மாலைமலர் : ஊழியர்களை மிரட்டுதல், வலுக்கட்டாயமாக விதிகளை மாற்றுதல் போன்ற தலிபான் தலையீட்டால் காபூலில் இருந்து விமான இயக்கத்தை நிறுத்தியது பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றி, அதன்பின் ஆட்சியை பிடித்தனர். இதனால் காபூலில் உள்ள பெரும்பாலான மக்கள் வெளிநாடு சென்றுவிட்டனர். வெளிநாட்டு விமான ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் விமான போக்குவரத்தை நிறுத்தின.
பாகிஸ்தான் தொடக்கத்தில் இருந்து தலிபான் அரசுக்கு ஆதரவு அளித்து வருகிறது. பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் காபூலில் இருந்து விமானங்களை இயக்கி வந்தது. இந்த ஒரு விமான நிறுவனம்தான் சர்வதேச விமானங்களை இயக்கி வந்தது.
இந்த நிலையில் காபூல் விமான நிலையத்தில் இருந்து விமானங்களை இயக்குவதை நிறுத்தியுள்ளதாக பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன் அறிவித்துள்ளது.
தலிபான்கள் ஊழியர்களை மிரட்டுதல், வலுக்கட்டாயமாக விதிகளை மாற்றுதல், அதிகப்படியான தலையீடு ஆகியவற்றால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தலிபான் ஆட்சியை பிடிப்பதற்கு முன்பு இருந்த டிக்கெட் விலையில் விமானங்களை இயக்க வேண்டும் என தலிபான் அரசு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
முன்னதாக 120 முதல் 130 அமெரிக்க டாலர் வரை இருந்த விமான டிக்கெட்டின் விலை தற்போது 2500 அமெரிக்க டாலர் வரை உயர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக