இந்த நிலையில் 3-வது நாளான நேற்று முதலமைச்சர் நாராயணசாமி தர்ணா போராட்டத்தை முடித்துக்கொண்டார். அதேசமயம் நேற்று இரவு முதல் சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி, சட்டப்பேரவை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தினை தொடங்கினார். ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 2020-21 நிதியாண்டில் ரூ.18 கோடியில் அடிப்படை வசதி பணிகள் மேற்கொள்வதற்கான கோப்பு சமர்ப்பிக்கப்பட்டதில் ரூ.6 கோடி மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 12 கோடியை அனுமதிக்க வேண்டும், ஏழை ஆதி திராவிடர்களுக்கான வீடு கட்டும் மானியம் 4 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சமாக உயர்த்துதல், ஏழைப்பெண்கள் திருமண உதவித்தொகை ரூ.75,000-த்தினை ஒரு லட்சமாக உயர்த்துதல், கிருமாம்பாக்கத்தில் பல்நோக்கு திருமண மண்டப கட்டுமானத்திற்கான நிலுவையில் உள்ள பில்கள் ரூ.5 கோடிக்கு ஒப்புதல், உண்டு உறைவிடப் பள்ளி கட்டுமான பணிக்கு நிதி வழங்கல், முதியோர் பென்ஷன் திட்டத்தின் கீழ் 10,000 கூடுதல் பயனாளிகளைச் சேர்த்தல், புதுச்சேரி துறைமுகத்தின் மேம்பாட்டிற்காக CSS நிதி மற்றும் மத்திய அரசின் ரூ.305 கோடி நிதி அளித்தல், சட்டரீதியான நிலுவைத் தொகை தீர்வை மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கான மானிய உதவி, ஸ்பின்கோவுக்கு கூடுதல் மானியம் ஒதுக்கீடு, சுதேசி, பாரதி மற்றும் AFT ஆலைகளை மீண்டும் இயக்குதல், கூட்டுறவு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் நிலுவைகள் வழங்குல், வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு விடுபட்ட மாதங்களுக்கான இலவச அரிசி விநியோகம் / நேரடி பணப்பரிமாற்றம், பிற்படுத்தப்பட்ட பிரிவினர், சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகம் மற்றும் பாட்கோ நிறுவனங்களுக்கு கல்வி மற்றும் பிற கடன்கள் வழங்கல், நியாயவிலைக் கடை ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்தல், பாப்ஸ்கோ நிறுவனம் இயங்க மானிய உதவி அளித்தல் உள்ளிட்ட தனது துறை தொடர்பான நிலுவையில் உள்ள 15 கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்வரை சட்டசபையில் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து நேற்று இரவு உள்ளிருப்பு போராட்டம் தொடங்கினார்அவரை சந்தித்து புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஏவி.சுப்பரமணியம், அரசு கொறடா அனந்தராமன் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயமூர்த்தி, விஜயவேணி ஆகியோரும் தத்தமது சட்டமன்றத் தொகுதி கோரிக்கைகளை வலியுறுத்தி அமைச்சர் கந்தசாமியுடன் இன்று காலை முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏக்களை முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகியோர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக மூன்று நாட்களாக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில், தற்போது சட்டசபை வளாகத்துக்குள்ளேயே அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக