BBC : மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் பல்வேறு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த நெடுமுடிவேணு உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 73. இவர் மலையாள பட உலகில் 500க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் மூத்த நடிகர் நெடுமுடி வேணு. இவரது இயற்பெயர் கேசவன் வேணுகோபால். கேரளாவை சேர்ந்த இவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவருக்கு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை நடந்து வந்தது. அதில் இருந்து மீண்டு வந்தவருக்கு மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டு நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று பிற்பகலில் காலமானார்.
தமிழில், 'அந்நியன்', 'பொய் சொல்ல போறோம்', 'இந்தியன்', 'சர்வம் தாளமயம்' உள்ளிட்ட ஏராளமான படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழில் கடைசியாக 'நவரசா' இணையத்தொடரில் தமிழில் நடித்திருப்பார்.
மேலும், மலையாள முன்னணி நடிகர், நடிகைகள் பலரும் சமூக வலைதளங்களில் அவருடைய இறப்புக்கு தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
கலகலப்பான சுபாவம் கொண்டவராக அறியப்படும் வேணு, தமது எளிமையான அணுகுமுறை மூலம் எண்ணற்ற ரசிகர்களை தமது பூர்விக மாநிலமான கேரளாவில் கொண்டிருக்கிறார். நடிப்புத்துறை தவிர, கிராமியப்பாடல்கள், மிருதங்கம் இசைக் கருவியை கையாளுவதிலும் அவர் தேர்ச்சி பெற்றிருந்தார். 1978 முதல் மேடை நாடங்களில் அவர் மும்முரமாக கவனம் செலுத்தி வந்தார்.
திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு 'காலகமுடி' பத்திரிகையில் செய்தியாளராக பணிபுரிந்த அவர், நாடக கலைஞராகவும் இருந்திருக்கிறார்.
திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல், 'தீர்த்தம்', 'சவிதம்' உள்ளிட்ட சில மலையாள படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார். சில சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ள இவர் 1989ம் ஆண்டு மலையாளப் படமான, 'பூரம்' மூலமாக இயக்குநர் அவதாரமும் எடுத்துள்ளார்.
மலையாளத்தில் இவர் இயக்குநர் ஜி. அரவிந்தன் இயக்கிய தம்பு என்ற படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
1990, 2003 மற்றும் 2006ஆம் ஆண்டுகளில் வெளிவந்த இவரது படங்களுக்கு சிறந்த குணச்சித்திர நடிகர், நடுவர் குழு சிறப்பு விருது, 'மினுக்கு' மலையாள படத்திற்காக விருது என மூன்று தேசிய விருதுகளை பெற்றிருக்கிறார். மேலும், சிறந்த நடிகராக கேரள அரசின் மாநில விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
2017இல் வெளிவந்த 'Chaurahen' என்ற ஆங்கில படத்திலும் அவர் நடித்திருந்தார்.
'நவரசா' இணையத்தொடருக்கு பிறகு, தமிழில் வெளிவர இருக்கும் 'இந்தியன்2' படத்தில் நடித்திருக்கிறார்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், மணிஷா கொய்ராலா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்து வெற்றியடைந்த இந்த படத்தின் முதல் பாகத்தில் கிருஷ்ணசாமி என்ற போலீஸ் கதாபாத்திரத்தில் இவர் நடித்தது பரவலாக பேசப்பட்டது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் அவர் நடித்திருந்தார்.
மலையாளத்தில் இவர் மராக்கர்: அரபிக்கடலிண்டே சிம்மம் மற்றும் பிரியதர்ஷன் இயக்கிய திரையில் இன்னும் வெளிவராத படங்களில் நிடித்திருந்தார். அவரது மரணம் மலையாள திரையுலகிலும் அவரை நன்கறிந்த தமிழ் திரையுலக பிரபலங்கள் மத்தியிலும் சோகத்தை ஆழ்த்தியிருக்கிறது.
இவருடைய மனைவி டிஆர். சுஷீலா, மகன்கள் உன்னி மற்றும் கண்ணன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக