வெள்ளி, 15 அக்டோபர், 2021

தடை நீங்கியது: கோவில்கள் திறப்பு- தரிசனத்திற்காக திரண்ட பக்தர்கள்

 மாலைமலர்  : சென்னை:  கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்கள் மூடப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் இன்று முதல் அளிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கு தளர்வில் கோவில்கள் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.
அதன்படி தமிழகம் முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபாட்டுக்காக அனுமதிக்கப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் இன்று கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.  சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீசுவரர் கோவிலில் இன்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தடுப்பு வேலி அமைத்து பக்தர்களை நிறுத்தி தனித்தனியாக தரிசனத்துக்கு அனுமதித்தனர். பக்தர்கள் கூட்டமாக சென்று தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. பல மாதங்களுக்கு பிறகு வெள்ளிக்கிழமை கோவில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் ஆர்வமாக வந்தனர்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சாமி தரிசனம் செய்ய திரண்ட பக்தர்கள்

இதேபோல் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மயிலாப்பூர் சாய்பாபா கோவில், கோடம்பாக்கம் அய்யப்பன் கோவில், வடபழனி முருகன் கோவில், பாரிமுனை காளிகாம்பாள் கோவில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் என சென்னையில் உள்ள அனைத்து கோவில்களிலும் இன்று பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

காஞ்சிபுரம் காமாட்சி கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவிலுக்குள் சென்று வழிபட்டனர். இதேபோல் ஏகாம்பரநாதர் கோவில், அத்திவரதர் பெருமாள் கோவில் என அனைத்து கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நீண்ட நாட்களுக்கு பிறகு வெள்ளிக்கிழமையான இன்று திறக்கப்பட்டதை முன்னிட்டும், விஜயதசமியை முன்னிட்டும் வழக்கத்தை விட அதிகாலையிலேயே திரளான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் தரிசனம் செய்ய தடை நீக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக வடநாட்டை சேர்ந்த பக்தர்கள் உள்ளிட்ட பலர் அக்னிதீர்த்த கடலில் நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்த பக்தர்கள்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இன்று மாலை பரிவேட்டை திருவிழா நடக்கிறது. இதையொட்டி காலையில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

இதில் கலந்துகொள்ள காலையிலேயே ஏராளமான பெண்கள் கோவிலுக்கு வந்தனர். நீண்ட வரிசையில் நின்று அவர்கள் சாமி கும்பிட்டனர்.

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவிலிலும் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை முருகன் கோவிலில் விஜயதசமி தினமான இன்று அதிகாலை முதலே பக்தர்கள் குவியத் தொடங்கினர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமியை வழிபட்டனர். இதன் காரணமாக கோவில் வளாகத்திலும், மலையடிவாரத்திலும் பக்தர்கள் கூட்டத்தை காண முடிந்தது.

பேரூர் பட்டீஸ்வரர், ஆனைமலை மாசாணியம்மன், மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன், கோவை கோணியம்மன், தண்டுமாரியம்மன், காரமடை அரங்கநாதர் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவில்களிலும் பக்தர்கள் கூட்டத்தை காண முடிந்தது.

மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தாரமங்கலம் கைலாசநாதர், மேச்சேரி பத்திர காளியம்மன் கோவில், சேலம் கோட்டை அழகிரிநாதர், சுகவனேஸ்வரர் கோவில்கள் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில், நரசிம்ம மூர்த்தி மற்றும் நாமகிரி தாயார் கோவில்கள், திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் இன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில், அவினாசி அவினாசிலிங்கேஸ்வரர் கோவில், திருப்பூர் ஈஸ்வரன் கோவில், கோட்டை மாரியம்மன் கோவில், உடுமலை அமணலிங்கேஸ்வரர் கோவில், ஊத்துக்குளி சுக்ரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் வழிபட பக்தர்கள் அதிகம் பேர் வந்தனர்.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் நீண்ட நாட்களுக்கு பின்னர் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சென்று சுவாமி நெல்லையப்பர்- காந்திமதி அம்மனை தரிசித்து வருகின்றனர். தென்காசியில் பல நூறு ஆண்டுகள் பழமையான காசி விஸ்வநாதர் கோவில், அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகிறார்கள்.

கடலூர் மாவட்டத்தில் கடலூர் திருப்பாப்புலியூர் பாடலீஸ்வரர் கோவில், வீரஆஞ்சநேயகர் கோவில், வரதராஜபெருமாள் கோவில், பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ் வரர் கோவில்களில் இன்று காலை பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில், செஞ்சி சிங்கவரம் பெருமாள் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. உள்ளூர் பக்தர்கள் குறைவான எண்ணிக்கையிலேயே வந்திருந்தனர். சமயபுரம் மாரியம்மன் கோவிலிலும் கூட்டம் குறைவாகவே இருந்தது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரியம்மன் கோவிலில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் வரத்தொடங்கினர். நேரம் செல்ல செல்ல ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வரத் தொடங்கினர்.

பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலுக்கும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

தமிழக அரசு அனுமதி அளித்ததையடுத்து தஞ்சை பெரியகோவில், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்கா, எட்டுக்குடி முருகன், சிக்கல் சிங்காரவேலர் கோவில், நீலாயதாட்சி அம்மன் கோவில் என அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டன.

அனைத்து வழிபாட்டு தலங்களிலும் காலை முதலே பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். பழனி முருகன் கோவிலிலும் இன்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்தனர். அவர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில், வள்ளிமலை, ரத்தினகிரி முருகன் கோவில்களிலும் ஏராளமான பக்தர்கள் இன்று தரிசனம் செய்தனர்.


 

கருத்துகள் இல்லை: