திங்கள், 10 பிப்ரவரி, 2020

இன்று நாடாளுமன்றத்தை உலுக்கப்போகும் இட ஒதுக்கீட்டுத் தீர்ப்பு!

இன்று நாடாளுமன்றத்தை உலுக்கப்போகும்  இட ஒதுக்கீட்டுத் தீர்ப்பு!மின்னம்பலம் : அரசாங்க வேலைகளுக்கான பதவி உயர்வுகளுக்கான இட ஒதுக்கீடு ஓர் அடிப்படை உரிமை அல்ல என்று உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி வழங்கிய தீர்ப்பு இப்போது நாடு முழுவதும் விவாதமாகியுள்ளது.
இட ஒதுக்கீட்டை வழங்க மாநிலங்களைக் கட்டாயப்படுத்த முடியாது என்றும், பொது சேவையில் சில சமூகங்களின் பிரதிநிதித்துவத்தின் தரவு இல்லாமல் மாநிலங்கள் அத்தகைய ஏற்பாடுகளைச் செய்ய நிர்பந்திக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.
உத்தரகாண்ட் அரசாங்கத்தின் பொதுப்பணித் துறையில் 2012ஆம் ஆண்டு உதவி பொறியாளர் (சிவில்) பதவிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதில் எஸ்சி / எஸ்டி சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு அளிக்கப்படவில்லை.
இதுகுறித்து அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதில் இட ஒதுக்கீடு அளிக்காமல் செய்யப்பட்ட நியமனங்கள் செல்லாது என்று உயர் நீதிமன்றம் கூறியது. இதை எதிர்த்து உத்தரகாண்ட் அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
இந்த வழக்கில், “பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு கோருவதற்கு ஒரு தனிநபருக்கு உள்ளார்ந்த எந்த அடிப்படை உரிமையும் இல்லை. இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது” என நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நேரத்தில் மூத்த வக்கீல்கள் கபில் சிபல், கொலின் கோன்சால்வ்ஸ் மற்றும் துஷ்யந்த் தேவ் ஆகியோர் அரசியலமைப்பின் 16(4) மற்றும் 16(4ஏ) பிரிவுகளின் கீழ் எஸ்சி / எஸ்டிகளுக்கு உதவ வேண்டிய கடமை அரசுக்கு இருப்பதாக வாதிட்டனர்.
ஆனால், “பொது பதவிகளில் நியமனம் செய்ய இட ஒதுக்கீடு வழங்குமாறு மாநிலத்தை வழிநடத்த முடியாது. இதேபோல், பதவி உயர்வு விஷயங்களில் எஸ்சி / எஸ்டி நிறுவனங்களுக்கு இட ஒதுக்கீடு செய்ய மாநிலத்திற்குக் கட்டாயமில்லை” என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தத் தீர்ப்புக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிப்ரவரி 9ஆம் தேதி டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக், “இந்த முடிவுக்கு நாங்கள் உடன்படவில்லை. பாஜக அரசாங்கத்தின் கீழ் எஸ்சி / எஸ்டிக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை. எஸ்சி / எஸ்டி நபர்களை அரசாங்க பதவிகளுக்கு நியமிப்பது அரசாங்கங்களின் விருப்பப்படி இருக்கக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி நம்புகிறது, அது அரசியலமைப்பால் வழங்கப்படும் அடிப்படை உரிமை. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் போராடும்” என்று அவர் கூறினார். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் உதித் ராஜ், “இந்த விவகாரம் பாஜக தலைமையிலான அரசாங்கத்துக்கும், மாநிலங்களுக்கும் உள்ள முரண்பாட்டைக் காட்டுகிறது, பாஜக அடிப்படையில் தலித்துகளுக்கும் இட ஒதுக்கீட்டுக்கும் எதிரானது” என்றார்.
பாஜகவின் கூட்டணிக் கட்சியான லோக் ஜனசக்தித் தலைவரும் மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வான், “உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவுக்கு நாங்கள் உடன்படவில்லை. இட ஒதுக்கீடு வழங்கல் வேலைகள் மற்றும் பதவி உயர்வுகளில் தொடர்ந்து இருப்பதை உறுதி செய்ய மத்திய அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கட்சி கோருகிறது” என்றார்.
மேலும், இது தொடர்பாக இன்று மக்களவை, மாநிலங்களவைகளில் இருக்கும் எஸ்சி / எஸ்டி உறுப்பினர்களை ராம் விலாஸ் பாஸ்வான் தனது இல்லத்துக்கு அழைத்து ஆலோசனை நடத்துகிறார். இது தொடர்பாக ஆலோசனை நடத்தி, இட ஒதுக்கீட்டை மீட்டெடுக்க அரசை வலியுறுத்தப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய அரசியல் விவகாரக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியல் சாசனத்தில் கூறி இருப்பது பற்றிய சுப்ரீம் கோர்ட்டின் விளக்கம், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரானது. நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் இதுதொடர்பாக தீர்மானம் இயற்றி, சுப்ரீம் கோர்ட்டு அப்படி ஒரு விளக்கத்தை அளிக்க காரணமான இடைவெளியை மத்திய அரசு சரி செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளது.
இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றத்தில் முக்கிய இடம்பிடிக்கும் என்று தெரிகிறது.
- வேந்தன்

கருத்துகள் இல்லை: