தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் மட்டும் 9 ஆணவக்கொலைகளும் மரணங்களும் நடந்துள்ளன. ஆனால் தமிழக அரசு இவற்றை தடுப்பதில் போதிய ஆர்வமும் அக்கறையும் காட்டவில்லை.
By வினவு செய்திப் பிரிவு - ஒருவர் கனமான சிமிண்ட் கல்லால் பின்னந்தலையில் பலமாக தாக்குகிறார். தாக்கப்பட்ட அந்த இளைஞர் நிலைகுலைந்து கீழே விழுகிறார். முடிவெட்டுகிற அம்பட்ட நாய் நீ, எங்க பொண்ணு உனக்கு கேக்குதா என்று கூறிக்கொண்டே 12 பேர் கொண்ட கும்பல் அந்த இளைஞரை செருப்புக் காலால் எட்டி உதைக்கின்றனர். நெஞ்சில் ஏறி மிதிக்கின்றனர். வயிற்றில் கற்களால் அடித்து காயப்படுத்துகின்றனர். தரதரவென்று இழுத்துச் சென்று மார்பில் கத்தியால் குத்துகின்றனர். வயிற்றிலும் கத்தி குத்து. அந்த இளைஞர் பரிதாபமாக ரத்தம் கசிந்து இறந்து போகிறார்.
இந்த சம்பவம் பிற்பகல் 1.30 மணியளவில் நடக்கின்றது. கொல்லப்பட்ட இடம் கரூர், கல்யாண பசுபதி ஈஸ்வரன் கோவில் எதிரில். கோவிலுக்கும் காவல்நிலையத்திற்கும் இடையில் உயிர்போகும் நிலையில் துடிதுடித்து கிடந்தார் 23 வயது ஹரிஹரன். கல்யாண பசுபதி ஈஸ்வரன் கோவிலை கருமாதி தளமாக மாற்றியிருக்கின்றனர் சாதி வெறி பிடித்த கும்பல்.
ஹரிஹரன் ஏன் கொல்லப்பட வேண்டும்?
எவிடன்ஸ் குழுவினர் களஆய்வில் ஈடுபட்டனர். கரூர், தெற்குத் தெருவில்
வசித்து வருபவர் ஜெயராமன். சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஹரிஹரன்
பொறியியல் பட்டப்படிப்பு முடித்துவிட்டு தனியாக சலூன் கடை வைத்துள்ளார்.
ஹரிஹரனின் வீட்டிற்கு அருகாமையில் தான் வேலன் என்பவர் குடியிருக்கிறார்.
வேலனின் மகள் மீனாவும் ஹரிஹரனும் கடந்த 3 வருடங்களாக காதலித்து
வந்துள்ளனர். இந்த காதலுக்கு மீனாவின் குடும்பத்தினர் கடும் எதிர்பபு
தெரிவித்து வந்துள்ளனர்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மீனாவின் தந்தை வேலன், பெரியப்பா சங்கர், சித்தப்பா முத்து, தாய்மாமன்கள் கார்த்திகேயன், வெள்ளைச்சாமி ஆகிய 5 பேர் ஜெயராமன் வீட்டிற்கு சென்று, உங்கள் மகனை ஒழுங்காக இருக்க சொல்லுங்கள். நாவிதர் வேலையை மட்டும் பார்க்க வேண்டும். உங்கள் சாதி என்ன எங்கள் சாதி என்ன? உங்கள் மகன் எங்கள் பெண்ணிடம் பழகுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நடப்பதே வேறு என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனை அறிந்த மீனா அலைபேசி மூலமாக ஹரிஹரனின் தாயார் சித்ராவை தொடர்பு கொண்டு, உங்கள் மகனை நான் காதலிக்கிறேன். என்ன நடந்தாலும் அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் 06.01.2021 அன்று பிற்பகல் 1.30 மணியளவில் 12 பேர் கொண்ட கும்பல் ஹரிஹரனை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர். பொது மக்கள் முன்னிலையில் பட்டப்பகலில் இந்த கொலை நடந்திருக்கிறது.
சங்கர் ஆணவக்கொலை என்பது ஒரு கூலிப்படை வேகமாக அரிவாளால் வெட்டி கொலை செய்து இடத்தைவிட்டு கிளம்பினார். ஆனால் ஹரிஹரன் சுமார் 30 நிமிடம் தாக்கப்பட்டு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருக்கிறார். சுமார் 200 மீட்டர் இடைவெளியில் காவல்நிலையம் இருக்கிறது. அந்த பகுதியில் போலீசாரும் ரோந்து பணியில் இருந்திருக்கின்றனர். இரண்டு நிமிடத்தில் அந்த பகுதிக்கு வந்து அந்த இளைஞரை மீட்டிருக்க முடியும்.
அந்த பகுதியில் இச்சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் எமது குழுவினரிடம் 12 – 15 பேர் சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறினார்கள். ஆனால் மீனாவின் குடும்பத்தினரை மட்டும் குற்றவாளிகளாக வழக்கில் போலீசார் சேர்த்துள்ளனர். பிற உடன் வந்த கும்பலை வழக்கில் சேர்க்காமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்துகிறது. குற்றவாளிகளில் 3 பேரை மட்டும் போலீசார் கைது செய்துள்ளனர்.
பெரும் கும்பலோடு ஒரு இளைஞரை தாக்குகின்ற போது பொது மக்கள் அச்சமடைந்து தடுக்க வரமாட்டார்கள். இதனை உணர்ந்துதான் மீனாவின் குடும்பத்தினர் பெரும் இளைஞர் அடியாள் கும்பலோடு சேர்ந்து கொண்டு அந்த இளைஞர் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.
இது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை. காதலிக்கும் இளைஞரை பொது இடத்திற்கு வரவைத்து கல்லால் அடித்து கொல்வது என்பது நாகரீகமற்ற படுபாதக செயல். தமிழ்நாட்டில் இதுபோன்ற கலாச்சாரம் துவங்கியிருப்பது பெரும் ஆபத்து என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
கும்பல் தாக்குதல், படுகொலை வன்முறையை தடுக்க தமிழக அரசு கடும்
நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் மிகப்பெரிய கலவர பூமியாக தமிழகம் மாறும்.
தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் மட்டும் 9 ஆணவக்கொலைகளும் மரணங்களும்
நடந்துள்ளன. ஆனால் தமிழக அரசு இவற்றை தடுப்பதில் போதிய ஆர்வமும் அக்கறையும்
காட்டவில்லை.
கடந்த 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஆணவக்கொலையை தடுப்பதற்கு ஒவ்வொரு மாநில அரசுக்கும் 20 வழிகாட்டுதல் நெறிமுறைகளை தீர்ப்பாக வழங்கி நடைமுறைப்படுத்த வலியுறுத்தியிருக்கிறது. தமிழக அரசு இந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு கொண்டிருக்கிறது.
ஆய்வு முடிந்து திரும்புகையில் ஹரிஹரனின் உறவினர் ஒருவர் நாட்டில் உள்ள மக்களையெல்லாம் நாங்கள் அழகுபடுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் சாதி எங்களை அசிங்கப்படுத்துகிறது; அழிக்கிறது; கொலை செய்கிறது என்றார்.மீனா சாட்சி சொல்ல வரமாட்டார். பார்த்தவர்கள் எல்லாம் பயந்து கிடக்கிறார்கள். ஒத்த குடும்பம் நீதிக்காக காத்துகிடக்கிறது. பார்ப்போம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக