திங்கள், 24 பிப்ரவரி, 2020

ஆசிரியர்களே ஆரம்பியுங்கள். இன்றிலிருந்தே ஆரம்பியுங்கள்.....


Vijay BhaskarVijay : ஆஸியின் குவாடன் பெய்ல்ஸ்
என்று சிறுவனின் உடல் குறைப்பாட்டை சகமாணவர்கள் ”குழு கேலி” செய்து புண்படுத்தியதால் அவன் தற்கொலை செய்ய வேண்டும் என்று தாயை வேண்டிய வீடியோ பற்றி உணர்ச்சிகரமான செய்திகளை இரண்டு நாட்களாக பார்க்கிறேன்.
இரண்டு நாட்கள் இதை உணர்ச்சிகரமாக பேசினோமோ மறு வேலையை பார்த்தோமா என்றில்லாமல் இதை பெற்றோர்களும், ஆசிரியர்களும் சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
1. நீங்கள் ஆசியராக இருக்கும்பட்சத்தில் உங்கள் வகுப்புகளின் கடைசி ஐந்து நிமிடம் இந்த குவாடன் பெய்ல்ஸ் சம்பவத்தை சொல்கிறீர்களா?
2. இப்படி குழு கேலி செய்வது எப்படி சக மாணவரின் மனதை பாதிக்கும் என்பதை எடுத்து உங்கள் மாணவர்களுக்கு உங்களால் முடிந்தவரை புரிய வைத்திருக்கிறீர்களா?
3. குவாடன் பெய்ல்ஸ் சம்பவத்தை வகுப்பில் ஐந்து நிமிட Instant நாடகமாக மாணவர்களை வைத்து நடத்த முயற்சி செய்திருக்கிறீர்களா?
4. உருவ கேலி மற்றும் குழு கேலியை எப்படி தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறீர்களா?
5. நீங்கள் ஒரு பெற்றோராக இருக்கும்பட்சத்தில் உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு உருவ கேலி, குழுகேலி எல்லாம் எவ்வளவு தவறு, அது பிறரின் மனதை எப்படி புண்படுத்தும் என்று புரிய வைத்து விட்டீர்களா?
6. உருவ கேலி, குழு கேலி பற்றி நான்கு சம்பவமாவது நினைவு கூர்ந்து சொல்லி விட்டீர்களா? உங்கள் குழந்தையின் மனதில் அது தவறு என்று ஆழ பதிய வைத்து விட்டீர்களா?

என்னளவில் பிறந்ததில் இருந்து ஒவ்வொரு முறை முடி வெட்டிக் கொண்டு பள்ளிக்கோ, கல்லூரிக்கோ அலுவலகத்திற்கோ செல்லும் போதெல்லாம் “ உன் முடி ஏன் இப்படி பாம்பு மாதிரி இருக்கு” என்ற கேலிக்கு ஆளாகி இருக்கிறேன்.
இது ஒன்றும் பெரிய கேலி இல்லை என்றாலும் லேசாக ஒருமாதிரிதான் இருக்கும். ஒரு மனிதர் என்றில்லை 90 சதவிகித மனிதர்கள் முடியை பற்றி கமெண்ட் அடிப்பார்கள்தான்.
அதனால் எனக்கு உருவ கேலி சைக்காலஜி ஒரளவுக்கு தெரியும்.
அந்த உருவமோ அந்த முடியோ கிடைத்தமைக்கு அவர்தான் காரணம் என்று மிக மிக படித்தவரகளும் நினைப்பார்கள்.
“ஏன் உங்க முடி இப்படி இருக்கு” என்பார்கள். சில சமயம்
“அது வந்து ஏன் தெரியுமா... என் அப்பாவின் விந்து வந்து அம்மாவின் கருமுட்டையோடு இணையும் போது அதிலிருந்து பதினாலாம் நாள் நான் ஒரு உருவமாக உருவாகும் போது ஸ்டிரிக்டா சொல்லிட்டேன். எனக்கு இப்படித்தான் முடி வேணுமின்னு” என்பேன்.
“ஏன் பாஸ் ஆபாசமா பேசுறீங்க” என்று சொல்வார்கள்.
“பின்ன என்னய்யா. என் முடி ஷார்ப்பா இருக்கிறதுக்கு நானா பொறுப்பு” என்பேன் சிரித்தபடி.
இதை ஒரு ஆராய்ச்சியாக நினைக்க ஆரம்பித்ததில் இருந்து புதிதாக ஒரு சிஸ்டத்துக்குள் போய் முதல் முடிவெட்டை வேண்டுமென்றே ஒட்ட வெட்டிவிட்டுப் போவேன்.
கிட்டத்தட்ட அனைத்து மனிதர்களும் மறுநாள் கமெண்ட் செய்வார்கள். சிரிப்பார்கள். குழுவாக சிரிப்பார்கள். வெகு சிலரே இதை இயல்பாக கடந்து போவார்கள்.
என்ன சொல்லவருகிறேன் என்றால் நம் அனைவருக்கும் இயல்பாக உருவ கேலி, குழு கேலி மனம் இருக்கிறது.
சிறு வயதிலேயே அது உருவாகி அப்படியே நம்முடன் வருகிறது. அது எத்தனை பேரை புண்படுத்தி இருக்கிறது என்று நமக்கே தெரியாது.
பெற்றோர்களும், ஆசிரியர்களும் நினைத்தால் இதை புரிய வைத்து தடுக்கலாம்.
குவாடன் பெய்ல்ஸ் சம்பவம் உருவ கேலி, குழுகேலிக்கு எதிராக பிரச்சாரம் செய்ய நமக்கு கிடைத்த முக்கியமான பிரபல சம்பவம்.
குவாடன் பெய்ல்ஸ் ,மேல் வரும் நட்பையும் கருணையும், புரிதலையும் வகுப்பில் பக்கத்தில் இருக்கும் மாணவர்கள் மேல் சக மாணவர்கள் வைக்கும்படி செய்வதில் இருக்கிறது இச்சம்பவ பிரபலத்தன்மையின் வெற்றி...
ஆசிரியர்கள் ஆரம்பியுங்கள். இன்றிலிருந்தே ஆரம்பியுங்கள்..

கருத்துகள் இல்லை: