RS Prabu : ஏர் இந்தியா, பிஎஸ்என்எல், எல்ஐசி, இந்தியன் இரயில்வே என ஒவ்வொன்றாக அரசாங்கம் விற்கிறது என்று பலர் வருத்தப்படுகின்றனர்.
அரசாங்கத்துக்கு என்று சொந்தமாக ஒரு விமான கம்பெனி கூட இல்லாத நாடாக மாறப்போகிறோம் என்றும் கருத்து சொல்லப்படுகிறது.
முதலாளிகள் கொடூரமானவர்கள் என்ற கருத்தைத் தவிர அரசு ஊழியர் வர்க்கம் இந்த சமூகத்துக்கு எதையுமே கற்றுத்தரவில்லை. உலகமயமாக்கலுக்குப் பிறகுதான் கொஞ்சமாவது ஆடி அசைந்து வேலை செய்யும்படி நிர்பந்திக்கப்பட்டிருக்கிறது.
சந்தையில் போட்டியிட்டு இலாபம் சம்பாதிக்காவிட்டாலும் தன்னைத்தானே தற்காத்துக்கொள்ளும் அளவுக்குக்கூட நிர்வகிக்கப்படவில்லை.
அப்படிப்பட்ட நிறுவனங்களுக்கு ஒவ்வொரு முறையும் மக்களின் வரிப்பணத்தை வாரி வழங்கிடுவது தொட்டதுக்கெல்லாம் வரி கட்டி, வாழ்க்கையில் குறைந்தபட்ச தரத்துடன், தன்மானத்துடன் வாழ வழிவகை செய்யப்படாத நடுத்தர வர்க்கத்துக்குச் செய்யும் துரோகமாகும்.
டாடா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை அரசாங்கம் கையகப்படுத்தித்தான் இந்தியன் ஏர்லைன்ஸ் உருவாக்கப்பட்டது. அப்போது துணிச்சலாக, டாடாவுக்குப் போட்டியாக தென்னிந்திந்தியாவின் முதல் தனியார் ஏர்லைன்ஸ் என்ற பெருமையுடன் கோயமுத்தூரில் எல்ஜி குழுமம் வரதராஜ் ஏர்லைன்ஸ் என்ற நிறுவனத்தை உண்டாக்கியிருந்தது.
டகோட்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை வாங்கி எல்லாவிதமான ஆரம்பகட்ட வேலைகள் முடிந்தபிறகும் லைசன்ஸ் கிடைக்காததால் வரதராஜ் ஏர்வேஸ் பறக்காமல் தரையிலேயே நின்றுபோனது.
ஜி. டி. நாயுடு, ஜெர்மனியின் பென்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கோயமுத்தூரில் டீசல் என்ஜின், கார், லாரிகளைத் தயாரிக்க நினைத்த எதுவும் லைசன்ஸ் வழங்கப்படாமலேயே இழுத்தடிக்கப்பட்டது. தனியார் கம்பெனிகள் கார் உற்பத்தி செய்தால் வரி ஏய்ப்பு செய்துவிடுவார்களாம்.
அவருடைய இடத்தையும், பணத்தையும் கொடுத்து, நூலகத்துக்குப் புத்தகங்கள் வரைக்கும் தானே பார்த்துப் பார்த்து வாங்கி அப்போதைய கவர்னர் ஆர்தர் ஹோப் பெயரில் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியை உருவாக்கியிருந்தார். அந்த இடம்தான் இப்போதைய ஹோப் காலேஜ்.
அந்த பாலிடெக்னிக் கல்லூரியின் ஆய்வக உபகரணங்கள், டிராக்டர், ஜி. டி. நாயுடுவின் கார் உட்பட பலவும் ஜப்தி செய்யப்பட்டு வருமான வரித்துறையால் ஏலம் விடப்பட்டன. காரணம், அவர் வரி ஏய்ப்பு செய்துவிட்டாராம். ஒரு நிறுவனத்தின் 70% வருமானத்தை வரியாக வாங்கிக் கொண்டால் கம்பெனி எப்படி நடத்த முடியும்?
சமகால உதாரணம் ஒன்றிற்கு வருவோம். ஏழெட்டு வருடங்களுக்கு முன்னர் ஸ்லீப்பர் பேருந்து ஒன்று தீப்படித்து எரிந்ததில் பயணிகள் பலர் இறந்துவிட்டனர். அப்போது ஜெயலலிதா, ஆம்னி பேருந்துகளில் படுக்கையுடன் கூடிய ஸ்லீப்பர் பஸ்களைத் தமிழகத்தில் பதிவுசெய்யத் தடை செய்து ஆடையிட்டார். இன்றுவரை அந்தத் தடை நீடிக்கிறது.
பதிவு செய்யத்தானே தடை, ஓட்டுவதற்கு இல்லையே. அதனால் எல்லா தனியார் பேருந்து நிறுவனங்களும் கர்நாடகா, நாகாலாந்து, புதுச்சேரி, ஒடிசாவில் பதிவு செய்யப்பட்ட ஸ்லீப்பர் பேருந்துகளை டூரிஸ்ட் பெர்மிட் போட்டு இப்போது தமிழகத்தில் இயக்குகின்றனர். ஒரு முட்டாள்தனமான முடிவால், அதை மறுபரிசீலனை செய்யமாட்டோம் என்கிற அரசு நிர்வாகத்தின் அடவாதத்தால் பல கோடி ரூபாய் அரசு கருவூலத்துக்கு வருமான இழப்பு. சந்தையில் தேவை இருக்கும்போது சட்டத்தில் உள்ள ஓட்டைகளைத் தனியார் பயன்படுத்தவே செய்வர். இப்போது குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளை அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிமுகப்படுத்தினாலும் ஸ்லீப்பர் பேருந்துகளை இறக்க முடியாது; அதற்கு ஒரே வழி கர்நாடகா அல்லது புதுச்சேரியில் பதிவு செய்து இயக்கலாம். எவ்வளவு அவமானகரமான விஷயம்?
அரசாங்கம் தொழில் நிறுவனங்களை நடத்தவே கூடாது என்ற வாதமும் ஏற்கத்தக்கதல்ல. ஆனால் தனியார் நிறுவனங்களை செயல்படவே அனுமதிக்காத சட்டதிட்டங்கள், சிவப்பு நாடா நடைமுறைகள் ஒழிந்தாக வேண்டும். இல்லாவிட்டால் அரசு நிறுவனங்கள் ஒவ்வொன்றாக மூடப்படும்போது பொதுமக்களின் ஆதரவு எங்கிருந்து வரும்?
மக்களுக்குக் கஷ்ட காலத்தில் அரசாங்க நிறுவனங்களே உதவி செய்கின்றனவாம். தனியார் நிறுவனங்கள் இலாபம்தான் முக்கியம் என்று ஓடி விடுவார்களாம். வருடத்தில் ஒருநாள் உதவி செய்துவிட்டு மீதி 364 நாள் abuse செய்வது எல்லாம் எதில் சேரும்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக