திங்கள், 11 ஜனவரி, 2021

வெத்து பேப்பர் அறிக்கை வேண்டாம்.. ரஜினிக்கான போராட்டக் குழு பரபர அறிக்கை! உங்களை இயக்குவது யார் ?

Protest committee of Rajini releases a statement goes viral

Vishnupriya R - tamil.oneindia.com :  சென்னை: ரஜினி அரசியலுக்கு வரும் வரை விட மாட்டோம் என போராட்டக் குழுவினர் அறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரஜினிகாந்தை அரசியலுக்கு அழைக்கும் போராட்டக் குழுவினர் என்ற பெயரில் ஒரு அறிக்கை வலம் வருகிறது. 

அதில் கூறப்பட்டுள்ளதாவது: திரு தலைவர் அவர்களுக்கு.. உங்களை அரசியலுக்கு அழைக்கும் போராட்ட குழுவின் கடிதம். நீங்கள் கடந்த சில நாட்களாக காகிதம் முலம் அரசியல் இல்லை என்று பத்திரிகைக்கு கடிதம் அனுப்புவது எங்களுக்கு கவலை அளிக்கிறது. கொரோனோ என்ற கொடிய நோய்க்கு அஞ்சாமல் என் உயிர் போனாலும் கவலையில்லை. நான் அரசியலுக்கு வருவது உறுதி என்று சொல்லிவிட்டு, "அண்ணாத்தை" படபிடிப்பிற்க்கு ஆந்திரா சென்ற தாங்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டது.

நலமுடன் வீடு திரும்பியது. தங்கள் உடல் நிலையை சொல்லி நான் அரசியலுக்கு வரவில்லை என்றது. அந்த வார்த்தை காகிதத்தில் வந்ததை நம்பாமல் நாங்கள் உங்களை அரசியலுக்கு அழைக்கும் விதமாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கூடபோவதை முன்கூட்டியே அனைத்து ஊடகங்களும் ஒரு வாரகாலமாக அரை மணிக்கு ஒருமுறை அலறியது. அப்போதெல்லாம் தடுக்காத நீங்கள், நிகழ்ச்சி முடிந்த மறுநாள் என்னை வற்புறுத்த வேண்டாம் என்று கடிதம் வெளியிட்டது உண்மையா அப்படி சொல்வது நீங்கள் தான் என்று நாங்கள் நம்ப தயாராக இல்லை. 

நாற்பது ஆண்டுகாலம் எங்கள் கனவு. அது 2017 ல் உங்கள் வார்த்தை., அந்த உறுதியான வார்த்தையை நாலு கடிதம் முடிவுக்கு கொண்டு வந்து விடுமா. இந்த கடிதம் நீங்கள் தான் வெளியிட்டீர்கள் என்று நாங்கள் நம்பவில்லை. காரணம் இரண்டு. ஒன்று ஆன்மீக அரசியலுக்காக துவங்கப்பட்ட மக்கள் மன்றம் இன்று வரை கலைக்கப்படவில்லை..? 

 இரண்டு என் உயிரே போனாலும் பின் வாங்கமாட்டேன் என்று நீங்கள் சொன்ன வார்த்தை. நீங்கள் நேரில் வராமல் கடிதம் முலம் அறிக்கை விடுவது, எங்களுக்கு மிகுந்த சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது. யாருக்கும் அஞ்சாமல் பொது மேடையில் தைரியமாக பேசிய நீங்கள் ஆந்திரா சென்று திரும்பியவுடன் பல மாற்றங்கள் உங்களிடம் உங்களை காகிதம் மூலம் இயக்குவது யார்? உங்கள் முகத்தை எங்களுக்கு காட்டாமல் ஒளித்து வைத்திருப்பது யார்? எதை நாங்கள் நம்புவது.? உங்கள் உடல் நிலை சரியில்லை. ? அதனால் -அண்ணாத்தை- படம் இல்லை என்று கடிதம் வரவில்லையே ஏன்? ஆன்மீக அரசியலுக்காக துவங்கிய மக்கள் மன்றம் ஆன்மீக அரசியல் இல்லை என்றவுடன் கலைக்கபடவில்லையே ஏன்? 

அறவழிபோராட்டம் நடைபெறும் முன் தடுக்க வராத கடிதம்.? அறவழிப் போராட்டம் நடந்து முடிந்தவுடன் கடிதம் வந்தது என்றால் .? எங்கள் உண்மையானவர்கள் ஒன்று கூடிய கூட்டத்தைகாட்டி அரசியல்வாதிகளிடம் வியாபாரம் செய்தது யார்? எங்களை யாரிடம் யார் விற்றார்கள்.? உங்கள் உண்மையான ரசிகர்கள் கூட்டத்தை அடுத்தவர்களிடம் விற்றதொகை எவ்வளவு? போன்ற கேள்விகள் எழுகின்றன. என்னை வாழவைத்த தெய்வங்களான என் அன்பு ரசிகர்களே.. என்று சொன்ன நீங்கள். ? இன்று மன்றத்தை விட்டு நீக்கப்பட்டவர்கள் கூட்டிய கூட்டம் என்று சொன்னால் நாங்கள் எதற்காக மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டோம் என்ற கேள்விக்கு பதில் யாரிடம் கேட்பது.? 

நீங்கள் அழைக்கும் 38, மாவட்ட செயலாளர்கள் மட்டும்தான் நல்லவர்கள் என்றால் நாங்கள் உங்களுக்கு தேவையில்லை என்று ஒரு கடிதம் உடனே அனுப்பிவிடலாமே. அப்படி ஒரு கடிதம் வருமா.? என் உயிரே போனாலும் நான் அரசியலில் இருந்து பின் வாங்கமாட்டேன் என்று சொன்ன நீங்கள் இன்று வீட்டுக்குள் இருந்து கடிதம் மூலம் பதில் சொல்வது நீங்கள் இல்லை. உங்கள் கையெழுத்தை யாரோ தவறாக பயன்படுத்துகிறார்கள் என்கின்ற சந்தேகம் உலகில் வாழும் ஒட்டு மொத்த உண்மை காவலனுக்கும் எழுந்துவிட்டது. 

இனியும் நாங்கள் உங்கள் பெயரில் வரும் எந்த கடிதத்தையும் நம்ப போவது இல்லை.? நீங்கள் உங்கள் வீட்டை விட்டு வெளியே வந்து உங்கள் கருத்துக்களை நேரில் சொன்னால் மட்டும் நம்புவோம். அதுவரை உங்களை அரசியலுக்கு அழைக்கும் எங்கள் போராட்டம் ஓயாது. 

 

இனி வீதிகளில் இறங்கி போராடுவோம். ஒவ்வொறு உண்மை காவலனும் எங்கள் வேலையை குடும்பத்தை கவனித்து கொண்டு துண்டு சீட்டு, போஸ்டர், பேனர் , சமூக வலைதங்களில் தினமும் உங்களை அழைப்போம். நீங்கள் வெளியில் வந்து உங்கள் முகத்தை காட்டி எங்களுக்கு பதில் சொல்லும் வரை போராடுவோம். வெற்றி பெறுவோம்



கருத்துகள் இல்லை: