ஞாயிறு, 29 மார்ச், 2020

பாட்டி வைத்தியத்தை விட வீட்டில் இருப்பதே பாதுகாப்பு

Rubasangary Veerasingam Gnanasangary - Farm to Table : முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல.
இப்போது நம் எல்லோருக்கும் காலவரையற்ற துடக்கு. நமது முன்னோர்கள் அன்றே தனிமைப் படுத்தலையும் ஊர் அடங்கு சட்டங்களையும் உருவாக்கி பல்லாயிரம் உயிர்களை காப்பாற்றி இருந்திருந்தனர். நம் முன்னோர்கள் வீட்டு வாசலில் வேப்பிலை கட்டி தொங்க விட்டதினதும், ஊர் எல்லைகளில் பாதுகாப்புக்காக கத்திகளோடு தெய்வங்கள் இருப்பதனதும் உண்மையான அர்த்தம் இப்போதுதான் பலருக்கும் புரிய ஆரம்பித்திருக்கும். தமிழன் தான் பிழைக்க சென்ற நாடுகளில் எல்லாம் மாரி அம்மனுக்கு கோவில் கட்டி வழிபட்டதற்கு அர்த்தம் உண்டு.

இந்தியா, இலங்கை, பாக்கிஸ்தான், பர்மா, கம்போடியா, வியட்னாம், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, பீஜி, அவுஸ்ரேலியா, நியூசீலாந்து, தென் ஆபிரிக்கா, மொரிசியஸ், பிரித்தானியா, நெதர்லாந்து, பிரான்சு, ஐக்கிய அமெரிக்கா, திரினடாட் & துபாகோ, பிரெஞ்சு கயானா, கயானா, சுரினாம், மாட்டினிக், ஜமைக்கா, ரியூனியன், சேச்செல்ஸ் மற்றும் குவாட்லூப் என்று இருபத்தெட்டு நாடுகளில் மாரியாத்தாவுக்கு கிளைகள் உண்டு. மிகவும் பழமை வாய்ந்த தென் இந்திய தெய்வமான மாரியம்மன், பெரியம்மை முற்றாக ஒழிக்கப்படும்வரை தமிழர்களால் மிகவும் மதிக்கப்பட்ட ஒரே தெய்வமாகும்.
மிகவும் கசப்பான வேப்பிலைகள் வீடுகளில் கட்டப் படும்போது அதை ஒரு அபாய அறிவித்தலாகவும், மாவிலைத் தோரணங்கள் கட்டப்படும்போது அதை ஒரு நல்ல நிகழ்வாகவும் பார்க்கும் வழமை தமிழர்கள் மத்தியில் உண்டு. வேப்பிலைகள் கட்டுதல் மற்றும் மஞ்சள் நீர் தெளித்தல் போன்ற செயல்கள் பூச்சி விரட்டிகளாகவும் பயன் பட்டுள்ளன. ஆனால் இந்த நடைமுறைகள் எதுவுமே இன்றுள்ள சூழ்நிலையில் கொரோனா வைரசை முகம் கொடுக்கும் செயல்களாக கருத முடியாது. பதிலாக இது ஒரு படு மோசமான முட்டாள்த்தனமான செயல்களாக அமைகிறது. அதை நீங்கள் செய்யும்போது, வைரஸ் என்றால் என்ன என்கின்ற புரிதலே இல்லை என்பதையே அடுத்தவர்களுக்கு உணர்த்துகிறீர்கள்.
இந்த பதிவு குறிப்பாக இந்திய நண்பர்களுக்காக எழுதப்படுகிறது. இலங்கை மக்கள் அதிலும் குறிப்பாக தமிழர்கள் அவசரகால சட்டத்தின் கீழும், போர் சூழ்நிலையிலும் வாழ்ந்து பழக்கப் பட்டவர்கள். சாப்பாடு இல்லாமல் உறங்க கூரைகள் இல்லாமல் ஒதுங்க மறைவிடம் இல்லாமல் வாழ்ந்த அனுபவம் உள்ளவர்கள். ஆனால் இந்தியாவில் சூழ்நிலை அப்படியல்ல. ஒரு அபாய வேண்டுகோளை எவரும் மதிப்பதாக தெரியவில்லை. பெரியம்மை ஒழிக்கப்பட்டத்தில் இருந்து மாரியாத்தாவை மறந்து விட்டதாக தெரிகிறது. தயவுசெய்து வீடுகளுக்குள் முடங்கிக் கொள்ளுங்கள். இல்லையேல் அழிந்து போவோம்.
தயவுசெய்து இந்த ஒன்றை மட்டும் செய்து அழிவில் இருந்து விரைவாக மீண்டு தொடர்ந்து வரவிருக்கும் பொருளாதார பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க தயாராவோம்.

கருத்துகள் இல்லை: