திங்கள், 10 பிப்ரவரி, 2020

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம்; நம்பகத்தன்மை இழக்கும் மக்களாட்சி!

ராஜன் குறை
சிறப்புக் கட்டுரை: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம்; நம்பகத்தன்மை இழக்கும் மக்களாட்சி!ராஜன் குறை- மின்னம்பலம் :  எந்த ஒரு நாட்டிலும் சட்டம் ஒழுங்கையோ, பொருள் உற்பத்தி மற்றும் சமூக வாழ்வையோ ராணுவத்தாலோ, போலீசாலோ மட்டுமே உறுதி செய்துவிட முடியாது. மக்கள் அவர்களாக விரும்பி சட்டத்துக்குக் கூடியவரை கட்டுப்பட்டு நடந்தால்தான் தேசம் என்ற கருத்தாக்கம் நிலைபெறும்; சமூக அமைதியும் வளர்ச்சியும் சாத்தியமாகும். மக்களின் ஒத்துழைப்புக்கு அவர்கள் மக்களாட்சி நடைமுறைகளை, அரசின் செயல்பாட்டை, நீதியின் பாரபட்சமற்ற தன்மையை நம்புவது அவசியம். அரசும், மக்களாட்சி நடைமுறைகளும் அந்த நம்பகத்தன்மையை இழந்தால் நாடெங்கும் குற்றச்செயல்களும் கலகங்களும் பெருகும். அடக்குமுறையே ஆட்சிமுறையாகும். அதனால், சமூக வாழ்வும் வளர்ச்சியும் பெரும் பாதிப்புக்குள்ளாகும். தேசம் சீரழியும்.
இந்தியா இத்தகைய ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறதோ என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை. ஏனெனில் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டிய அரசு நிறுவனங்கள், அமைப்புகள், நீதிமன்றம் ஆகிய அனைத்துமே சந்தேகத்துக்கு உள்ளாகின்றன. வெளிப்படையாகவே மக்கள் அவர்கள் ஐயங்களை உரத்துப் பேசுகிறார்கள். ஊடகங்கள் விவாதிக்கின்றன. இந்த நிலை மெள்ள, மெள்ள கட்டுக்குமீறி சென்று கொண்டுள்ளது. பொதுவான இந்தப் பெருகும் அவநம்பிக்கை சூழலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் என்ற தொழில்நுட்பம் சார்ந்த உபகரணம் சிக்கலை தீவிரப்படுத்துகிறது என்றால் மிகையாகாது.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம்
நேற்று முந்தைய தினம், பிப்ரவரி 8ஆம் தேதி புதுடெல்லி மாநில அரசுக்கான தேர்தல் நடைபெற்றது. கடந்த பல மாதங்களாகவே ஆளும்கட்சியான ஆம்ஆத்மி கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது அனைத்து தரப்பினரின் கருத்தாக உள்ளது. அதற்குக் காரணங்கள் கடந்த ஐந்தாண்டுகளில் ஆம்ஆத்மி அரசு மேற்கொண்ட மக்கள் நல திட்டங்கள். அவர்கள் மேலும் வாக்குறுதி அளிக்கும் புதிய திட்டங்கள் போன்றவை. அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை. முதல்வர் கேஜ்ரிவால், துணை முதல்வர் மனிஷ் சிசோதியா ஆகியோர் எளிதில் அணுகப்படக் கூடியவர்களாக இருக்கிறார்கள். டெல்லி ஒரு நகரம் எனக் கருதப்பட்டாலும், தலைநகர் பிரதேசமான இதன் மக்கள்தொகை இரண்டு கோடியைத் தொடுகிறது. அந்த அளவில் இது ஒரு மாநிலம். ஆம்ஆத்மி கட்சி ஒரு மாநில கட்சியாக, டெல்லி அடையாளத்தை உருவாக்கும் கட்சியாக உள்ளது. இறுதியாக கேஜ்ரிவாலுக்கு மாற்றாக ஒரு முதலமைச்சர் வேட்பாளரை பாரதீய ஜனதா கட்சியால் முன்னிறுத்த முடியவில்லை. காங்கிரஸ் கட்சி தன் ஆதரவு தளத்தை முற்றிலும் இழந்துவிட்டது. இந்த நிலையில் அனைத்துத் தேர்தல் கணிப்புகளிலும் தேர்தலுக்கு முன்னாலும், தேர்தல் முடிந்தவுடன் நடத்தப்படும் எக்ஸிட் போலிலும் ஆம்ஆத்மியே பெரும்பான்மை பெறும் என்ற கணிப்பே உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனாலும், ஆம்ஆத்மி கட்சியிலும் சரி, மக்களிடமும் சரி ஓர் அச்சம் நிலவுகிறது. அது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு நிகழலாம் என்ற அச்சமே. நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப் பதிவு குறித்த தகவல்களில் வெளியான பல முரண்களை தேர்தல் கமிஷனால் விளக்க முடியவில்லை. இப்போது டெல்லி தேர்தலிலும் ஓட்டளித்தவர்கள் குறித்த இறுதி புள்ளி விவரங்களைத் தருவதில் தேர்தல் கமிஷன் தாமதம் செய்துள்ளது. முரண்பாடான தகவல்கள் வெளியாகின்றன. முதல்வர் கேஜ்ரிவால் இதில் முறைகேடுகள் இருக்கலாம் என ஐயம் தெரிவித்துள்ளார். இதனால் வாக்கு இயந்திரங்களில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்ற அச்சம் பரவலாகப் பேசப்படுகிறது. இது நிச்சயம் ஆரோக்கியமான சூழல் இல்லை.
பாரதீய ஜனதா கட்சி ஆதரவாளர்கள் எதிர்க்கட்சிகள் வெற்றிபெற்றால் அது மக்கள் ஆதரவு, மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி வெற்றிபெற்றால் அது மின்னணு இயந்திர முறைகேடு என்று சொல்லலாமா என்று கேட்கிறார்கள். இதில் பிரச்சினை என்னவென்றால் சரியோ, தவறோ பல்வேறு ஐயப்பாடுகளுக்கு மின்னணு இயந்திரங்கள் இடமளிக்கின்றன என்பதுதான். காகித ஓட்டுக்கள் என்றுமே எண்ணி சரிபார்க்கக் கூடிய தூலமான பொருள்களாக உள்ளன. மின்னணு இயந்திர எண்ணிக்கையோ அந்த இயந்திரத்தின் செயல்படும் திறனை பொறுத்தே உள்ளது. அந்தக் கணக்கீட்டை மென்பொருள் தொழில்நுட்ப உதவியுடன் மாற்றிவிடலாம் என்று பலரும் கருதுகிறார்கள். இது போன்ற இடையீட்டை குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் செய்வதன் மூலம் தேர்தல் முடிவுகளை ஆளும்கட்சி மாற்றிவிட முடியும் என்ற அச்சம் பரவலாக இருக்கிறது. இது மக்களாட்சிக்கு பெரும் பின்னடைவு.
அரசின் நடைமுறைகள் நேர்மையாக இருப்பது மட்டும் போதாது, நேர்மையாக இருப்பதாக நம்பும்படி இருக்க வேண்டும் என்பது முக்கியமான அரசியல் கோட்பாடு. சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என்ற சொலவடையின் மூலம் இதைச் சுட்டுவார்கள். மனைவியை உருவகமாக்குவது ஆணாதிக்க மனோபாவம் என்றாலும் இதன் பொருள் என்னவென்றால், ஐயம் தோன்றுவதற்கே இடம் தராதபடி அரசு இயங்க வேண்டும் என்பதுதான்.
தூலமான காகித ஓட்டுக்களுக்குப் பதிலாக, ஓட்டை இயந்திரத்தில் ஓர் எண்ணாக மாற்றும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் ஏராளமான ஐயங்களுக்கு வாய்ப்பளிக்கிறது. சென்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின்போது இந்த இயந்திரங்கள் தொடர்பேயில்லாத ஹோட்டல் அறைகள் போன்ற இடங்களில் சிக்கின. சில தொகுதிகளுக்குத் தேவையே இல்லாமல் தேர்தல் முடிந்த பிறகு இயந்திரங்கள் அனுப்பப்பட்டன. இந்த இயந்திரங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தயாரான மொத்த இயந்திரங்களுக்கான கணக்கு வழக்கு முறையாக இல்லை. தேர்தல் கமிஷனால் உற்பத்தியான இயந்திரங்களுக்கான பயன்பாட்டு விவரங்களைத் தெரிவிக்க முடியவில்லை. ஏராளமான இயந்திரங்கள் கணக்கில் வராமல் உள்ளன. இவ்வாறான பல ஐயப்பாடுகள் நிலவுகின்றன. பத்திரிகைகள் விரிவாக எழுதுகின்றன.
ஆம்ஆத்மி கட்சி டெல்லி தேர்தலில் வெற்றி பெற்றாலும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மின்னணு வாக்குப் பதிவுக்கு எதிராக போராட வேண்டும். ஏனெனில் அந்த வெற்றி அடுத்த வேறொரு தேர்தலில் மீண்டும் இந்த ஐயம் தோன்றுவதைத் தவிர்க்காது. அதன் அளவில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் ஐயத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது. பல்வேறு தேர்தல் மையங்களில் பணிபுரிபவர்கள் இந்த இயந்திரங்கள் பலவிதங்களில் பழுதாவதைப் பார்க்கிறார்கள். குறைந்த எண்ணிக்கையில் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும்போது அதன் நம்பகத்தன்மை மிகவும் குறைகிறது. இது தொடர்பான வழக்குகள் மிகவும் தாமதமாக விசாரிக்கப்படுகின்றன. அது தவற்றை நீதிமன்றங்கள் சரிசெய்யும் என்ற நம்பிக்கையையும் தகர்க்கின்றது.
நீதிமன்றங்களில் தாமதமாகும் தீர்ப்புகள்
பொதுவாக நீதிமன்றங்களை அவசரமாகத் தீர்ப்பு வழங்கும்படி நிர்பந்திக்கக் கூடாது. ஏனெனில், சாட்சியங்களை, வாதங்களை, சட்டங்களை முழுமையாக சீர்தூக்கிப் பார்த்து காரண காரியங்களுடன், தர்க்க ரீதியான சிந்தனையின் அடிப்படையில் நீதி வழங்கப்பட வேண்டும் என்றால் போதிய அவகாசம் இருக்க வேண்டும். ஆனால், தேர்தலில் வெற்றிபெறும் மக்கள் பிரதிநிதியின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள்தான். அவருடைய வெற்றியைக் குறித்து வழக்கு தொடுக்கப்பட்டால் அந்த வழக்கை விசாரிக்க நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் எடுத்துக்கொண்டால் அந்த வழக்கே பொருளிழந்து போகிறது.
தேர்தல் தொடர்பான வழக்குகள், சட்டமன்றத்தில் பெரும்பான்மை தொடர்பான வழக்குகள் உடனடியாக விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படாவிட்டால், ஆட்சியின் மீதான நம்பிக்கை குறைகிறது. தமிழகத்தில் திமுக வேட்பாளர் அப்பாவு ராதாபுரத்தில் சொற்ப எண்ணிக்கையில், 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அவர் ஒரு சில முரண்களை சுட்டிக்காட்டி தபால் ஓட்டுகளையும், ஒரு சில சுற்றுகளில் எண்ணப்பட்ட ஓட்டுகளையும் மறு எண்ணிக்கை செய்யவும் கோரி வழக்கு தொடர்ந்தார். கீழ் கோர்ட்டில் நீண்ட நாள் விசாரணைக்குப் பிறகு கோர்ட் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டது. உத்தரவின்படி மறுவாக்கு எண்ணிக்கையும் நடத்தப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் அந்த எண்ணிக்கையை அறிவிக்கக் கூடாது எனத் தடுத்து விட்டது. தேர்தல் முடிந்து நான்காண்டுகள் கடந்து விட்ட நிலையில் இன்னமும் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவில்லை.
ராதாபுரம் தொகுதி வாக்காளர்கள் இந்த நிலையைக் குறித்து என்ன நினைப்பார்கள்? அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் உண்மையில் வென்றவரா, இல்லையா என்பதே ஐயத்தில் இருக்குமானால், தேர்தலின் பொருள் என்ன? நீதிமன்றங்கள் இது போன்ற வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுத்து தீர்த்து வைக்க வேண்டாமா? தேர்தல் கமிஷன் தவறான நடைமுறையைப் பின்பற்றியிருந்தால் அதை மக்கள் பிரதிநிதியின் பதவிக்காலம் முடிந்த பிறகு கண்டிப்பதில் என்ன பொருள்? இதே போல 11 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆட்சிக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் பல ஆண்டுகளாகத் தீர்ப்பு சொல்லப்படாமல் எடப்பாடியின் ஆட்சி சட்டரீதியாக முறையானதா, அதற்குப் பெரும்பான்மை இருக்கிறதா என்பதே தெளிவாகாமல் இருக்கிறது, ஒருவேளை அதில் ஆட்சிக்கு எதிரான தீர்ப்பு வந்தால் நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்ததை ரத்து செய்ய முடியுமா? இதுபோன்ற தாமதங்கள் நீதியின் மேல் மக்களை நம்பிக்கை இழக்கச் செய்யாதா?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் அவர் குற்றவாளி என்ற தீர்ப்பை 2016 தேர்தலுக்கு முன்பே எட்டிவிட்டது என்று கருதப்படுகிறது. நீதிபதி சலமேஷ்வர் அந்த வழக்கு தொடர்பான ஐயங்களை வெளிப்படுத்தியுள்ளார். அந்தத் தீர்ப்பு வெளியிடப்படாமல் தாமதிக்கப்பட்டதால் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட்டு ஆட்சிக்கும் வந்துவிட்டார். பின்னர் அவர் இறந்த பிறகு, அவர் தோழி சசிகலா முதல்வராகப் பதவியேற்க முடிவு செய்த நிலையில்தான் தீர்ப்பு திடீரென்று வெளியாகியது. ஜெயலலிதா இறந்துவிட்டால் அவருக்கான தண்டனை நிறுத்திவைக்கப்பட்டு, சசிகலாவுக்கு மட்டும் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பு வெளியாவது தாமதமானதால் தமிழக வரலாறே மாறிவிட்டது என்றால் மிகையாகாது.
இது போன்ற தேர்தல் வெற்றி, ஆட்சியின் பெரும்பான்மை, அரசியல்வாதிகள் தகுதி நீக்கம் போன்ற முக்கிய பிரச்சினைகளில் வழக்குக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதற்கான நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் அல்லது அதற்கென தனியான நீதிமன்றம் உருவாக்கப்பட வேண்டும். தவறான தேர்தல் நடைமுறைகளால். சட்டமன்ற நடைமுறைகளால் ஆட்சி அமைந்தால் அதன் விளைவுகளுக்கு யார் பொறுப்பேற்பது என்ற கேள்வி பூதாகாரமானது. மக்கள் தேர்தலின் மீது, ஆட்சியின் மீது நம்பிக்கையிழப்பது மிகவும் அபாயகரமானது. இத்தகைய பலவீனமான சூழலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதை அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது தேவையா, இன்றியமையாததா என்பதே பரிசீலிக்கப் படவேண்டியது. இதில் சில நிர்வாக வசதிகள் இருக்கலாம்; ஆனால் அதற்கு நம்பகத்தன்மையை விலையாகக் கொடுக்க முடியாது.
கட்டுரையாளர் குறிப்பு

ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுடெல்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

கருத்துகள் இல்லை: