வியாழன், 1 அக்டோபர், 2020

ராகுல் காந்தியை தாக்கி தள்ளி தரையில் வீழ்த்தி கைது செய்த போலீஸ்

“19 வயதான சிறுமியைக் கூட்டுப்பாலியல் வன்முறை நடத்திய நான்கு விஷ வித்துக்கள், அந்தப் பெண்ணின் கழுத்தை நெரித்தும், முதுகெலும்பை உடைத்தும் நடத்திய வன்முறையைக் கேள்விப்படும் போதே சகிக்க முடியாததாக அமைந்துள்ளது. அப்பெண்ணின் கழுத்தை நெறிக்கும் போது அவரது நாக்கு துண்டாகி உள்ளது. உடலுறுப்புகள் செயல் இழந்த நிலையில் அவர் மருத்துவமனையில் மரணத்தைத் தழுவிவிட்டார். தன்னை இக்கதிக்கு ஆளாக்கிய கயவர்கள் யார் என்பதை அவர் வாக்குமூலமாகக் கொடுத்துவிட்டார். 

minnambalam :பாலியல் வன்கொடுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திக்க சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போலீசாரால் தாக்கப்பட்டு நெட்டித் தள்ளப்பட்டு கைது செய்யப்பட்டார். உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 19 வயது இளம்பெண் செப்டம்பர் 14,ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு மீட்கப்பட்டார். கடுமையான காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்தப் பெண் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த செப்டம்பர் 29-ம் தேதி உயிரிழந்தார்.   இந்தப் பெண்ணின் மரணம் உத்தரபிரதேசத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வுகளை கிளப்பியது. கொல்லப்பட்ட பெண்ணின் உடலைக் கூட உறவினர்களிடம் கொடுக்காமல் போலீசாரே அவசர அவசரமாக தகனம் செய்ததை பல்வேறு தரப்பினரும் கண்டித்துள்ளனர். அதிகமானதால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் இன்று அக்டோபர் 1ஆம் தேதி அப்பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்க ஹத்ராஸ் பகுதிக்கு விரைந்தனர்.

யமுனா எக்ஸ்பிரஸ்வே நெடுஞ்சாலையில் ராகுல்காந்தியின் கார் போலீசாரால் மறிக்கப்பட்டது. காரிலிருந்து இறங்கிய ராகுல்காந்தி நடக்க ஆரம்பித்தார். அவர் பின்னால் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் திரள ஆரம்பித்தனர். ராகுல்காந்திக்கு சில அடிகள் பின்னால் பிரியங்கா காந்தி நடந்து வந்து கொண்டிருந்தார்.

வேகவேகமாக நடந்து கொண்டிருந்த ராகுலை போலீசார் சுற்றி வளைத்துக் கொண்டே சென்றனர். இதற்கு மேல் போகக் கூடாது என்று தடுத்து நிறுத்தினர்.

இந்த நாட்டில் மோடி மட்டும்தான் நடக்க வேண்டுமா?

போலீசாரிடம் ராகுல்காந்தி,. " 144 தடை உத்தரவு படி தனிநபர் நடந்து செல்வது குற்றமா? நான் மட்டும்தான் தனியாக ஹத்ராஸ் பகுதிக்கு செல்கிறேன். நீங்கள் என்னை எந்த சட்டத்தின் அடிப்படையில் கைது செய்வீர்கள் சொல்லுங்கள்?" என்று கேட்டார்.

அதற்கு போலீசார், “போலீஸ் உத்தரவை மீறும் வகையில் செயல்பட்டால் ஐபிசி 188 பிரிவின்படி உங்களை கைது செய்கிறோம்” என்றார்கள்.ராகுல் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் தொடர்ந்து நடந்தார். போலீசார் விடாமல் அவரை சுற்றிவளைத்தனர். ராகுலுக்கும் போலீஸாருக்கும் வாக்குவாதம் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் ராகுல் காந்தி மீது லத்தியால் தாக்கினர். அவரது நெஞ்சில் கைவைத்து அவரை நெட்டித் தள்ளி தரையில் சாய்த்தனர். அப்போது வெகுண்டு எழுந்த ராகுல் காந்தி, “ஏன் இந்த நாட்டில் மோடிதான் நடக்க வேண்டுமா? சாதாரண மனிதர்கள் எல்லாம் நடக்கக் கூடாதா?” என்று கோபமாகக் கேட்டார். ஆனாலும் போலீசார் காதில் வாங்காமல் ராகுலை அப்புறப்படுத்துவதிலேயே குறியாக இருந்தனர். ராகுலை அதிரடியாகக் கைது செய்து அருகே உள்ள சர்வதேச புத்த சர்க்யூட் கெஸ்ட் ஹவுசுக்கு அழைத்துச் சென்றனர்.

ராகுல் காந்தி மீது நடத்தப்பட்ட இந்த தடியடியின்போது அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்களும் ரத்தக் காயம் அடைந்தனர்.

இதற்கிடையில் உத்திரப்பிரதேச காவல்துறை, கொல்லப்பட்ட அந்த பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. தடய அறிவியல் ஆய்வின்படி அந்தப் பெண் கழுத்தில் தாக்கப்பட்டுத்தான் கொல்லப்பட்டுள்ளார் என்று உத்தரப்பிரதேச சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி பிரசாந்த் குமார் தெரிவித்துள்ளார். எனவே பாலியல் வன்புணர்வோ கூட்டுப் பாலியல் வன்புணர்வோ நடைபெறவில்லை என்று அவர் மறுத்திருக்கிறார். இதேநேரம் தேசிய பெண்கள் ஆணையம் அந்த பெண்ணின் உடலை அவசர அவசரமாக தகனம் செய்தது ஏன் என்று உத்தரபிரதேச டிஜிபிக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளது.

நாடு முழுதும் போராட்டம்

ராகுல் காந்தியைக் கைது செய்ததை ஒட்டி உத்திரபிரதேசம் முழுதும் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நாடு முழுவதிலும் இருக்கும் காங்கிரஸ் தொண்டர்களும் போராட்டத்தில் இறங்குமாறு அக்கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது

ராகுல் தாக்கிக் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் கண்டனம்


இதைத் தொடர்ந்து அப்பெண்ணின் வீட்டுக்கு ஆறுதல் சொல்லச் சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் உ.பி. காவல்துறையினரால் தடுக்கப்பட்டுள்ளார்கள். அது மட்டுமல்ல, ஓர் அகில இந்தியத் தலைவரான ராகுல் காந்தியைக் கழுத்தைப் பிடித்து கீழே தள்ளியிருக்கிறது போலீஸ். அவர் மீது மிகமோசமான பலப்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. ஊடகங்களில் ஒளிபரப்பாகிய இக்காட்சிகளைப் பார்க்கும் போது உ.பி.யில் சட்டத்தின் ஆட்சி இல்லாமல் அராஜக ஆட்சி - அட்டூழிய ஆட்சி நடப்பதாகவே சொல்லத் தோன்றுகிறது.

அகில இந்தியக் கட்சித் தலைவர் ஒருவரை, நாடாளுமன்ற உறுப்பினரை, செயல்பட விடாமல் தடுத்தது மட்டுமல்ல, அவரைப் பிடித்துத் தள்ளுவது, மரியாதைக் குறைவானது, மனிதநேயமற்றது, மிக மிகக் கண்டிக்கத்தக்கது. மனித உரிமைகளுக்கும், ஜனநாயக நெறிகளுக்கும் எதிரானது. இதற்கு உ.பி. பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். ராகுல் காந்திக்கே இந்த நிலைமை என்றால், உ.பி.யில் சாதாரண சாமானியர்களின் நிலைமை என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஸ்டாலின்.

- வேந்தன்

கருத்துகள் இல்லை: