திங்கள், 24 பிப்ரவரி, 2020

BBC யாழ்ப்பாணத்தில் தனித்தமிழ் அங்காடி ... ஆங்கில கலப்பற்ற தமிழ் வாசங்கள்


:யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் தமிழ் மொழி மீது கொண்ட காதலால் தமிழ் மொழியை வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் எடுத்த வித்தியாசமான முயற்சி பலருடைய பார்வையையும் அந்த இளைஞன் மீது திரும்ப வைத்துள்ளது. ஒரே சமயத்தில் தமிழ் மொழியை வளர்த்தும்,தமிழர்களின் வரலாற்று பெருமைகளை வெளிப்படுத்தியும் அதன் ஊடாக தனக்கேற்ற வருமானத்தை அந்த இளைஞர் ஈட்டிவருவதனாலேயே பலருடைய பார்வை அந்த இளைஞர் மீது திரும்பியுள்ளது.
இலங்கை யாழ்ப்பணம் நல்லூரை வசிப்பிடமாக கொண்டவர் பாலச்சந்திரன் கீர்த்தனன் என்ற இளைஞர். அவர் தனித் தமிழ் மொழியில் வாசகங்கள் பொறிக்கப்பட்ட பொருட்களை மாத்திரம் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு அண்மையில் நடாத்தி வருகின்றார்.
அரச உத்தியோகத்தையும், வெளிநாட்டு மோகத்தையும் கொண்டுள்ள இளைஞர்கள் மத்தியில் வித்தியாசமான சிந்தனை கொண்டு தனக்கென்று ஒரு அடையாளத்தை தமிழ் மொழியை வளர்ப்பதன் ஊடாக இவர் உருவாக்கியுள்ளார்.

இவர் தனது அனுபவத்தை பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார்.
தமிழ் மொழி மீது இருந்த விரும்பத்தால் எனக்குள் தேடல் அதிகமாக இருந்தது. புத்தககங்கள், சஞ்சிகளை தாண்டி நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்கள் ஊடாக தமிழ் மொழியை கொண்டுவர வேண்டும் என்று எண்ணினேன்.நானும் கடந்த காலத்தில் ஆங்கில மொழியில் வாசகங்கள் அச்சிடப்பட்ட டீ ஷர்ட்டையே அணிந்திருந்தேன். என்னுடைய தாய் மொழியில் எழுதப்பட்ட டீ ஷர்ட்டை அணிவதால் மொழியை வளர்த்துக் கொள்ளலாம் என்ற சிந்தனையில் டீ ஷர்ட் ஊடாக தமிழ் மொழியை கொண்டுவர வேண்டும் என்று முடிவு செய்தேன்.

என்னுடைய சிந்தனையை, தமிழ் மொழி, எமது மரபுகள், பாரம்பரியங்கள் மற்றும் வரலாறுகளை இளைஞர்கள் மத்தியில் பரப்புவதற்கும் தமிழ் கொசுவுச் சட்டை என்ற ஒரு ஊடகத்தை கையில் எடுத்தேன். தமிழ் மொழியை வளர்க்க வேண்டும் என்ற பொறுப்பு எனக்கும் இருக்கு என்பதை உணர்ந்து கொண்டே போகர் தமிழ் சொசுவுச் சட்டை நிறுவனத்தை உருவாக்கினேன்.
இதை நான் முழுமையாக வியாபாராமாக செய்யவில்லை. தமிழிற்கு பணியாற்ற வேண்டும் என்ற கடமையினாலேயே இதை திருப்தியாக செய்கிறேன். இதனால் எனக்கு லாபம் இல்லை என்று சொல்லவில்லை. எனக்கு தேவையான செலவுகளை சீர் செய்து கொள்வதற்கு ஏற்ற பணத்தினை இந்த வியாபாராத்தின் ஊடாக பெற்றுக் கொள்ள முடிகிறது.


இந்த கொவுசுச் சட்டைகளை ஈழத்தில் உள்ளவர்களும், புலம்பெயர்ந்த தமிழர்கள் மட்டுமல்லாமல் சுற்றுலாப் பயணிகளும் விரும்பி வாங்குகிறார்கள். இது ஆத்ம திருப்தியாக உள்ளது. எமது பயன்பாட்டில் எங்கு எல்லாம் ஆங்கில மொழி உள்ளதோ அங்கு எல்லாம் தமிழ் மொழியை புகுத்த வேண்டும் என்று நோக்கமும் என்னிடத்தில் இருந்தது.
எனது வியாபார நிலையத்தில் உள்ள அனைத்து பொருட்களும் தமிழ் மொழி பொறிக்கப்பட்டவையே. குறிப்பாக டீ ஷர்ட் மட்டுமல்லாமல் தமிழ் மொழி பொறிக்கப்பட்ட சுவர் கடிகாரம், டீ கப், கீரெக் ஆகியவையும் விற்பனை செய்யப்படுகின்றன
தமிழ் கொசுவுச் சட்டைகளின் 70 வீதமான உற்பத்திகள் அனைத்தும் இந்தியாவின் தமிழ் நாட்டை மையப்படுத்தியதாகவே உள்ளன. ஏனையவை யாழ்ப்பாணத்திலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. யாழ்ப்பாணத்தை பொறுத்தவரையில் டீ ஷர்ட்டுகளுக்கான துணிகளை பெற்றுக் கொள்ள முடியாத நிலை உள்ளது. இதனால் இங்கு டீ ஷர்ட்டுகளுக்களுக்கான வடிவமைப்புக்கள் செய்யப்பட்டு, தமிழ் நாட்டில் அவை தயாரிக்கப்பட்டு யாழில் வைத்து உலகம் முழுவதிலும் விற்பனை செய்கிறோம்.
சர்வதே ரீதியில் பிரபலமான முதல்தர நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளான சுந்தர்பிச்சை, பில்கேட்ஸ் போன்றவர்களின் உருவ பொம்மைகளுக்கு தமிழ் கொசுவு சட்டைகளை அணிவித்து காட்சிப் படுத்தியுள்ளோம்.இதன் மூலமாக அவர்களை போன்று நாங்களும் சாதிக்க வேண்டும் என்ற ஊக்கத்தை இளைஞர்கள் மத்தியில் உருவாக்கலாம் என்று நம்புகின்றேன்.
முதலில் சமூக வலைத்தளங்களின் ஊடாகவே தமிழ் கொசுவுச் சட்டைகளை அறிமுகப்படுத்தினேன். அதன் தெடர்ச்சியாக நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா காலங்களிலும், யாழ். வர்த்தக சந்தையிலும் காட்சியறையை அமைத்து விற்பனை செய்தேன். தற்போது நல்லூர் ஆலய பின் வீதியில் நிரந்தர விற்பனை நிலையத்தை அமைத்துள்ளேன்.
டீ ஷர்ட்டுகளில் பொறிக்கப்படும் வாசகங்கள் தமிழ் நுல்களை மையப்படுத்தி ஆத்திசூடி, திருக்குறள், பாரதியார் கவிதை ஆகியவற்றில் இருந்து பெறுகிறோம். கரகாட்டம், சேவல் சண்டை போன்ற எமது பாரம்பரியங்களை வெளிப்படுத்தும் ஓவியங்களையும் பயன்படுத்துகிறோம். முதலில் யாழ்ப்பாணத்தை மையப்படுத்திய பெருமைகளை வெளிப்படுத்தும் வாசகங்களையும், ஓவியங்களையும் டீ ஷர்ட்டில் புகுத்தியிருந்தேன். பின்னர் வடக்கு, கிழக்கு மாகாணத்தின் பெருமைகளையும், வராறுகளையும் வெளிப்படுத்தும் டீ ஷர்ட்டுகளை தாயரித்தோம்.
தமிழை வளர்க்க வேண்டும், எனது தமிழ் மொழியின் பெருமைகளை அனைவரும் அறிய வேண்டும் என்ற எனது முயற்சிக்கு எனது குடும்பத்தினரும், நண்பர்களும் பெரும் ஒத்துழைப்பு தருகிறார்கள். குறிப்பாக யாழ்ப்பாணத்தினை பொறுத்தவரையில் அரசாங்க உத்தியோகம் செய்யாமல் வேறு வேலைகளை தேடுவதற்கு குடும்பத்தினர் ஒத்துழைப்பு தரமாட்டார்கள். இந்த வகையில் எனது குடும்பத்தினர் எனக்கு முழுமையான ஒத்துழைப்பை தருகிறார்கள்.

கருத்துகள் இல்லை: