ஞாயிறு, 23 பிப்ரவரி, 2020

தென் கொரியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரே நாளில் இருமடங்கு உயர்வு


BBC : தென் கொரியாவின் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருமடங்கு உயர்ந்திருப்பதாக அந்நாடு கூறுகிறது. சனிக்கிழமை மட்டும் 229 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனை சேர்த்தால், தென் கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 433ஆக உள்ளது.
சீனாவை தொடர்ந்து தற்போது அதிகமாக வைரஸ் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்ட நாடு தென் கொரியாவாக இருக்கிறது.
இந்நிலையில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக தென் கொரிய பிரதமர் ஜங் சே-க்யூன் தெரிவித்துள்ளார்.
புதிதாக கண்டறியப்பட்ட வைரஸ் தொற்று இருக்கும் நபர்கள் தென் கிழக்கு நகரமான டெகூ அருகில் உள்ள மருத்துவமனை அல்லது அங்கு அருகில் இருக்கும் ஒரு மதக்குழுவுடன் தொடர்புடையவர்களாகவே இருக்கிறார்கள் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
இது வரை கொரோனா வைரஸால் தென் கொரியாவில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.

டெகூ அருகே உள்ள அந்த மருத்துவமனை இருக்கும் பகுதி சிறப்பு பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் இருக்கும் தெருக்கள் பெரும்பாலும் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள கொரிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு, புதிதாக வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ள 229 நபர்களில் 95 பேர் டெனாம் மருத்துவமனை தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள் என்று கூறியுள்ளது.
இந்த மருத்துவமனை முதியவர்கள் மற்றும் மனநல பிரச்சனைகள் உடையவர்களுக்கானது.
தற்போது இந்த மருத்துவமனையில் ஒன்பது பணியாளர்கள் மற்றும் 102 நோயாளிகளுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் டெகூவில் உள்ள தேவாலய உறுப்பினர்கள் 9,336 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தென் கொரியாவில் வைரஸ் தொற்று தீவிர கட்டத்தை எட்டியுள்ளதாக அந்நாட்டு துணை சுகாதாரத்துறை அமைச்சர் கிம் கங்-லிப் தெரிவித்துள்ளார்.
டெனாம் மருத்துவமனையில் பெரும்பாலும் மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்த தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஆனால், எந்த நேரடி தொடர்பும் இல்லாமல் எப்படி இவர்களுக்கு தொற்று பரவியது என்பது புரியவில்லை என்று அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், மத நிகழ்ச்சிகள் அல்லது பெருந்திரளான கூடல்களைத் தவிர்க்குமாறு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தென் கொரிய பிரதமர் கேட்டுக் கொண்டார்.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
சீனாவிற்கு வெளியே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், இந்த வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம்தான் கவலையளிப்பதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் தெரிவித்திருந்தார்

கருத்துகள் இல்லை: