திங்கள், 28 செப்டம்பர், 2020

பெண்கள் குறித்து மனுதர்ம கருத்துக்களில் சில : சுதந்திரமாக பெண் எதையும் செய்ய அனுமதிக்கக் கூடாது...

Dhinakaran Chelliah : · !!பெண்களை வணங்கும் இந்து மதம்!! இந்துமதத்தில் பெண்களைத் தெய்வமாக வழிபடுகிறார்கள், அவர்களுக்கு உயரிய அந்தஸ்து இந்து மதத்தில் உண்டு என நண்பர் ஒருவர் whatsApp குழுவில் எழுதியிருந்தார். அவருக்கு அளித்த பதில் இதுதான்: இன்று பெருந் தெய்வ வழிபாடு கொண்ட இந்து மதம் என்று நம்பப் படுவது வைதீக மதமே! இதற்கு பிராமணீய மதம், வேத மதம், சனாதன தர்மம் எனப் பல பெயர்கள் உண்டு. தவிர பலப்பல சமயங்களின் தொகுப்பே இன்று வழங்கிவரும் இந்துமதம் என்பது. இந்த அடிப்படைப் புரிதலில் நமது விளக்கத்தைத் தொடர்வோம்!
கணவன் இறந்ததும் தாலி அறுப்பு,மொட்டை அடித்தல், அலங்காரங்களை அகற்றுவது, பொட்டு முதல் நல்ல உடைகளை மற்றும் அணிகலன்களை அணிந்துகொள்வதை மறுப்பது அனைத்தும் இந்து மதத்தில் மட்டுமே உண்டு.
சிறு வயது பெண்களை பொட்டுக்கட்டி கோயிலுக்கு நேர்ந்துவிடும் கொடிய வழக்கம் இந்து மதத்தில் மட்டுமே உண்டு.இது இன்றும் சில கிராமங்களில் தொடர்கிறது.
மாதவிடாய் எனும் சாதாரண உடற்கூறு இன்றளவும் தீட்டாகவே கருதப்படுகிறது. இவை உண்மையா இல்லையா என்பதை உணர்வாளர்கள் அறிந்து கொள்வார்கள். இன்றும் வீடுகளில் “விலக்கு” என்பது இந்து வைதீக வீடுகளில் வழக்கில் உள்ளதை யாராலும் மறுக்க இயலாது.
சதி எனும் உடன்கட்டை ஏறும் கொடிய வழக்கம் ஒழிக்கப்பட்டுவிட்டாலும் இன்றும் சில வட மாநில கிராமங்களில் வழக்கில் உள்ளது.இந்து மதத்தைப் பெறுத்தவரை கணவனை இழந்த பெண்கள் உடனே உயிரிழக்க வேண்டும், அல்லது நடைப் பிணமாக அலைய வேண்டும்.
பெண் பிள்ளைகளை கள்ளிப்பால் கொடுத்து சாகடிப்பது, தொண்டையில் நெல்மணியை வைத்து பெண் குழந்தைகளை சாகடிப்பது, இந்து மதத்தில் பெண்களுக்கான சொத்து உரிமை இல்லை எனும் நிலை வரும்போது ஏற்பட்டதுதான். இந்துமதம் ஆண்களுக்கே சொத்து உரிமை வழங்குவதை யாரும் மறுக்க இயலாது.
அதேபோல பெண்களை வயதுக்கு வருமுன்னர் செயற்கையாக பூப்படையச் செய்து அவர்களுக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்து வைக்கும் வழக்கமும் மதச் சடங்கு அடிப்படையில் உருவானதே.
ஆண் புருஷர்கள் நலமாய் இருக்கவேண்டி வரலட்சுமி நொம்பு போன்ற விரதங்கள் இந்து மதத்தில் உண்டு. பெண்களின்,மனைவியரின் நலன் வேண்டி ஒன்றும் இல்லை. இந்து மதம் ஆண்களின் உருவாக்கமே மற்றும் ஆண்களின் நலன் சார்ந்ததே என்பதற்கு சிறந்த உதாரணம் இது.
இந்து மத வேதங்கள், சாத்திரங்களின் படி பெண் இயற்கையாகவே கற்புநிலை அற்றவள். நிலையான மனம் அற்றவள். காமம் உடையவள். பெண் பிறப்பு ஒரு இழிவான பிறப்பு. அதை மந்திரங்களால் மாற்ற முடியாது.
பகவத் கீதை பெண்கள் பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போம். பகவத் கீதையின் 9ஆவது அத்தியாயத்தில் சுலோகம் 32 இப்படிச் சொல்கிறது.
“மாம் ஹி பார்த்த வ்யபாச்ரித்ய யே அபி ஸ்யு பாப யோனய
ஸ்திரியோ வைச்யாஸ்ததா சூத்ராஸ்தே அபி யாந்திபராம் கதிம்”
அதாவது பெண்களும் சூத்திரர்களும் வைசிகர்களும் பாவ யோனியில் இருந்து பிறந்தவர்கள். தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள பகவத் கீதைகளில் "பாவ யோனி" என்பதை "கீழான பிறப்பு", "இழி பிறப்பு" என்று மொழி பெயர்த்துள்ளார்கள். ஆங்கிலத்தில் நேரடியாகவே "born out of the womb of sin" என்று மொழி பெயர்த்திருக்கிறார்கள்.
maam hi paartha vyapaashritya yepi syuhu paapayonayaha |
striyo vaishyaastathaa shoodraastepi yaanti paraam gatim || 32 ||
Surely, O Paartha, even those who are born of sinful origin – women, traders, and also labourers, they attain the supreme state by taking refuge in me.
பெண்களை இந்துமதம் இழிவு படுத்துவதுபோல ஒருமதமும் பாவிப்பதில்லை. பெண்கள் அனைவரும் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்கிறது சாஸ்திர நூல்கள். வயிற்றில் பிறந்தவர்கள் என்று கூட இந்து நூல்கள் எழுதுவதில்லை பாவ யோனி என்றே எழுதப்பட்டுள்ளது. இந்து மதத்தில் பெண்கள் ஒரு commodity மட்டுமே!
பகவத் கீதையின் பார்வையிலும் பெண் என்பவள் இழி பிறப்புத்தான். அவள் ஒரு பார்ப்பன வீட்டில் பிறந்திருந்தாலும், அது செல்லுபடியாகாது.
கவனித்துப் பார்த்தால் ஒன்று புரியும். சூத்திரர்களுக்கு மறுக்கப்பட்டுள்ள பெரும்பான்மையான உரிமைகள் பெண்களுக்கும் மறுக்கப்பட்டுள்ளது.
முற்பிறப்பில் செய்த பாவத்தின் பயனாகத்தான் ஒருவன் பெண்ணாகவோ சூத்திரனாகவோ பிறக்கிறான் என்றுதான் இந்து மத வேதங்கள் சொல்கின்றன. அந்த வகையில் சூத்திரர்களை இழிவுபடுத்துகின்ற வேதங்கள், சாத்திரங்கள், மந்திரங்கள் போன்றவை பெண்களையும் இழிவுபடுத்துவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
இந்து மதத்தின் பிரிவுகளில் ஒன்று வைணவம். வைணவ சமய மக்களால் ராமானுஜர் கடவுளின் அவதாரம் என்று போற்றப்படுகிறார். அவர் எழுதிய "ஸ்ரீபாஸ்யம்" என்ற நூல் பெண்கள் பற்றி என்ன சொல்கிறது?
பகவத் பலன தானக்ருதாம்
விஸ்தீரணாம் ப்ரம்ம சூத்ர வ்ருத்திம்
பூர்வாச்சாரியாஹா சஞ்சிக்ஷபூஹி
தன்மதானு சாரேந சூத்ரா அக்ஹதாரீ
வ்யாக்யாஸ்யந்தே....
அதாவது மோட்சம் என்பது பிராம்மணர்களுக்கு மட்டும்தான் உண்டு. சூத்திரர்களுக்கோ பெண்களுக்கோ இல்லை. சூத்திரர்களும் பெண்களும் முற்பிறப்பில் செய்த பாவத்தின் பலனாகத்தான் அவர்கள் அவ்வாறு பிறந்திருக்கிறார்கள். அவர்கள் இப்பிறப்பில் புண்ணியம் செய்து அடுத்த பிறப்பில் வைசியராகவும், சத்திரியராகவும் பின் பிராம்மணராகவும் பிறந்து பின்பு மோட்சம் அடையலாம் என்பதுதான் இதன் பொருள். பிரம்மசூத்திரத்தை உருவாக்கிய ஆச்சாரியர்கள் சொன்னதையே தான் சொல்வதாகவும் ராமானுஜர் குறிப்பிடுகின்றார்.
பெண் குறித்த இந்து மதத்தின் பார்வை இதுதான். இத்தனையும் சொல்கின்ற இந்து மதம் பெண்களுக்கு கல்வியையும் தடைசெய்தது. ஒரு பெண் மந்திரங்களோ, வேதங்களோ, சாத்திரங்களோ எதுவும் கற்கக் கூடாது என்று கல்வியையும் பெண்ணுக்கு மறுத்தது.பெண்கள் இழிபிறப்பினர் என்ற இந்து மத கருத்தின்படி மந்திரங்களிலும் பெண் இழிவுபடுத்தப்பட்டாள். பெண்ணுக்கு கல்வி மறுக்கப்பட்டதால், அவளால் அதை புரிந்து கொள்ளவோ தட்டிக் கேட்கவோ முடியவில்லை.
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்!
பெண்களை வழிபடும் அதே இந்து வைதீக மதத்தில்தான் பெண்களை போகப் பொருளாகப் பாவிக்கும் நிலை இன்றும் உள்ளது. அவள் தனியாக இயங்குவதை மற்ற மதங்கள் அனுமதிக்காதது போல இந்து மதமும் அனுமதிக்கவில்லை. இந்து மதத்தைப் பொறுத்தவரை பெண் இழிவானவள், போகப் பொருள் மற்றும் தீட்டுப் பொருள் அவ்வளவே!
இந்து வைதீக மத அடிப்படையில் இன்றளவும் நடத்தப்படும் திருமணம் என்பது ஆணுக்கு பெண்ணை தானமாக கொடுப்பதுதான். அதுவும் பெண்ணின் தகப்பனார் மணமகனுக்கு அளிக்கும் கன்னிகாதான நிகழ்வுதான் இந்து வைதீக திருமணச் சடங்கு.அதாவது தானமாகக் கொடுக்கப்படும் நுகர்வுப் பொருளாகத்தான் இன்றும் பெண்கள் நடத்தப்படுகிறார்கள்.
பெண்கள் பற்றிய மகா பெரியவரின் கருத்து மிக முக்கியமானது. நேரு பெண்களுக்கு சொத்துரிமை வழங்க வேண்டி சட்டம் இயற்ற முற்பட்டபோது, பெண்களுக்கு சொத்தில் உரிமை அளிப்பது இந்து வைதீக சாஸ்திரங்களுக்கு எதிரானது என முழக்கமிட்டார். தொடர்ந்து அதற்கு எதிராக
பிரதமருக்கு தந்தி அனுப்பினார், வைதீக பெண்களைக் கொண்டு சொத்தில் பங்கு வேண்டாம் என போராட வைத்தார்.
பெண்கள் வேசிகள் என தனது கருத்தை ஆழமாக பதிவு செய்தார்.
மகா பெரியவர் எழுதிய “தெய்வத்தின் குரல்”பாகம் இரண்டு பெண்கள் பற்றிய அவரது பார்வையை விளக்குகிறது:
"ஸ்த்ரீணாம் உபநயன ஸ்தானே விவாஹம் மநுரப்ரவீத்" என்பது மநுஸ்மிருதி.
இதற்கு ஒரு வெளி அடையாளம் காட்டு என்றால் சட்டென்று, 'உபநயனத்திலே ஒரு பையனுக்குப் பூணூல் போடுகிற மாதிரி விவாஹத்திலே பெண்ணுக்கு மங்கள் ஸூத்திரம் கட்டப்படுகிறது' என்று சொல்லிவிடலாம்.
உப-நயனம் என்றால் 'கிட்டே அழைத்துப் போவது', அதாவது 'குருவினடம் அழைத்துப் போய் குருகுல வாஸத்தில் பிரம்மசரியம் அநுஷ்டிக்கும்படிப் பண்ணுவது' என்று அர்த்தம் சொன்னேன். ஸ்திரீகளுக்குப் பதியே குரு. அவனிடம் கொண்டு சேர்க்கிற விவாஹம்தான் அவளுக்கு உபநயனம்!
அதாவது சாஸ்திரப் பிரகாரம், ஒரு பிள்ளைக்கு உபநயனம் செய்கிற ஏழாவது வயசில் பெண்ணுக்கு விவாஹம் செய்துவிட வேண்டும். காமம் தெரிகிற முன்பே இவள் பதியை குருவாக வரித்துவிடும்படி செய்ய வேண்டும். காமம் தெரியாவிட்டால்தான் இப்படி குருவாக வரிக்கவும் முடியும்! குருவை ஒருத்தன் தெய்வமாகவே மதிக்க வேண்டும் என்பதும் சாஸ்திரம் அல்லவா? அப்படியே இந்தப் பெண் குழந்தை சின்ன வயசில் பதியை குரு-தெய்வமாக பாவித்து ஹ்ருதயத்தை அவனுக்கு ஸமர்ப்பணம் பண்ணிவிட வேண்டும். அந்த இள வயசில்தான் இது ஸாத்தியமும் ஆகும். பிற்பாடு புத்தியால் எதிர்க்கேள்வி கேட்பது, அஹம்பாவத் தடிப்பு எல்லாம் உண்டாகிவிடும்."
ஆதி சங்கரரின் பஜ கோவிந்தம் மூன்றாவது சுலோகம் இது!
[நாரிஸ்தனபர நாபிதேசம் த்ருஷ்ட்வா மா கா மோஹாவேசம்
எதன்மான்சவசாதிவிகாரம் மனசி விசிந்தய வாரம் வாரம் ]
வெறியூட்டும் இள வனிதையர் தோற்றம்,
வெறுந் தோல்மூடிய சதைகளின் மாற்றம்,
வெறுப்பூட்டும் இந்த உண்மையை உணர்வாய்.
மறவாதிருக்கப் பலமுறைநினைப்பாய்.
“Seeing the seductive female form, do not fall prey to frenzied delusion.That (female form) is (but) a modification of flesh and fat.Think well thus in your mind again and again.”
இதன் சாரம் பெண்கள் மோசமானவர்கள் அவர்களை நம்பக்கூடாது என்பதுதான்.இப்படி
பெண்களைப் பற்றி மோசமாக எழுதியவரைத்தான் மேன்மை மிகு பெண்கள் குலம் அவதார புருஷராக பூசித்து வருகிறது! காலம்தான் இவர்கள் கண் திறக்க வேண்டும்!
பெண்கள் குறித்து மனுதர்மத்தின் கருத்துக்களில் சில:
2.213 தங்கள் அலங்காரத்தில் மனிதரைக் கவரும் தன்மை பெண்களின் இயல்பாகையால் அறிந்தோர் பெண்களிடம் கவனக் குறைவாக நடந்து கொள்ளமாட்டார்கள்.
2.214 புலன்களை அடக்கியவனாயினும், அறிவிலியாயினும் அவர்களைத் தங்களது தொடர்பால் காமக்குரோதமுள்ளவனாகச் செய்வர் மாதர்.
3.19 தாழ்ந்த சாதிப் பெண்ணின் அதர பானமும், அவளது மூச்சுக்காற்று மேலே படுதலும்,தனக்கும்,அவளிடமாகப் பிறந்த குழந்தைக்கும் கழுவாயே இல்லாத பாவங்களாகும்.
4.147 சுதந்திரமாக பெண் எதையும் செய்ய அனுமதிக்கக் கூடாது.
4.418 பெண் எப்போதும் தன்னிச்சையாக இயங்கக் கூடாது.
5.132 தொப்பூளுக்கு கீழ் உள்ள உறுப்புகள் அசுத்தமானவை.
5.154 இழி நடத்தை,பரத்தையர் நட்பு,நற்குணமின்மை ஆகிய குணங்கள் கொண்டவன் என்றாலும் கணவனே தெய்வம்.
9.3 எச்சூழலிலும் பெண் தனியாக இருக்கக்கூடாது. எப்போதும் ஆணின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும்.
9.14 வயதைப்பற்றிக் கவலைப்படாமல் ஆணாக இருந்தால் போதும்,உடலுறவு கொள்ளத் தயங்க மாட்டார்கள்.
9.15 கணவனுக்குத் தீங்கிழைப்பவர்கள்.
9.17 பெண்ணின் குணம் : படுக்கை,ஆதனம்,அழகு செய்தல்,காமம்,சினம்,பொய்,துரோக எண்ணம் போன்றவைகளாகும்.
5.149 பெண்ணுக்கு விவாகரத்து செய்யும் உரிமை இல்லை.
8.299 மனைவியை அடிக்கும் உரிமை கணவனுக்கு உண்டு.ஆனால் கணவனை அடிக்கும் உரிமை மனைவிக்கு இல்லை.
9.416 மனைவி,மகள்,அடிமை, இம்மூவருக்கும் சொத்துரிமை இல்லை.
9.18 வேத நூல்களை கற்க முடியாது.
இந்து வைதீக மதத்தின் பெண்களுக்கு எதிரான கருத்துக்கள் இந்து மதத்தில் உண்டு எனத் தொடர்ந்து எழுதிட முடியும். ஆயிரம் எழுதினாலும் கேட்கப் போவதில்லை என்பவர்களுக்கு எழுதி புரிய வைப்பது கடினம். இந்து வைதீக மதத்தை பின்பற்றுவதாக அதை உயர்வாக கருதுபவர்கள் உள்ளத்தில் ஒரே ஒரு கேள்வி எழுப்பினால் போதும்,அவரவர் வீடுகளில் பெண்கள் சமமாக நடத்தப் படுகிறார்களா என்று உள் மனதைக் கேட்கவும். அவள் தெய்வமாக வணங்கப்படுகிறாள் எனும் பொய்யை நிறுத்துங்கள்,அது போதும்!

கருத்துகள் இல்லை: