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளேன். இது அடிப்படையில் அரசியல். அடுத்த ஆண்டு தேர்தல் வருவதால் இதெல்லாம் நடக்கிறது என்றார்.

(அமைச்சர் வெளிப்படையாகவே சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) என்ற கடலோரப் பகுதியில் மக்களைக் கவரும் கட்சியை இலக்கு வைத்துப் பேசுவதாக தெரிந்தது. இந்த SDPI என்பது பாப்புளர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் அரசியல் பிரிவாகும்.)

வேறு வாய்ப்புகள் என்ன உள்ளன?

எனவே, இந்த சிக்கலுக்குத் தீர்வு காண என்ன தேர்வுகள் உள்ளன?

சட்டபூர்வமாகப் பார்த்தால், நீதிபதி ஏ முகமது முஸ்தாக், மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஆடை அணிவது அவர்களின் அடிப்படை உரிமை எனக் கூறியிருக்கிறார். அதேபோல, அனைத்து மாணவர்களும் தமது சீருடையை அணிவதை உறுதி செய்வது பள்ளியின் உரிமையாகும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
Twitter பதிவை கடந்து செல்ல, 2

கிறிஸ்ட் நகர் சீனியர் செகண்டரி பள்ளி ``நிகாப்'' (முக்காடு) அணிந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்கு எதிராக இரண்டு மாணவர்கள் நீதிமன்றத்தை அணுகியதால் 2018ஆம் ஆண்டில் ஒரு தீர்ப்பு அளிக்கப்பட்டது.

பாத்திமா தஸ்னீம் மற்றும் ஹஃப்சா பர்வீன் ஆகியோர் பள்ளிக்கு தலையை மறைக்கும் முக்காடு மற்றும் முழு கை சட்டை அணிய அனுமதிக்கப்படவில்லை என்று புகார் அளித்தனர். ஆனால், அவை தமது ஆடைக் கட்டுப்பாடுகளுக்கு எதிரானவை என பள்ளி நிர்வாகம் கூறியது.

நீதிபதி முஸ்டாக், ``இந்த வழக்கில், பள்ளி நிர்வாகமே ஆதிக்கம் செலுத்துகிறது. பள்ளியை நிர்வகிக்க அதன் நிர்வாகத்திற்கு சுதந்திரம் வழங்கப்படாவிட்டால், அது அவர்களின் அடிப்படை உரிமையைப் பறிக்கும். அரசியலமைப்பு உரிமை என்பது மற்றவர்களின் உரிமைகளை அழிப்பதன் மூலம் ஒரு உரிமையைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை," என்று குறிப்பிட்டார்.

அதேசமயம், ​​தனிப்பட்ட நலன்களுக்கு முன்னுரிமை என வந்தால், அது பெரிய நலன்களைக் கவனத்தில் கொண்டதாக இருக்க வேண்டும். அதுதான் சுதந்திரத்தின் சாராம்சம்,'' என்று தீர்ப்பில் நீதிபதி முஸ்டாக் கூறினார்.

"உரிமைகளுக்காகப் போட்டியிடும் மோதலை தனிப்பட்ட உரிமைகளை மறுப்பதன் மூலம் தீர்க்க முடியாது, ஆனால் நிர்வாகத்துக்கும் மாணவர்களுக்கும் இடையே அத்தகைய உறவைப் பேணுவதற்கான பெரிய உரிமையை நிலைநிறுத்துவதன் மூலம் தீர்க்க முடியும்," என்றும் அந்தத் தீர்ப்பு வலியுறுத்தியது.

முஸ்லிம் கல்விச் சங்கம் (எம்இஎஸ்) இந்தத் தீர்ப்பை உடனடியாக நடைமுறைப்படுத்தியது, இது 100 க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை ஆரம்பப்பள்ளி முதல் தொழில்முறைக் கல்லூரிகள் வரை நடத்துகிறது,

அதன் பள்ளி விதிகள் நூலிலேயே ``நிகாப்'' தடை செய்யப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளது. ஹிஜாபையும் ஆட்சேபிப்பீர்களா என்று கேட்டதற்கு, எம்இஎஸ் தலைவர் டாக்டர் ஃபசல் கஃபூர் பிபிசி ஹிந்தியிடம் ``ஹிஜாப் என்பது ஓர் ஆடையேயன்றி வேறில்லை. இது ஒரு ஃபேஷன் ஸ்டேட்மென்ட்,'' என்றார்.
ஆனால், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் காளீஸ்வரன் ராஜ், கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முரணான கருத்தைக் கொண்டுள்ளார்.

`இந்தத் தீர்ப்பு மாணவர்கள் மற்றும் நிர்வாகத்தின் உரிமைகளை போட்டி உரிமைகளாகக் கருத வகை செய்கிறது. போட்டியிடும் உரிமைகளின் முன்மாதிரியே சரியல்ல. ஒன்று உங்களுக்கு உரிமை இருக்கிறது அல்லது உங்களுக்கு உரிமை இல்லை. அரசியலமைப்பின் 25வது பிரிவு இந்த உரிமையை பாதுகாக்கிறது.
ஒரு மாணவர் ஹிஜாப் அணிந்து வகுப்பில் உட்கார முடியுமா?

``ஒரு ஆசிரியர் தன் முன்னுள்ள மாணவியின் முகபாவனையைப் பார்த்துத் தெரிந்துகொள்ள விரும்பினால், அந்த மாணவி தான் சொன்ன விஷயத்தைப் புரிந்துகொண்டாரா என்ற நோக்கத்தில்தான் அதை எடுத்துக் கொள்ள வேண்டும். அதுதான் விவேகமானது."

"தலையை மட்டும் மூடியிருப்பதாகவும், முகத்தை மறைக்கவில்லை என்றும் மாணவி சொன்னால், அது மிகவும் சூழல் சார்ந்தது.

நான் தலைமுடியை மட்டுமே மூடுகிறேன் (அல்மாஸ் சொன்னது போல்) முகம் தெரியும் என்று மாணவி சொன்னால், ஹிஜாப் அணிய முடியாது என்று ஆசிரியரோ நிர்வாகமோ வலியுறுத்த முடியாது," என்கிறார் ராஜ்.

`ஆனால், ஒரே சீரான தன்மையைப் பராமரிக்க விரும்புவதால், முடியை மட்டும் மறைப்பது அனுமதிக்கப்படாது என்று நிர்வாகம் வலியுறுத்த முடியாது, இது அரசியலமைப்பால் அனுமதிக்கப்படவில்லை. இந்த பன்முகத்தன்மையே அரசியல் சாசனத்தால் பாதுகாக்கப்படுகிறது,'' என்றார் ராஜ்.

அப்படியென்றால், இது இனிமேல் நீதிமன்றத்தில் மட்டுமே வாதிடக்கூடிய விஷயமா எனக் கேட்டபோது, அதற்கும் வாய்ப்பு உள்ளது என்கிறார் வழக்கறிஞர் காளீஸ்வரன் ராஜ்.

கருத்துகள் இல்லை: