வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு முடித்துவைப்பு!

11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு முடித்துவைப்பு!மின்னம்பலம் : 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை முடித்துவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி அரசு மீது நடந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ஓ.பன்னீர் செல்வம், மாஃபா பாண்டியராஜன், செம்மலை உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி கொறடா உத்தரவுக்கு எதிராக செயல்பட்ட இந்த 11 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக கொறடா சக்கரபாணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அது தள்ளுபடி செய்யப்பட்டதால், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் சக்கரபாணி.

இந்த வழக்கு கடந்த 4ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனு மீது 3 வருடங்களாக முடிவெடுக்காமல் சபாநாயகர் தாமதம் காட்டியது ஏன் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், திமுக அளித்த மனு மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை, இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்பது குறித்து விரிவாக பதிலளிக்க சட்டமன்றச் செயலாளருக்கு உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு முன்பு இன்று (பிப்ரவரி 14) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சபாநாயகர் தரப்பில், “சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கும் நடவடிக்கைகளை ஏற்கனவே தொடங்கிவிட்டோம். இந்த விவகாரத்தில் விரைவில் ஒரு தீர்வுகாணப்படும்” என்ற வாதம் எடுத்துவைக்கப்பட்டது.
இதனையடுத்து, சபாநாயகர் தரப்பு வாதத்தை ஏற்பதாகத் தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு, “நடவடிக்கை எடுக்க வேண்டுமென சபாநாயகருக்கு எந்த காலக்கெடுவும் விதிக்க முடியாது” என்று குறிப்பிட்டனர். மேலும், சபாநாயகர் சட்டப்படி செயல்பட்டு இந்த விவகாரத்தில் முடிவெடுப்பார் என நம்புவதாகவும் தெரிவித்து வழக்கை முடித்துவைத்தனர்.
த.எழிலரசன்

கருத்துகள் இல்லை: