திங்கள், 10 பிப்ரவரி, 2020

போலீஸ் வேலைக்கு தேர்வான 800 பேர் தகுதி நீக்கம் .. விளையாட்டு பிரிவு சான்றிதழ் சரி இல்லாததால்

விளையாட்டு பிரிவு சான்றிதழ் சரி இல்லாததால் போலீஸ் வேலைக்கு தேர்வான 800 பேர் தகுதி நீக்கம் தினத்தந்தி  : விளையாட்டு பிரிவு சான்றிதழ் சரி இல்லாததால் போலீஸ் வேலைக்கு தேர்வான 800 பேரை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் தகுதி நீக்கம் செய்து உள்ளது. சென்னை, போலீஸ்துறை, தீயணைப்புத்துறை, சிறைத்துறை ஆகியவற்றுக்கு காவலர்கள், தீயணைப்பு வீரர்கள், ஜெயில் வார்டர்கள் என 8 ஆயிரத்து 888 பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதற்காக ஆகஸ்டு 25-ந் தேதியன்று எழுத்துத்தேர்வு நடந்தது. 3 லட்சத்து 25 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள். அதில் வெற்றி பெற்றவர்களுக்கு 15 மையங்களில் உடல் தகுதித்தேர்வு நடந்தது. இறுதியில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் விளையாட்டு பிரிவினருக்கு 10 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. விளையாட்டு பிரிவு இட ஒதுக்கீட்டின்மூலம் தேர்வான சுமார் 800 பேரை, சான்றிதழ்கள் சரியில்லை என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் தகுதி நீக்கம் செய்து அறிவித்தது.


இதுதொடர்பாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

விளையாட்டு பிரிவின் கீழ் வேலையில் சேருவதற்கு 3 விதமான விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. விளையாட்டு பிரிவில் வேலைக்கு சேருபவர்கள் சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளிலோ, மாநிலங்களுக்கிடையே நடக்கும் விளையாட்டு போட்டிகளிலோ அல்லது பல்கலைக்கழகங்கள் இடையே நடக்கும் விளையாட்டு போட்டிகளிலோ பங்குபெற்றிருக்க வேண்டும்.

இதுதொடர்பான சான்றிதழ்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளில் இருந்து பெற்றிருக்க வேண்டும். அதுபோன்ற சான்றிதழ்களை சமர்ப்பிக்காததால், போலீஸ் வேலைக்கு தேர்வான சுமார் 800 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். ஆனால் அவர்கள் சமர்ப்பித்த சான்றிதழ்கள் போலியானவை அல்ல. அங்கீகரிக்கப்படாத அமைப்புகள் மூலம் அவர்கள் சான்றிதழ்களை சமர்ப்பித்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.

ஆனால் இந்த 800 பேரையும் போலீஸ் வேலையில் சேர்க்காமல் நிராகரிக்கவில்லை. அவர்கள் பொதுப்பிரிவில் தங்களது மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அதுபோல் பொதுப்பிரிவில் சிலர் வேலையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். மேலும் அவர்கள் சார்ந்த சாதி ரீதியிலான இடஒதுக்கீடு அடிப்படையிலும் அவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தகுதியான சான்றிதழ்கள் கொடுக்காததால் விளையாட்டு பிரிவு ஒதுக்கீட்டில் இருந்து மட்டும் அவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதில் எந்தவித குளறுபடியோ, முறைகேடோ நடக்கவில்லை. வெளிப்படையாக இந்த தேர்வு நடைபெற்று உள்ளது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்

கருத்துகள் இல்லை: