புதன், 13 அக்டோபர், 2021

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்- 1,145 இடங்களில் வென்று தி.மு.க. இமாலய சாதனை

May be an image of text that says 'புதிய ஊரக உள்ளாட்சித் தேர்தல் தலைமுறை 2021 ண் ன உடனுக்குடன் மாவட்ட கவுன்சிலர்கள் 140/140 முன்னிலை நிலவரம் நேரம் 09.10AM திமுக 139 அதிமுக MET EN 1 அமமுக மநீம நாம் தமிழர் கட்சி பாமக தேமுதிக S பிற Follow 13|10/2021 www.puthiyathalaimurai.com'

 மாலைமலர் :  மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் என மொத்தம் 1,521 இடங்களில் தி.மு.க. கூட்டணி 1,145 இடங்களில் வென்றுள்ளது. அ.தி.மு.க. 214 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.
சென்னை:  மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் ஊரக உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டிருந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.
கடந்த 6-ந்தேதியும், 9-ந்தேதியும் 2 கட்டங்களாக தேர்தல்கள் நடந்தன. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் என 4 பதவிகளுக்கு இந்த தேர்தல் நடந்தது.
இதன் ஓட்டு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆரம்பத்தில் இருந்தே அனைத்து மாவட்ட ஊராட்சிகளிலும், ஒன்றிய ஊராட்சிகளும் தி.மு.க. முன்னிலையில் இருந்தது. தொடர்ந்து இது நீடித்தது.
மொத்தம் தேர்தல் நடந்த 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் தி.மு.க. 138 இடங்களை கைப்பற்றி உள்ளது.
அ.தி.மு.க.வுக்கு 2 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அதாவது செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு இடத்தில் அ.தி.மு.க. வென்றுள்ளது. மற்ற கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 கவுன்சிலர் பதவிகளையும் தி.மு.க. கைப்பற்றி இருக்கிறது. இதே போல் வேலூர் மாவட்டத்திலும் மொத்தம் உள்ள 14 இடங்களையும், ராணிப்பேட்டையில் மொத்தம் உள்ள 13 இடங்களையும், கள்ளக்குறிச்சியில் மொத்தம் உள்ள 19 இடங்களையும், திருப்பத்தூரில் மொத்தம் உள்ள 13 இடங்களையும், நெல்லையில் மொத்தம் உள்ள 12 இடங்களையும், தென்காசியில் மொத்தம் உள்ள 14 இடங்களையும் தி.மு.க. கைப்பற்றி உள்ளது. 

இதன்படி 7 மாவட்டங்களில் தி.மு.க. ஒட்டு மொத்த கவுன்சிலர் பதவிகளையும் தன்வசப்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 16 இடங்களில் தி.மு.க. 15 இடங்களையும், அ.தி.மு.க. ஒரு இடத்தையும் வென்றுள்ளன.

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 28 கவுன்சிலர் பதவிகளில் தி.மு.க. 27 இடங்களையும், அ.தி.மு.க. ஒரு இடத்தையும் கைப்பற்றி இருக்கின்றன.

திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 13 இடங்களில் தி.மு.க. 13 இடங்களையும் கைப்பற்றி உள்ளது.

ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடந்த 1,381 இடங்களில் 1,368 பதவிகளுக்கான முடிவுகள் வெளிவந்துள்ளன. இதில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 1,007 இடங்களையும், அ.தி.மு.க. 214 இடங்களையும், பா.ம.க. 45 இடங்களையும், அ.ம.மு.க. 5 இடங்களையும், தே.மு.தி.க. 1 இடத்தையும் கைப்பற்றி இருக்கின்றன. சுயேட்சைகள் மற்றும் இதர கட்சிகள் 96 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

9 மாவட்டங்களிலும் உள்ள ஒன்றியங்களில் கிட்டதட்ட அனைத்து ஒன்றியங்களையுமே தி.மு.க. கைப்பற்றுகிறது. ஒன்றியங்களை பொருத்தவரை அனைத்து இடங்களிலும் தி.மு.க. 90 சதவீதத்துக்கு மேலாக வெற்றி பெற்று இருக்கிறது.

மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் இரு பதவிகளையும் சேர்த்து 95 சதவீத இடங்களை தி.மு.க. கைப்பற்றி உள்ளது.

அதே நேரத்தில் பிரதான எதிர்கட்சியான அ.தி.மு.க. மிக குறைந்த இடங்களையே கைப்பற்றி உள்ளது. பிற கட்சிகளை பொருத்தவரையில் பா.ம.க. ஓரளவு இடங்களை கைப்பற்றி உள்ளது. அந்த கட்சிக்கு 45 இடங்கள் கிடைத்துள்ளன. ஆனால் மற்ற கட்சிகள் அனைத்தும் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளன.

மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் என மொத்தம் 1,521 இடங்களில் தி.மு.க. கூட்டணி 1,145 இடங்களில் வென்றுள்ளது. அ.தி.மு.க. 214 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.

ஏற்கனவே 2019-ம் ஆண்டு டிசம்பரில் நடந்த 27 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. பெரிய வெற்றியை பெற்று இருந்தாலும் இந்த அளவுக்கு மிக அதிக இடங்களை கைப்பற்றவில்லை. ஆனால் இந்த 9 மாவட்ட தேர்தலில் தி.மு.க. பெரும்பாலான இடங்களை வாரிசுருட்டி இருக்கிறது. இது தி.மு.க.வுக்கு கிடைத்த இமாலய வெற்றியாக கருதப்படுகிறது.

சட்டசபை தேர்தலில் வென்று தி.மு.க. ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் நடந்துள்ளது. அதில் கிடைத்துள்ள வெற்றி தி.மு.க. அரசுக்கு மக்கள் கொடுத்த மிகப்பெரிய அங்கீகாரமாகவும் கருதப்படுகிறது.


கருத்துகள் இல்லை: