வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

கமல் - ஷங்கருக்கு முழு சுதந்திரம் கொடுத்த லைகா... குற்றவாளி கூண்டில் கமல் சங்கர் கூட்டணி?

கமல் - ஷங்கருக்கு ஷாக் கொடுத்த லைகா!மின்னம்பலம் : இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்துக்கு, அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகாவிடம் ஸ்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு குறித்து கேள்வியெழுப்பி கமல் கடிதம் எழுதிய செயலை மிகத் துணிவானதாகப் பார்த்தது தமிழ் சினிமா. கமலின் செயல் துணிவானது என்றால், தற்போது லைகா கமலுக்கு எழுதியிருக்கும் கடிதம் லைகா நிறுவனத்தின் நெஞ்சுரத்தைக் காட்டுகிறது.
‘கடிதப் பிரச்சினை நீடித்தால் கமலுக்கும் லைகாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்றும், ஒருவேளை லைகா கமலின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லையென்றால் லைகாவின் மீதிருக்கும் சினிமாவின் நம்பிக்கை மொத்தமாகப் போய்விடும்’ என்றும் திரையுலகினர் கருதியதை, கமல் - லைகா: கடிதப் பின்னணி! என்ற செய்தியில் குறிப்பிட்டிருந்தோம். தங்கள் மீதான சினிமா துறையினரின் நம்பிக்கையைக் காப்பாற்றவும், ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்துக்கான காரணிகளை விளக்கும் வகையிலும் ஒரு கடிதத்தை லைகா நிறுவனத்தின் இயக்குநர் நீலகண்ட் நாராயண்பூர் வெளியிட்டிருக்கிறார்.

லைகாவின் கடிதத்தில் முதலில் விபத்தில் இறந்தவர்களுக்கும், காயப்பட்டவர்களுக்கும் தங்களது வருத்தத்தைத் தெரிவித்துள்ளனர். அதன்பின், விபத்து ஏற்பட்டதை அறிந்ததும் லைகா நிறுவனத்தின் தலைமை இயக்குநர் சுபாஷ்கரன் அல்லிராஜா மற்றும் முக்கிய நிர்வாக உறுப்பினர்கள் பிளைட் பிடித்து வந்து, கமல்ஹாசன் மருத்துவமனையிலிருந்து கிளம்பிய 15 நிமிடத்தில் வந்து சேர்ந்ததையும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், உயிரிழந்தவர்கள் மற்றும் காயம்பட்டவர்களுக்கான நிதியுதவி அளித்தது ஆகிய தகவல்களைக் குறிப்பிட்டபின் கமல்ஹாசன் கேள்வியெழுப்பியவற்றுக்குப் பதிலளிக்கப்பட்டிருக்கிறது.
லைகா கூறியதைப் பார்ப்பதற்கு முன்பு ஒரு சேதி. இந்தியன் 2 ஷூட்டிங்கைப் பொறுத்தவரையில் தயாரிப்பு தரப்பின் தலையீடு இருக்கக் கூடாது எனத் தொடக்கத்திலேயே பேசி முடிக்கப்பட்டிருக்கிறது. உங்கள் தரப்புக்கு ஒரு நபரை நியமிப்பதுபோல, எங்கள் தரப்பில் ஒருவரை நியமித்து உங்களுக்குத் தேவையான தகவல்களை அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள். ஷூட்டிங் குறித்து எங்களைத் தொந்தரவு செய்யக் கூடாது என கமல் - ஷங்கர் ஆகிய இருவரும் முன் ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கின்றனர். அதன்படி லைகா நிறுவனத்தின் சார்பில் சுந்தர்ராஜன் என்கிற எக்ஸிக்யூடிவ் புரொடியூசரும், இயக்குநர் ஷங்கரின் பரிந்துரையின் பேரில் கே.எல்.மணிகண்டன் என்ற துணை எக்ஸிக்யூடிவ் புரொடியூசரும் இந்தியன் 2 திரைப்படத்துக்கு நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இதைக் குறிப்பிட்டுள்ள லைகா நிறுவனம் “எந்த இடத்திலும் சமரசம் செய்துகொள்ளாமல் இந்தியன் 2 படக்குழுவுக்குத் தேவையான அத்தனை பாதுகாப்பு அம்சங்களையும் செய்துதரச் சொல்லியே இவர்களை நியமித்திருந்தோம். ஷூட்டிங் முழுவதும் இவர்களது திட்டப்படியே நடைபெற்றது. அத்தனை ஏற்பாடுகளையும் இவர்களே கவனித்துக்கொண்டனர். எனவே, இவர்கள் இருவரிடமிருந்தும் மேலும் சில விளக்கங்களை இந்த விபத்து குறித்துக் கேட்டிருக்கிறோம்” என்று கூறியிருக்கிறது. இதன்மூலம் லைகா நிறுவனம் மட்டுமே பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பதில் சொல்லக் கடமைப்பட்டதல்ல; இயக்குநர் ஷங்கர் மூலமாக நியமிக்கப்பட்ட ஒருவரும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என சொல்லாமல் சொல்லியிருக்கிறது லைகா நிறுவனம். மேலும், கடிதத்தின் மையக் கருவாக கமல்ஹாசனைத் தாக்கியிருக்கின்றனர்.

“இரண்டு கோடி ரூபாய் அளவுக்கு நிதியுதவிகளை அளித்திருந்தாலும், இந்த விபத்து நடைபெறாமல் இருந்திருக்கலாம் என்பதே லைகாவின் எண்ணம். சர்வதேச தயாரிப்பு நிறுவனமான லைகா படக்குழுவுக்குத் தேவையான அத்தனை பாதுகாப்புகளையும் உறுதி செய்வதில் தயக்கம் காட்டியதே இல்லை. ஆனாலும் விபத்து நடைபெற்றுவிட்டது. இந்தப் பிரச்சினையை அனைவரும் ஒரு மனதோடு சேர்ந்து நின்று நமது பொறுப்பாக எடுத்து சரி செய்ய முயற்சி செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ள லைகா, “மிகச்சிறந்த கலைஞன், டெக்னீஷியன் என பன்முகம் கொண்ட உங்களது திறமை மற்றும் அனுபவம் ஆகியவற்றையும், கேப்டன் ஆஃப் தி ஷிப் என்றழைக்கப்படும் ஜாம்பவான் இயக்குநர் ஷங்கரின் ஆகிருதியையும் கருத்தில்கொண்டு பார்க்கும்போது, ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்படும் பாதுகாப்பு குறைபாடுகள் உங்களுக்கு மிக எளிதாகவே தெரிந்திருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு நிச்சயம் இருந்தது” என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதன்மூலம், நடைபெற்ற விபத்துக்குப் பாதுகாப்பு குறைபாடுதான் காரணம் என்றால் ஸ்பாட்டில் இருந்த உங்களது திறமையும், அனுபவமும் என்ன ஆனது என்று கேட்காமல் கேட்டிருக்கிறது லைகா நிறுவனம்.
இந்த மொத்த கடிதத்தின் சிறப்பாக அமைந்திருப்பது நேரடியாக கமலை தாக்கியதுதான். “ஸ்பாட்டில் இருந்த உங்களுக்குப் பாதுகாப்பு குறைபாடு குறித்து தெரிந்திருக்க வேண்டும். ஏனென்றால், இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டின் பணிகளை மேற்பார்வையிடும் முழு அதிகாரமும் உங்களிடமும் ஷங்கரிடமும்தான் இருந்தது என்பதை நாங்கள் ஞாபகப்படுத்த வேண்டியதில்லை” என்று கூறியிருப்பதன் மூலம், படத்தின் தயாரிப்புக்குப் பணம் கொடுத்ததுடன் படத்தின் ஷூட்டிங்கில் எந்த விதத்திலும் தலையிடாத லைகா நிர்வாகத்தைக் கேள்வி கேட்பதை விட்டுவிட்டு, ஸ்பாட்டிலேயே இருந்தும் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டிருந்த நீங்களும் ஷங்கரும் எங்களுடன் ஒன்றுசேர்ந்து இந்தப் பிரச்சினையை தீர்ப்பதில் கவனம் செலுத்துவோம் என்று மறைமுகமாக கமலுக்கு உணர்த்தியிருக்கிறது லைகா.
கமல்ஹாசன், ஷங்கர் ஆகிய இருவரும் இந்தியன் 2 ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு ஓய்வில் இருக்கின்றனர். அந்த நேரத்தில் விபத்துக்கும் தங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லாதது போல இருவரும் லைகாவைக் கைகாட்டியதால் முழு கார்ப்பரேட் நிறுவனமான லைகா தன்னிடம் இருக்கும் ஆவணங்களின் அடிப்படையில் கமல்ஹாசன், ஷங்கர் ஆகிய இருவரின் கடமைகளை உணர்த்தி இந்தக் கடிதத்தை வெளியிட்டிருக்கிறது என்கின்றனர் லைகா தரப்பில்.
-சிவா*

கருத்துகள் இல்லை: