புதன், 1 ஏப்ரல், 2020

10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு இன்று அமல்

10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு இன்று அமல் தினத்தந்தி :  புதுடெல்லி, வளரும் பொருளாதாரத்தின் தேவைகளை பூர்த்தி செய்யவும், உலக அளவில் பெரிய வங்கிகளாக உருவாக்கவும் பொதுத்துறை வங்கிகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவை பேங்க் ஆப் பரோடாவுடன் இணைக்கப்பட்டன. இந்நிலையில், மேலும் 10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அந்த இணைப்பு இன்று (புதன்கிழமை) அமலுக்கு வருகிறது. அதன்படி, இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இன்று இணைகிறது. இனிமேல், அலகாபாத் வங்கிக்கிளைகள், இந்தியன் வங்கிக்கிளைகளாக செயல்படும்.
கார்ப்பரேசன் வங்கி, ஆந்திரா வங்கி ஆகியவை யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணைகின்றன. அதனால், கார்ப்பரேசன் வங்கி, ஆந்திரா வங்கிக்கிளைகள், இனிமேல் யூனியன் பேங்க் ஆப் இந்தியா கிளைகளாக செயல்படும். சிண்டிகேட் வங்கி, இன்று கனரா வங்கியுடன் இணைகிறது. இனிமேல், சிண்டிகேட் வங்கிக்கிளைகள், கனரா வங்கிக்கிளைகளாக செயல்படும்.


யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கி ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைகின்றன. மேற்கண்ட 2 வங்கிக்கிளைகளும் இனிமேல் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கிளைகளாக செயல்படும்.

இதன்மூலம், 10 பொதுத்துறை வங்கிகள், 4 வங்கிகளாக இணைகிறது. இந்த இணைப்பு தொடர்பான அறிவிப்பாணையை ரிசர்வ் வங்கி ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இணைப்பைத் தொடர்ந்து, நாட்டில் பொதுத்துறை வங்கிகள் எண்ணிக்கை 12 ஆக குறைகிறது. அத்துடன், பாரத ஸ்டேட் வங்கியை தொடர்ந்து, 2-வது பெரிய வங்கியாக பஞ்சாப் நேஷனல் வங்கி உருவெடுக்கிறது. பேங்க் ஆப் பரோடா, கனரா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பெறுகின்றன.

கருத்துகள் இல்லை: