வியாழன், 2 ஏப்ரல், 2020

ஈஷா யோகா மையத்தில் சோதனை..! – 150 பேரை தனிமைப்படுத்திய தமிழக அரசு..!

sathiyam.tv :  கோயம்புத்தூர்: கொரோனா அச்சம் காரணமாக கடந்த சிவராத்திரி அன்று ஈஷா யோகா மையத்தில் கலந்து கொண்ட 150 வெளி நாட்டினர்களை தமிழக அரசு தனிமைப்படுத்தி உள்ளது.
இந்தியாவில் கொரோனா தற்போதுதான் தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. பிப்ரவரி 15ம் தேதி கேரளாவில் முதல் நபருக்கு கொரோனா ஏற்பட்ட நிலையில் தற்போது ஒன்றரை மாதத்தில் நாடு முழுக்க 2018 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
இதுவரை இந்தியாவில் 67 பேர் பலியாகி உள்ளனர். முக்கியமாக டெல்லியில் மத கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டவர்களுக்கு அதிக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மத கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் தமிழகத்தில் மட்டும் 190 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் டெல்லி மத கூட்டம் குறித்த கேள்விக்கு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் விளக்கம் அளித்தார். அதில், டெல்லி மட்டுமின்றி தமிழகத்தில் நடந்த எல்லா மத கூட்டங்கள் குறித்தும் விசாரித்து வருகிறோம்.


பிப்ரவரி 15ம் தேதியில் இருந்து தமிழகத்திற்கு வந்த வெளிநாட்டு பயணிகள் எல்லோரையும் குறித்து விசாரித்து வருகிறோம். ஈஷா யோகா நடத்திய சிவராத்திரி விழாவும் இதில் அடக்கம், என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த பிப்ரவரி 21ம் தேதி கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சத்குரு மூலம் சிவராத்திரி விழா நடந்தது. இந்த விழாவில் 5000 பேர் வரை கலந்து கொண்டனர். இதில் பலர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்


இந்த நிலையில் இந்த விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. முக்கியமாக வெளிநாட்டு பயணிகள் மூலம் இங்கு கொரோனா பரவி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து நேற்று கோவை ஈஷா யோகா மையத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அங்கு எத்தனை வெளிநாட்டு பயணிகள் உள்ளனர், வெளி மாநில பயணிகள் எத்தனை பேர் தங்கி இருக்கிறார்கள் என்று சோதனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று நடந்த சோதனைக்கு பின் 150 வெளிநாட்டினர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
அவர்கள் உடன் தொடர்பு கொண்ட உள்நாட்டு பயணிகள் பலரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இவர்களில் சில வெளிநாட்டை சேர்ந்த பயணிகள் இத்தாலி உள்ளிட்ட நாட்டில் இருந்து வந்திருந்தனர். இவர்கள் அங்கு சிவராத்திரி விழா மட்டுமின்றி, ஈஷா மையத்தில் பிரபலங்கள் கலந்து கொண்ட வேறு சில விழாக்களிலும் கலந்து கொண்டு உள்ளனர்.
ஈஷா சொல்வது என்ன?
இது குறித்து ஈஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் விழாவில் சீனா, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து வந்தவர்களை அனுமதிக்கவில்லை. அதேபோல் கொரோனா பாதிக்கப்பட்ட வேறு சில நாடுகளுக்கு சென்றவர்கள் அனுமதிக்கவில்லை. கொரோனா பாதித்த நாட்டின் விமான நிலையத்தில் இறங்கி ஏறியவர்களை கூட அனுமதிக்கவில்லை. முறையாக நாங்கள் விதிகளை கடைபிடித்து இருக்கிறோம்.
இந்த நிலையில், முறையாக சோதனை செய்துவிட்டுத்தான் நாங்கள் அவர்களை உள்ளே அனுமதித்தோம் என்று ஈஷா மைய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இவர்களுக்கு என்ன மாதிரியான மருத்துவ சோதனை செய்யப்பட்டது. எங்கே சோதனை செய்யப்பட்டது, அதன் முடிவுகள் என்ன என்று எந்த விவரமும் அளிக்கப்படவில்லை. ஈஷா யோகா மையத்தின் செயல்கள் பல கேள்விகளை எழுப்பி உள்ளது.
150 பேர் யார்?
நாங்கள் எல்லோரையும் சோதனை செய்துவிட்டோம், எந்த ஆபத்தும் இல்லை என்று ஈஷா யோகா மையம் கூறிய நிலையில் தற்போது 150 பேர் அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் சிலர் இத்தாலியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஈஷா யோகா மையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். தமிழக அரசு இங்கு வந்த பயணிகளை, பிரபலங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறது

கருத்துகள் இல்லை: