புதன், 12 பிப்ரவரி, 2020

ராதாபுரத்தில் நான்தான் வென்றேன்: சஸ்பென்ஸை உடைத்த அப்பாவு

மின்னம்பலம் : ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கையில் தான் வெற்றிபெற்றதாக அப்பாவு தெரிவித்துள்ளார்.
ராதாபுரத்தில் நான்தான் வென்றேன்: சஸ்பென்ஸை உடைத்த அப்பாவு
2016 சட்டமன்றத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் அப்பாவுவை விட 49 வாக்குகள் அதிகம் பெற்று அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பாவு தொடர்ந்த வழக்கில், தபால் வாக்குகளையும் 19,20,21 சுற்றுகளின் வாக்குகளையும் மீண்டும் எண்ண உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி, கடந்த ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. எனினும் இன்பதுரை தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்தது. இந்த வழக்கு கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து இதுவரை விசாரிக்கப்படாமலேயே பலமுறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தொடர்பான அமைச்சர் ஜெயக்குமாரின் குற்றச்சாட்டுக்கு இன்று (பிப்ரவரி 12) பதிலளித்த அப்பாவு, ராதாபுரம் தேர்தல் வெற்றி தொடர்பான தகவலையும் தெரிவித்துள்ளார்.
“15ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன். இந்த முறையும் ராதாபுரம் தொகுதியில் வெற்றி பெற்றாலும் கூட எம்.எல்.ஏ வாய்ப்பை இழந்த நிலையில்தான் இருக்கிறேன். இதுதொடர்பாக வழக்குத் தொடர்ந்து, அதனடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.” என்று குறிப்பிட்ட அப்பாவு,“வாக்கு எண்ணுமிடத்தில் நானும், இப்போது எம்.எல்.ஏ என்று சொல்லிக்கொண்டிருக்கும் இன்பதுரையும் இருந்தோம். வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு நானும், இன்பதுரையும் கையெழுத்திட்டுள்ளோம். இதில் நான் 98 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன்.” என்ற தகவலையும் தெரிவித்தார்.
இந்தத் தீர்ப்பை வெளியிடக் கூடாது என உயர் நீதிமன்றத்திற்குதான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாகவும், முடிவை சொல்லக் கூடாது என தனக்கு யாரும் தடை விதிக்கவில்லை என்றும் அப்பாவு தெரிவித்தார்.
வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் தடை விதித்த அன்று, வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு பேட்டியளித்த அப்பாவு, “வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட உச்ச நீதிமன்றம் வெளியிட தடை விதித்துள்ளது. அதனால் அதுபற்றி எதுவும் பேச முடியாது’ என்று முடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.
மறுநாள் அக்டோபர் 5ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், அப்பாவு வெற்றிபெற்றுவிட்டதாக சமூக வலைதளங்களில் பேசுவதாகக் குறிப்பிட்டிருந்தார். இது உச்ச நீதிமன்றத்தின் விதிமுறையை மீறுவது போன்றது என்று அப்போதே விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், தற்போது தான் வெற்றிபெற்றுள்ளேன் என்று அப்பாவுவே வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
த.எழிலரசன்

கருத்துகள் இல்லை: