திங்கள், 24 பிப்ரவரி, 2020

திமுக தனித்துப் போட்டியா? பிரமாண்ட வெற்றியை பெறும்? ஸ்டாலின் - கிஷோர் ஆலோசனை!

திமுக தனித்துப் போட்டியா? ஸ்டாலின் -பிரஷாந்த் கிஷோர் ரகசிய ஆலோசனை!மின்னம்பலம் : பிரபல தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம், வரும் 2021 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுகவுக்காக பணியாற்ற ஆரம்பித்துவிட்டது. இதற்கான ஒப்பந்தம் குறித்த தகவலை கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ஸ்டாலின்.
அவர் தனது முகநூல் பக்கத்தில், “தமிழகம் இழந்த புகழை மீட்கும் நம் குறிக்கோள் வெற்றி பெறவும், அதற்கான திட்டமிடலில் உதவிடவும், திறமைமிக்க, ஒத்த கருத்துடைய பல தமிழக இளைஞர்கள், IPAC - அமைப்பின் கீழ், நம்முடன் 2021 தேர்தலில் இணைந்து பணியாற்றிட இருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
இதற்கடுத்து ஒருமுறை பிரஷாந்த் கிஷோர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார். இரண்டாவது முறையாக ஸ்டாலினுடன் பிரஷாந்த் கிஷோர் சந்தித்துப் பேசியுள்ளார். இதுதொடர்பாக திமுக வட்டாரங்களில் விசாரித்தோம்...
திமுக தலைவர் ஸ்டாலின் இல்லத்திற்கு பிரஷாந்த் கிஷோர் கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) வந்தார். அவருடன் அவர் சகாக்களும் வந்திருந்தனர். சிறிது நேர உரையாடலுக்குப் பிறகு சகாக்களைத் தவிர்த்து ஸ்டாலினும், பிரஷாந்த் கிஷோரும் தனி அறையில் ஆலோசனை நடத்தினர். உதயநிதியும், சபரீசனும் மட்டும் உடனிருந்தனர்.

1 மணி நேரம் வரை நீண்ட இந்த ஆலோசனையில் முதலில் தேசிய அரசியல் குறித்து விவாதித்தனர். சிஏஏவுக்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டம் நடந்தாலும் தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள்தான் வட இந்திய அளவில் பேசப்படுகிறது என்று ஸ்டாலினிடம் சொன்ன பிரஷாந்த் கிஷோர், தமிழகத்தில் மட்டும்தான் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரும் சிஏஏவுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் அரசியல் கள சூழல்கள் குறித்தும் இருவரும் விவாதித்துள்ளனர். இப்போதைய சூழ்நிலையைப் பார்க்கும்போது வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி இல்லாமல் திமுக மட்டும் தனித்துப் போட்டியிட்டால் இதுவரை எந்த அரசியல் கட்சியும் சாதிக்காத வெற்றியை திமுக சாதிக்கும். அது ஒரு ரெக்கார்ட் பிரேக்காக இருக்கும் என்று ஸ்டாலினிடம் பிரஷாந்த் கிஷோர் கூறியுள்ளார் என்கிறார்கள் திமுக வட்டாரங்களில்.
மின்னம்பலம் டீம்

கருத்துகள் இல்லை: