புதன், 12 பிப்ரவரி, 2020

ராமேஸ்வரம் ..`கஞ்சா இலைகளைக் கொடுத்தால் தங்கக் கட்டி!’ – மிரளவைக்கும் கடத்தல் கதைகள்

கடத்தல் பீடி இலைகளை கைப்பற்றிய கடலோரக் காவல்படை.;கஞ்சா இலைகளைக் கொடுத்தால் தங்கக் கட்டி!’ – சுங்கத்துறையை மிரளவைக்கும் ராமேஸ்வரம் மீனவர்கள் vikatan.com = இரா.மோகன்; = உ.பாண்டி : கடத்தல் பீடி இலைகளை கைப்பற்றிய கடலோரக் காவல்படை.
ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளிலிருந்து கஞ்சா மற்றும் கடல் அட்டை, கடல் பல்லி போன்றவையும் தூத்துக்குடி கடலோரப் பகுதிகளிலிருந்து பீடி இலைகளும் கடத்தப்பட்டு வருகின்றன.
ராமேஸ்வரம் கடல் மற்றும் கரையோரப் பகுதிகளில் கடந்த 3 நாள்களாக அடுத்தடுத்து பீடி இலை மூட்டைகள் ஒதுங்கி வருகின்றன. கடல் பகுதி கண்காணிப்பினை உறுதி செய்யும் ‘சாகர் கவாஜ்’ ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில் தொடர்ந்து பீடி இலை மூட்டைகள் சிக்கி வருவதால் கடத்தல் வேட்டையைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸாரும் சுங்கத்துறையினரும் திணறி வருகின்றனர்.

தமிழக கடலோரப் பகுதிகளிலிருந்து இலங்கைக்குக் கஞ்சா, பீடி இலைகள் மற்றும் போதைப் பொருள்கள் கடத்துவது தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. மேலும் அரியவகை கடல்வாழ் உயிரினங்களான கடல் அட்டை, கடல் பல்லி உள்ளிட்டவையும் இலங்கைக்குக் கடத்தப்பட்டு வருகின்றன. ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளிலிருந்து கஞ்சா மற்றும் கடல் அட்டை, கடல் பல்லி போன்றவையும் தூத்துக்குடி கடலோரப் பகுதிகளிலிருந்து பீடி இலைகளும் கடத்தப்பட்டு வருகின்றன.



இவ்வாறு கடத்திச் செல்லப்படும் பொருள்களை இலங்கையில் உள்ள கடத்தல்காரர்களிடம் ஒப்படைத்துவிட்டு அவற்றுக்கு மாற்றாக இலங்கையிலிருந்து தங்கக் கட்டிகளைக் கடத்தி வருவதை இங்குள்ள கடத்தல் புள்ளிகள் வழக்கமாக வைத்துள்ளனர். கடந்த சில நாள்களுக்கு முன் வேதாளைப் பகுதியிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட கஞ்சாவுக்குப் பதிலாக 4.200 கிலோ தங்கக் கட்டிகளைக் கடத்தி வந்த மீனவர்கள் நால்வரை இலங்கைக் கடற்படையினர் சிறைப் பிடித்ததுடன், அவர்களிடம் இருந்த தங்கக் கட்டிகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





பீடி இலைகளை மீட்ட கடலோரக் காவல்படை
பீடி இலைகளை மீட்ட கடலோரக் காவல்படை
இந்நிலையில் கடந்த 6-ம் தேதி தமிழகக் கடலோரப் பகுதிகளில் ஊடுருவல் பணியினை ஆய்வு செய்யும் வகையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘சாகர் கவாஜ்’ எனும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. இந்த ஒத்திகையின் போது வெடிகுண்டுகளுடன் ஊடுருவிய கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையில் பணியாற்றும் கமாண்டோ வீரர்கள் சிக்கினர். இதன் மூலம் தமிழகக் கடல்பகுதியின் கண்காணிப்பு திருப்தியளிக்கும்விதத்தில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.





மண்டபத்தில் சிக்கிய பீடி இலை மூட்டைகள்
மண்டபத்தில் சிக்கிய பீடி இலை மூட்டைகள்
இந்நிலையில் கடந்த 8-ம் தேதி காலை இந்தியக் கடலோரப் பகுதியில் இந்தியக் கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான `ராணி அவந்திபாய்’ கப்பல் வழக்கம்போல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது ராமேஸ்வரத்திலிருந்து சுமார் 9 கி.மீ தொலைவில் கடலில் சில சாக்கு மூட்டைகள் மிதந்து வருவதைக் கண்டனர்.
இதையடுத்து ரோந்துக் கப்பலில் இருந்த கடலோரக் காவல்படை வீரர்கள் மிதவைப் படகில் சென்று அந்த மூட்டைகளை மீட்டனர். மீட்கப்பட்ட மூட்டைகளை சோதனை செய்தபோது அவற்றில் பீடி சுற்றுவதற்குப் பயன்படுத்தும் இலைகள் இருப்பது தெரியவந்தன. இதையடுத்து மண்டபம் கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான சி-432 என்ற கப்பலில் சென்ற கடலோரக் காவல்படையினரிடம் ஒப்படைத்தனர். சுமார் 700 கிலோ எடை கொண்ட அந்தப் பீடி இலைகளை மண்டபம் கடலோரக் காவல்படை கமாண்டர் வெங்கடேசன் தலைமையிலான வீரர்கள் ராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதேபோல் கச்சத்தீவு அருகே இந்திய கடல் பகுதியில் மிதந்த 9 மூட்டை பீடி இலைகளை இந்தியக் கடற்படையினர் கைப்பற்றினர்.






ராமேஸ்வரத்தில் ஒதுங்கிய பீடி இலைகள்
ராமேஸ்வரத்தில் ஒதுங்கிய பீடி இலைகள்
இந்நிலையில் நேற்று மண்டபம் சமத்துவபுரம் அருகே 51 மூட்டை பீடி இலைகள் கேட்பாரற்று கிடந்தன. இதையடுத்து அங்கு வந்த மண்டபம் கடலோரக் பாதுகாப்புக் குழும போலீஸார் அவற்றைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதைக் கடத்தியவர்கள் யார் என்பது கண்டறியப்படாத நிலையில் இன்று காலை ராமேஸ்வரம் துறைமுகப் பகுதியில் மேலும் 9 பீடி இலை மூட்டைகள் கரை ஒதுங்கிக் கிடந்தன. கடந்த 3 நாள்களில் மட்டும் சுமார் 2 ஆயிரம் கிலோ எடை கொண்ட பீடி இலை மூட்டைகள் தொடர்ந்து சிக்கி வரும் நிலையில், கடத்தல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த முடியாமல் சுங்கத்துறையினரும் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாரும் திணறி வருகின்றனர்.
vikatan.com

கருத்துகள் இல்லை: