செவ்வாய், 31 மார்ச், 2020

கொரோனா தனிமை முகாமாகும் கலைஞர் அரங்கம் ...ஸ்டாலின் அறிவிப்பு !

கொரோனா தனிமை முகாமாகும் கலைஞர் அரங்கம்! மின்னம்பலம் :  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க கலைஞர் அரங்கத்தை பயன்படுத்தலாம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதுவரை 74 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர். வீடு, வீடாகச் சென்று கொரோனா பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க அதிகமான இடங்கள் தேவைப்படுகிறது. எனவே பயன்படுத்தாத வீடுகள், விடுதிகள் இருந்தால் மாநகராட்சிக்கு தற்காலிகமாக கொடுத்து உதவலாம் என்று சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்தது.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷை இன்று (மார்ச் 31) சந்தித்த திமுக மாவட்டச் செயலாளர்கள் மா.சுப்பிரமணியம், சேகர்பாபு ஆகியோர், அண்ணா அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கை தனிமைப்படுத்துதல் முகாமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ஸ்டாலின் அளித்த கடிதத்தை சமர்ப்பித்தனர்.

அதில், “கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக பாதிப்புக்குள்ளாகி இருப்பவர்களுக்கும், தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கும் தேவையான நோய்த் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு மத்திய, மாநில அரசுகளுக்கு திமுக தன்னால் இயன்ற ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பையும் உதவிகளையும் அறம் சார்ந்த முக்கிய கடமையாக எண்ணி செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக திமுக அறக்கட்டளைக்கு சொந்தமான, அண்ணா அறிவாலய வளாகத்தில் இருக்கும் ‘கலைஞர் அரங்கத்தை’ கொரோனாவால் பாதிக்கப்படுவோர், தம்மை தனிமைப்படுத்திக்கொள்வதற்கு அரசு சார்பில் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அரசின் சார்பில் கலைஞர் அரங்கத்தை பயன்படுத்த, உரிய ஏற்பாடுகளைச் செய்ய வரும் அதிகாரிகளுக்கு திமுக சார்பில் தேவையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே சென்னை மாநகராட்சி இடம் வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், கலைஞர் அரங்கம், தற்காலிக தனிமைப்படுத்துதல் முகாமாக மாறவும் வாய்ப்புள்ளது.
எழில்

கருத்துகள் இல்லை: