பொங்கல் திருநாளை முன்னிட்டு அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. உலக புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி, தமிழக அரசின் விரிவான கரோனா தடுப்பு வழிகாட்டுதலுடனும், பல்வேறு கட்டுப்பாடுகளுடனும் தொடங்கியுள்ளது. அமைச்சர் செல்லூர் ராஜு கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா, திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. சரவணன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் முதலில் பாலகுருநாதன் கோயில் காளை உள்ளிட்ட 4 கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இந்த காளைகள் வாடிவாசலில் சீறி பாய்ந்தன. ஜல்லிக்கட்டில் 430 மாடுபிடி வீரர்கள், 788 காளைகள் களம் காண இருக்கின்றன. ஜல்லிக்கட்டில் வெல்லும் காளைகள், வீரர்களுக்கு கட்டில், சைக்கிள், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
ஜல்லிக்கட்டு போட்டியைக் காண பார்வையாளர்கள் உடல் வெப்ப பரிசோதனைச் செய்யப்பட்டு தனிமனித இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இதனிடையே, டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் மதுரை வரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினருமான ராகுல்காந்தி, அவனியாபுரத்திற்கு காரில் செல்கிறார். பின்பு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்திற்கு சென்றுப் போட்டியை நேரில் பார்க்கிறார். ராகுலுடன் சேர்ந்து தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்க்கிறார்.
ஜல்லிக்கட்டு
போட்டி, ராகுல் வருகையால் மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த்
தலைமையில் 2,000- க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில்
ஈடுபட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக