வியாழன், 14 அக்டோபர், 2021

275 படங்களில் நடித்து சிவாஜி கணேசன் இயக்கிய ஒரே படம் ரத்தபாசம் .. வெற்றி படம்.

 cinemapettai.com  :  சிவாஜி கணேசன் என்று கூறுவதை விட நடிகர் திலகம் என கூறுவதுதான் சரியாக இருக்கும். தமிழ் சினிமாவின் அடையாளமாகவே வாழ்ந்து வந்த சிவாஜி உயிருடன் இல்லை என்றாலும், அவர் நடித்த படங்கள் மூலமாக நம்முடன் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். நடிப்பிற்காக தன்னையே அர்ப்பணித்த ஒரு சிறந்த நடிகர் சிவாஜி மட்டுமே.
பராசக்தி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சிவாஜி கணேசன் தமிழில் மட்டும் சுமார் 275 படங்களில் நடித்துள்ளார். இதுதவிர தெலுங்கில் 10, ஹிந்தியில் 2, மலையாளத்தில் 1 என மொத்தம் 288 படங்களில் சிவாஜி கணேசன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இவரது நடிப்பு திறமையை பாராட்டி இவருக்கு பல விருதுகள் வழங்கப்பட்டு உள்ளது. கலைமாமணி, பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், செவாலியர் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ள ஒரே ஒரு நடிகரும் சிவாஜி கணேசன் மட்டும் தான். என்னதான் எண்ணற்ற படங்களில் நடித்திருந்தாலும், இவருக்கும் படம் இயக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது.
அந்த வகையில் சிவாஜி கணேசன் ஒரே ஒரு படம் என்றால் அது ரத்தபாசம் படம் தான். கடந்த 1980ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி வெளியான ரத்தபாசம் படத்தை சிவாஜி கணேசன் இயக்க, ராம்குமார் கதை எழுதி இருந்தார். சிவாஜி கணேசன், நம்பியார், மேஜர் செளந்தரராஜன், நடிகை ஸ்ரீபிரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார்.

ஆனால் சிவாஜி தான் இப்படத்தை இயக்கினார் என்பது பலருக்கும் தெரியாது. ரத்தபாசம் படத்தின் இறுதியில் சிவாஜியின் போட்டோவை காட்டி அறிவித்திருப்பார்களாம். நடிகர் திலகமாக வலம் வந்த சிவாஜி கணேசன் இயக்குனராக வேண்டும் என்ற அவரது ஆசையையும் நிறைவேற்றி விட்டே மண்ணைவிட்டு பிரிந்துள்ளார்.

கருத்துகள் இல்லை: