புதன், 1 ஏப்ரல், 2020

BBC கொரோனா: டெல்லி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவ இந்திய ராணுவத்தை அழைக்காதது ஏன்? - விரிவான தகவல்

ஜுகல் ஆர் புரோகித் பிபிசி : கொரோனா மெல்லப் பரவ தொடங்கிய போது வெளிநாடுகளில் சிக்கி இருந்த இந்தியர்களை அழைத்து வர இந்திய பாதுகாப்புப் படையின் அனைத்து பிரிவுகளும் பணியாற்றின. டெல்லியிலிருந்து கொத்து கொத்தாக வேறு மாநில தொழிலாளர்கள் வெளியேறிய போது பலரின் அரசின் செயலற்ற, பொறுப்பற்ற தன்மையை விமர்சித்தார்கள். அந்த சமயத்தில் இந்திய பாதுகாப்புப் படையைப் பயன்படுத்தி மக்கள் வெளியேற உதவி இருக்க முடியுமா? உள்நாட்டிலேயே புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவ இந்திய பாதுகாப்புப் படையை அரசு எப்படிப் பயன்படுத்தி இருக்கலாம்? அவர்களுக்கு எவ்வாறான பணிகளைக் கொடுத்திருக்கலாம்?
இதுபோன்ற விவாதம் இப்போது வரை நடைபெறவில்லை. ஆனால், அப்படியான யோசனைகளைத் திறந்த மனதுடன் வரவேற்கிறோம் என்கிறார் மத்திய ரிசர்வ் போலீஸ் படை பிரிவின் (சி.ஆர்.பி.எஃப்) இயக்குநர் ஏ.பி. மகேஷ்வரி.
மத்தியிலிருந்து எந்த நேரடியான வழிகாட்டுதல்களும் இப்போது வரை இல்லாத போது, இந்தியாவின் ஒவ்வொரு படைப் பிரிவும் தங்களால் ஆன வகையில் மக்களுக்கு உதவ முயன்று வருகிறது.
சி.ஆர்.பி.எஃப் நாடு முழுவதும் உள்ள தங்களது அனைத்து பிரிவுகளுக்கும் அந்தந்த மாநில அரசுடன் தொடர்பில் இருக்குமாறு, அவர்களுக்கு உதவுமாறு கடிதம் எழுதி உள்ளது.
ஏ.பி. மகேஷ்வரி, "எங்களது வளாகத்தில் சமைத்து, தேவைப்படும் நபர்களுக்கு உணவு விநியோக. செய்து வருகிறோம். இந்த அசாதாரண சூழலில் எங்களால் முடிந்த வகையில் உதவி வருகிறோம்," என்கிறார் அவர்.
தேசிய பேரிடர் மீட்புப் படையும் தங்களால் இயன்ற வழிகளில் மாநில நிர்வாகத்திற்கு உதவி வருகிறது.
அதன் இயக்குநர் எஸ்.என் பிரதான், "உதவி கோரப்பட்டால் நாங்கள் உதவத் தயாராகவே இருக்கிறோம்." என்கிறார்.

இந்திய ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் நமக்குப் பதில் அளிக்கவில்லை. இந்திய ராணுவத்திடம் உதவிக் கோரப்படவில்லை என்றே பல அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ராணுவ ஊழியர்களின் தலைவர் ஜெனரல் நரவனே அண்மையில் கொரோனா தொடர்பாக ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், "மக்களுக்கு உதவவே இந்திய ராணுவம் உள்ளது. சிவில் சமூக அதிகாரிகள் எப்போது உதவி கோரினாலும் நாங்கள் உதவுவோம்," என்றார்.

மேலும் அவர், "வரும் நாட்களில் இந்திய ராணுவத்திற்குள்ளேயே கொரோனா தொடர்பான மருத்துவ தேவைகள் அதிகரிக்கலாம். மருத்துவ வசதிகளையும், உள்கட்டமைப்புகளையும் மேம்படுத்தும்படி தலைமையகத்திற்குக் கோரி இருக்கிறோம்," என்று ஜெனரல் நரவனே தெரிவித்துள்ளார்.
ஆனால், கொரோனாவை தொடர்ந்து உள்நாட்டில் தொழிலாளர்கள் புலம் பெயர்வார்கள் என்பதைக் கணிக்க அரசாங்கம் தவறிவிட்டதாகவே தெரிகிறது.
இது தொடர்பாக ஒருங்கிணைந்த பாதுகாப்பு ஊழியர்களின் ஓய்வுபெற்ற முன்னாள் தலைவர் லெஃப்டினெண்ட் ஜெனரல் அனில் சயிட்டை தொடர்பு கொண்டோம்.
2013ஆம் ஆண்டு உத்தராகாண்ட்டில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது பணியாற்றியவர் இவர்.
அனில், "உள்நாட்டுக்குள்ளேயே புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நாடு முடக்கப்பட்டதை அடுத்து தங்கள் வீடு செல்ல முயல்வார்கள் என்பதை ஏன் முன்பே கணிக்கவில்லை என்று தெரியவில்லை," என்கிறார்.
மேலும் அவர், "நமக்கு ஏற்கெனவே அனுபவம் இருக்கிறது. 2013 ஆண்டு ஏற்பட்ட உத்தராகண்ட் பேரழிவின் போது ஏறத்தாழ 100,000 மக்களை நாம் முறையாக அப்புறப்படுத்தப்படுத்தி இருக்கிறோம். பிரதமரின் நல்ல எண்ணம் கொண்ட ஒரு செயல் இப்படி மோசமாகச் செயல்படுத்தப்படுவது எனக்கு மன வேதனையைத் தருகிறது" என்கிறார்.

எப்படி பாதுகாப்புப் படையைப் பயன்படுத்தி இருக்கலாம்?

"பாதுகாப்புப் படைக்கென்று நாடு முழுவதும் இடம் உள்ளது. அங்கு விரைவாகத் தற்காலிக குடியிருப்புகளை ஏற்படுத்தி மக்களைத் தங்க வைத்திருக்கலாம்," என்கிறார் நேஷனல் செக்கியூரிட்டி கார்ட் (என்.எஸ்.ஜி)-யின் டைரக்டர் ஜெனரல் ராஜன் மெடேகர்.
இந்தியாவிலே அதிக நிலம் வைத்திருக்கும் அமைச்சகம் பாதுகாப்பு அமைச்சகம் தான். அவர்களுக்கு 1.60 லட்சம் ஏக்கர் நிலம் 62 கண்டோன்மெண்டுகளிலும், கண்டோன்மெண்டுகளுக்கு வெளியே 16.35 லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது.
பெயர் குறிப்பிட விரும்பாத பல அதிகாரிகள், அனுமதிக்கப்பட்டால் இந்த அசாதாரண சூழலில் உதவத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர்.
முன்னாள் சி.ஆர்.பி.எஃப் அதிகாரி, "அமர்நாத் யாத்திரையின் போது நாங்கள் ஆண்டு தோறும் பணியாற்றுகிறோம். அதுவும் இதுபோல பெரும் மக்கள் திரளை கையாளும் பணிதான். எங்களுக்குத் தேவையாக இருந்ததெல்லாம் அரசின் அனுமதி மட்டும்தான்," என்கிறார்.
மூன்று நாட்களுக்கு முன் டெல்லியில் ஏற்பட்ட புலம்பெயர் தொழிலாளர் மக்கள் திரள் பிரச்சனையைப் பற்றி மட்டும்தான் பேசுகிறோம்.
ஆனால், அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அதாவது மார்ச் 21ஆம் தேதி மும்பையில் இதுபோல பிரச்சனை ஏற்பட்டது.
பெரும் எண்ணிக்கையிலான அமைப்புசாரா தொழிலாளர்கள் ரயில் நிலையத்தில் தங்கள் சொந்த ஊர் செல்ல திரண்டனர்.
குறைந்தபட்சம் அந்த அனுபவத்திலிருந்ததாவது பாடம் கற்று இருந்தால் டெல்லி சிக்கல் ஏற்பட்டு இருக்காது

கருத்துகள் இல்லை: