புதன், 1 ஏப்ரல், 2020

இலங்கை : கொரோணா அறிகுறிகள் தெரிந்தால் இனி மருத்துவமனைகளுக்கு செல்லாதீர்கள்

Jeevan Prasad : கொரோணா நோய் அறிகுறிகள் தெரிந்தால் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லாதீர்கள் - ஜீவன்
இதுவரை காலமும் கொரோணா அறிகுறியுள்ளோரை வைத்தியசாலைகளுக்கு வரச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது நிலை வேறுபட்டுள்ளது. அதாவது வைத்தியசாலைகளுக்கு வராதீர்கள். வந்தால் வழக்கு தொடுப்போம் என போலீஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். எனவே இனி உங்கள் நிலை மோசமானால் அன்றி யாரையும் பிடித்துக் கொண்டு போக மாட்டார்கள். சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவித்தால் அவர்கள் உங்களை கண்காணிப்பார்கள். பரிசோதிப்பார்கள். உண்மையிலேயே கொரோணா இருந்தால் மட்டுமே சிகிச்சைக்காக போக வேண்டி வரும். எனவே சந்தேகப்பட்டவர்களை பிடித்துக் கொண்டு போவார்கள் என அஞ்ச வேண்டியதில்லை.
கடந்த சில நாட்களாக நடந்த விடயங்களை வைத்து அரசும் , பாதுகாப்பு துறையும் புதியதொரு அணுகுமுறையை பின்பற்றத் தொடங்கியுள்ளது.
கொரோணா அறிகுறியுள்ளவர்கள் தங்களது உண்மையான நிலையை தெரிவிக்காமல் , தனியார் மற்றும் அரச வைத்தியசாலைகளுக்கு சென்று சிகிச்சை பெற முயன்றமையால் பல வைத்தியசாலைகளும் , சுகாதார தரப்புகளும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
அதாவது வைத்தியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் நோயாளிகளுக்கு சேவை செய்ய முடியாத நிலையில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். தள்ளப்பட்டுள்ளார்கள். இது ஒரு சோகமான நிலையாகும். இந்த நடவடிக்கைகளால் சுகாதார பகுதிகளை மூடும் நிலை எழுந்துள்ளது. இந் நேரத்தில் இது ஒரு மிக மோசமான விடயமாகும்.
இப்படி மக்கள் நடந்து கொண்டால் சுகாதார துறை பாரிய பின்னடைவை சந்திக்கும். உயிரை பணயம் வைத்து சேவை செய்யும் , சேவையாளர்கள் மக்களுக்கு பணி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள். அவர்களும் உங்களைப் போன்ற மனிதர்கள்தான். அவர்களுக்கும் குடும்பங்கள் உள்ளன. அதை மறக்க வேண்டாம். அவர்களாலும் அவர்களது சக்திக்கு மேல் ஓரளவுதான் உழைக்க முடியும். அவர்கள் தளர்ந்து விட்டால் நிலை மிக ஆபத்தாகிவிடும்.

இதுவரை காலமும் அநேகர் தமது நிலையை மறைத்துக் கொண்டு நோயை பரப்பிக் கொண்டிருந்துள்ளார்கள். சிலர் இன்னொரு சாராரை குற்றம் சுமத்த முயன்று கொண்டிருக்கிறார்கள். யாரையும் யாரும் குற்றம் சுமத்தும் நிலையில் இன்று இல்லை. நோய் யாருக்கும் பரவலாம். எப்படியும் பரவலாம். இது இனம் - மதம் - மொழி - நாடு பார்த்து வருவதல்ல.
எது எப்படியோ நீங்கள் ஒரு நோயாளி என்றால் நோயாளிதான். அதைவிடுத்து ஒருவரை குற்றம் சொல்வது சரியான முறை அல்ல. நாளை எனக்கோ அல்லது உங்களுக்கோ கூட நோய் எம்மை அறியாமல் தாக்கலாம்? எனவே யதார்த்தமாக அனைவரும் சிந்திக்கும் கடைமைப்பாடுள்ளோராராக நாம் இருக்க வேண்டும். அதோடு அவதானமாக இருக்க வேண்டும். அச்சமான மனோ நிலைக்கு முக்கிய காரணம் மக்களிடம் போதிய தெளிவின்மையேயாகும். அதனால் நோயை நோயை மறைக்க முற்படுகிறார்கள். உங்கள் நிலையை மறைப்பதுதான் வெட்கக் கேடான செயல். அதை சொல்லி சிகிச்சை பெறுவதனால் நீங்கள் , உங்களையும் காப்பாற்றி , மற்றவர்களையும் காப்பது மனித நேயம் மிக்க ஒரு செயலாகும். நாம் ஒன்றும் சர்வ வல்லமை படைத்த ஆண்டவன் இல்லை.
ஒரு நோயை ஆரம்பத்தில் கண்டறிய முடிந்தால் நோயாளியை இலகுவாகக் காப்பாற்றிவிட முடியும். கொரோணா என்பது ஆட் கொல்லி நோயல்ல. அதை மக்கள் புரிந்து கொள்ள சம்பந்தப்பட்டோர் விழிப்புணர்வுகளை போதியளவு வழங்கவில்லை என எல்லோராலும் உணர முடிகிறது. அது உண்மையும் கூட! அதனால்தான் பலர் உண்மையை சொல்ல தயங்குகிறார்கள். கொரோணாவும் ஏனைய தொற்று நோய்கள் போல , ஒரு தொற்று நோய் என்பதை அனைவரும் உணர வேண்டும். இது ஒன்றும் பாலியல் நோயல்ல. வெட்கப்பட வேண்டியதில்லை. அம்மை , சிக்கன்குன்யா , டெங்கு வந்த போது யாரும் மறைக்கவில்லையே? அதுபோல இதுவும் ஒரு நோய்தான் . அந்த தெளிவாவது மக்களுக்கு தேவை.
உங்களுக்கு நோய் இருப்பதை அறிந்து செயல்பட்டால் நிச்சயம் சுகம் பெற முடியும். இலங்கை மற்றும் உலக மருத்துவத் துறை குறைந்த இழப்புகளோடு அதிக சேவையை செய்துள்ளது. அந்தவிதத்தில் வைத்திய சேவையை பாராட்டியே தீர வேண்டும். சில நாடுகளில் பல வைத்திய பணியாளர்கள் இறந்துள்ளனர். அவர்கள் தெரியாத பலருக்கு உதவி செய்ய தத்தமது உயிரை இழந்துள்ளனர். எனவே நோயை மறைத்து வைத்திருந்து , அது முற்றினால் , உங்கள் சாவை தடுக்க எந்த ஆண்டவனாலும் முடியாது.
சரியான நேரத்தில் அறிவிப்பதும் , தனிமைப்படுத்தலுக்கு உட்படுவதும் , நோய் இருந்தால் உடனடியாக உதவி பெற தேவையான இடங்களுக்கு அறிவித்து சிகிச்சை பெற்றுக் கொள்வதும் , உங்களையும் காத்துக் கொண்டு , உங்களை சுற்றி இருப்போரையும் காக்க வழி வகுக்கும். இல்லாது போனால் நீங்கள் மட்டும் அல்ல உங்கள் உற்றார் , உறவினர்கள் , நண்பர்கள் மற்றும் சுற்றத்தவர்கள் என அனைவரையும் ஆபத்துக்குள்ளாக்குகிறீர்கள். அதுதான் மிக மோசமான செயலாகும். அதனால் அவர்களுக்கு உங்கள் மேல் உள்ள நன் மதிப்புதான் இல்லாமல் போகும். கௌரவம் ஒன்றும் கிடைக்காது. நோய் ஒன்று ஒருவருக்கு வருவது என்பது கொலைக் குற்றமல்ல.
எனவே இப்போதைய நிலையில் அரசு சொல்வதைக் கேட்டு வீட்டுக்குள் இருக்க முயலுங்கள். ஏதாவது பிரச்சனை என்றால் உடனடியாக பாதுகாப்பு துறைக்கோ அல்லது சுகாதார துறைக்கோ அறிவியுங்கள். அவர்கள் உங்களை அணுகி தேவையான உதவிகளை செய்யக் காத்திருக்கிறார்கள்.
பாதுகாப்பு துறையினர் கூட வீதிகளில் அவதிப்படுவது உங்களைக் காக்கவே தவிர மக்களை அச்சுறுத்துவதற்காக அல்ல. அவர்களும் தமது குடும்பங்களை விட்டு அச்சத்தோடு பணிபுரிகிறார்கள். அவர்களுக்கு ஒத்துழைப்பு நல்குங்கள். அவர்களது சேவையை புரிந்து கொள்ளுங்கள். அவர்களுடைய சேவையை புரிந்து கொண்டு அவர்களை வாழ்த்துங்கள்.
இதுவும் நாட்டுக்கு நீங்கள் செய்யும் ஒரு மாபெரும் சேவையாகும் !
நன்றி!
- ஜீவன்

கருத்துகள் இல்லை: