ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

வேளாண் சட்டங்கள்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

minnambalam : நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய வேளாண் சந்தைகள் உள்ளிட்ட மூன்று சட்டங்களுக்கும் இன்று (செப்டம்பர் 27) குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.விவசாயிகளின் உற்பத்தி மற்றும் வர்த்தகம் தொடர்பான சட்டம், விலை நிர்ணயம் மற்றும் விவசாயிகளுக்கு அதிகாரமளிக்கும் சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டன.

இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலிதள் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் கவுல் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் அக்கட்சியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகியது.  இதற்கிடையே நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த வேளாண்துறை மசோதாக்கள் தொடா்பாக குடியரசுத் தலைவரைச் சந்தித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முறையிட்டன. அந்த சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்தன.

ஆனாலும் இன்று குடியரசுத் தலைவர் சர்ச்சைக்குரிய அந்த மூன்று சட்டங்களுக்கும் ஒப்புதல் அளித்துள்ளார். ஏற்கனவே பஞ்சாப்,ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து அது அரசிதழிலும் வெளியிடப்பட்டுவிட்டது.

-வேந்தன்

கருத்துகள் இல்லை: