வியாழன், 14 ஜனவரி, 2021

முறிவை நோக்கிச் செல்கிறதா திமுக-காங்கிரஸ் கூட்டணி?

டிஜிட்டல் திண்ணை: முறிவை நோக்கிச் செல்கிறதா திமுக-காங்கிரஸ் கூட்டணி?
minnambalam.com : "அதிமுகவுக்கும் பாஜகவுக்குமான கூட்டணி குழப்பங்களுக்குப் பின், பாஜக பொதுச் செயலாளர் சி.டி.ரவி ‘அதிமுகதான் பெரிய கட்சி. அதுதான் முடிவெடுக்க வேண்டும்’ என்று தெரிவித்த பிறகு... ஓரளவுக்கு தெளிவடைந்து கொண்டிருக்கும் நிலையில்... திமுக காங்கிரஸ் கூட்டணியில் பெரிய அளவுக்கு குழப்பங்கள் எழுந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.

கடந்த 2011, 2016 சட்டமன்ற தேர்தல்களில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி பெற்ற இடங்கள் அளவுக்கு இந்த தேர்தலில் கண்டிப்பாக காங்கிரசுக்கு இடங்கள் கொடுக்க மாட்டோம் என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது. மேலும் திமுக தலைவரின் மகன் உதயநிதி ஸ்டாலின் அண்மைக்காலமாக மேடைப் பேச்சுகளில் திமுக வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகளில் திமுகவே தான் போட்டியிட வேண்டும். என்று வெளிப்படையாக பேசி வருகிறார். அதிலும் ஏற்கனவே காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளைக் குறிப்பிட்டே பேசி வருகிறார்.அந்தவகையில் காங்கிரசுக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் 15 இடங்கள் மட்டுமே ஒதுக்க திமுக முன்வந்துள்ளது.       இதைக்கூட தமிழக காங்கிரஸ் தலைவர்களிடம் சொல்லாமல் டெல்லி காங்கிரஸ் மேலிடத்திடம் திமுக தெரிவித்துள்ளது.       திமுகவின் தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரும் காங்கிரஸ் தலைமையிடம் தனக்குள்ள தொடர்புகள் மூலமாக... '2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸுக்கு 15 இடங்கள் தான் திமுக ஒதுக்க முடிவு செய்திருக்கிறது' என்ற தகவலை தெரிவித்திருக்கிறார். அதற்கு காங்கிரஸ் தலைமை அப்படி என்றால் எங்களுக்கு கூட்டணியே தேவையில்லை என்ற நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது.

பிரசாந்த் கிஷோர் மூலமாக இந்த தகவல் ஸ்டாலினை வந்தடைந்த பிறகுதான் அவர் 15 சீட்டுகளில் இருந்து 20 சீட்டுகள் என்று காங்கிரஸுக்கு அடுத்தகட்ட எல்லையை நிர்ணயித்தார். ஆனால் 63, 41 என்று கடந்த தேர்தல்களில் இடங்களை பெற்ற காங்கிரஸ் இப்போது வெற்றி வாய்ப்பு கூடுதலாக இருக்கும் நிலையில் மிகக் குறைவான இடங்களைப் பெறுவதில் தயக்கம் காட்டுகிறது.

இந்த நிலையில்தான் திமுக தலைவர் ஸ்டாலின் புதுச்சேரி மாநில திமுக நிர்வாகிகளிடம், வரும் தேர்தலில் புதுச்சேரியில் திமுக தனித்துப் போட்டியிடுகிறது என்றும், அதற்கான ஏற்பாடுகளை கவனியுங்கள் என்றும் வாய்மொழியாக கூறிவிட்டார். இந்த தகவலும் புதுச்சேரி காங்கிரஸ் மூலமாக தமிழக காங்கிரசை வந்தடைந்துள்ளது. புதுச்சேரியில் கூட்டணி இல்லை என்றால் தமிழகத்தில் மட்டும் எப்படி கூட்டணி இருக்கும் என்ற கேள்வி இயல்பாகவே காங்கிரசார் மத்தியில் எழுகிறது.

இந்த எல்லா நகர்வுகளையும் அறிந்து கொண்டுதான் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி பொங்கல் விழாவுக்காக ஜனவரி 14-ஆம் தேதி மதுரை வருகிறார். அவர் நேரடியாக மதுரை வந்து நான்கு மணி நேரம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளுக்கு செலவிட்டு மீண்டும் டெல்லி திரும்புவதே பயணத்திட்டம். தேர்தல் நேரத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களை ராகுல் சந்திக்க விரும்பாத பின்னணியும் இதுதான். ஆனால் ராகுல்காந்தி பங்கேற்கும் ஜல்லிக்கட்டு விழாவில் உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்கக் கூடும் என்று மதுரையில் இருந்து தகவல்கள் வருகின்றன.

அதாவது 'கூட்டணியிலிருந்து காங்கிரஸை திமுக போகச் சொல்லாது. காங்கிரஸ் தானாகவே சென்றால் அதற்கு திமுக என்ன செய்ய முடியும்?' என்பதுதான் இந்த விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு.

திமுக தொகுதிகள் விஷயத்தில் தனது நிலையில் உறுதியாக இருந்தால் திமுக காங்கிரஸ் கூட்டணி இருக்காது என்பதே தற்போதைய நிலவரம்" என்ற மெசேஜ் கொடுத்து விட்டு ஆஃப்லைன் போனது வாட்ஸ்அப்.

கருத்துகள் இல்லை: