இந்த ஒத்திகை திருப்திகரமாக இருந்ததால் மத்திய அரசு அடுத்த கட்ட நடவடிக்கையாக புனேயில் உள்ள சீரம் நிறுவனத்தில் இருந்து அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா தடுப்பூசி மருந்துகளை விமானம் மூலம் அனுப்பி வைத்தது.
சென்னைக்கு கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் 5 லட்சத்து 36 ஆயிரத்து 500 டோஸ்கள் வந்தது.
இதே போல் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து பாரத் பயோடெக் நிறுவனத்தின் 20 ஆயிரம் கோவேக்சின் தடுப்பு மருந்துகளும் பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டது.
அவை அனைத்தும் சென்னையில் குளிர்சாதன அறையில் பத்திரமாக பாதுகாப்பாக வைக்கப்பட்டு அங்கிருந்து ஒவ்வொரு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி மருந்துகள் ஒவ்வொரு கிடங்கிலும் குளிர்சாதனை அறையில் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. குளிர்சாதன அறைக்கு 24 மணி நேரமும் தடையின்றி மின்சப்ளை கிடைக்கும் வகையில் ஜெனரேட்டர் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி மருந்துகள் அனைத்தும் நாளை அதிகாலையில் முகாம்கள் நடைபெறும் அந்தந்த மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இதற்காக
மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் சுகாதார பணியாளர்கள் அடங்கிய 10 பேர் கொண்ட
குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தடுப்பூசி போடுவதற்கான அனைத்து
முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்.
பிரதமர் மோடி நாளை காலை 10.30 மணியளவில் டெல்லியில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி நடைபெறும்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள மையத்திற்கு சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைக்கிறார். இதற்காக அவர் இன்று மாலை மதுரை சென்று தங்கி நாளை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இதற்காக தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் மதுரை செல்லும் வழியில் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி மருந்து நாளை முதல் சுகாதாரப் பணியாளர்களுக்கு செலுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் 3 ஆயிரம் மையங்களிலும், தமிழகத்தில் 166 மையங்களிலும் தடுப்பூசி போடப்படும்.
முதல் கட்டமாக பெயர்களை முன்பதிவு செய்த சுகாதார பணியாளர்கள் அவரவர் விருப்பத்தின் பேரில் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்வார்கள்.
கர்ப்பிணிகள், சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படாது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் தடுப்பூசி போடப்படும். இலவசமாகவே தடுப்பூசிகள் போடப்படுகிறது.
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் சுமார் 30 நிமிடம் பக்கத்து அறையில் அமர வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள். அவர்களுக்கு பக்க விளைவு ஏதும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்த பிறகே அனுப்பி வைக்கப்படுவார்கள்.
தமிழகத்தில் தற்போது வரை 4 லட்சத்து 39 ஆயிரத்து 500 பேர் தடுப்பூசி போட முன்பதிவு செய்துள்ளனர்.
அடுத்த கட்டமாக சமூகத்தில் முதல் நிலை பணியில் உள்ளவர்களுக்கும், காவல் துறையில் விருப்பம் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படும். தடுப்பூசி என்பது நோய் வராமல் தடுக்க மட்டுமே. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை கட் டாயம் கடைபிடிக்க வேண்டும்.
தடுப்பூசிகள் 2 முறை 28 நாட்கள் இடைவெளியில் இலவசமாக போடப்படும். ஒரே நிறுவனத்தின் தடுப்பூசி தான் இரண்டு முறையும் போடப்படும். வேறு நிறுவனத்தின் தடுப்பூசி போடப்படாது.
தடுப்பூசி போட்ட பிறகு குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் மது அருந்தினால் பாதிப்பு ஏற்படுமா? என அறிவியல் ரீதியான விளக்கம் எதுவும் இல்லை. மது அருந்துவது எந்த காலத்திலும் உடலுக்கு கேடு விளைவிக்கும்.
கொரோனா தடுப்பூசி போடும் பணியை வாரத்தில் 4 நாட்கள் நடத்த வேண்டும் என மத்திய அரசு கூறியதன் காரணம் மற்ற பணிகள் பாதிக்கப்பட கூடாது என்ப தற்காகத்தான்.
தமிழகத்திற்கு தற்போது குறைந்த அளவில்தான் தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளதால் சில நாட்களிலேயே தடுப்பூசி போடும் பணி முடிக்கப்பட்டு விடும்.
தமிழகத்தில் கொரோனா தாக்கம் மற்றும் பரவல் வெகுவாக குறைந்துள்ளது. இருப்பினும் சுகாதாரத்துறை வகுத்துள்ள தற்காப்பு வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாததால்தான் வெளிநாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று பரவியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக இடைவெளியை கடைபிடிப்பதில் பலர் மெத்தனமாக இருந்து வருகிறார்கள். இது மிகவும் ஆபத்தானது.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக