சனி, 29 பிப்ரவரி, 2020

குடிசை வீட்டில் வாழ்ந்து மறைந்த திரு. காத்தவராயன் .. திமுக எம்.எல்.ஏ

குடிசை வீட்டில் வாழ்ந்து மறைந்த எம்.எல்.ஏமின்னம்பலம் : கடைசி வரை குடிசை வீட்டிலேயே வாழ்ந்து மறைந்துள்ளார் குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் (தனி) தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் இதய நோயால் நேற்று காலமானார். அவரது உடல் நேற்று மாலை சொந்த ஊரான பேரணாம்பட்டு எடுத்துச்செல்லப்பட்டு அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
நேற்றிரவு வேலூர் விரைந்த திமுக தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு மற்றும் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் காத்தவராயன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பிறகு வீட்டின் திண்ணையில் அமர்ந்து ஸ்டாலின் கண்கலங்கினார். இன்று காலை 10 மணிக்கு ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் நடந்துசெல்ல பேரணாம்பட்டு வீதிகளின் வழியே காத்தவராயன் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் காத்தவராயன் எளிமை தொடர்பான தகவல்களும் இணையங்களில் பகிரப்பட்டு வருகின்றன. 2011-16 வரை பேரணாம்பட்டு நகர்மன்றத் தலைவராக இருந்த காத்தவராயன், திருமணமே செய்துகொள்ளவில்லை. சகோதரர் குடும்பத்துடன் தங்கிவந்தார்.


எம்.எல்.ஏ ஆன பிறகும் தனது கடைசி காலம் வரை மிகச்சிறிய கூரை வீட்டிலேயே வசித்துவந்தார். உள்ளே நுழைந்தால் தலை இடிக்கும் அளவுக்கான கதவைக் கொண்ட அந்த வீட்டில் ஒரே ஒரு கட்டிலும், ஒரு படுக்கையும் மட்டுமே உள்ளது. இந்த புகைப்படங்களை பகிர்ந்து எளிமையாக வாழ்ந்த எம்.எல்.ஏ என்று பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
காத்தவராயன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “எளிமைக்கு இலக்கணமாகத் திகழ்ந்த காத்தவராயன் திடீரென்று மறைவெய்தினார் என்ற வேதனைச் செய்தி கேட்டு சொல்லொனாத் துயரத்திற்குள்ளானேன். குடியாத்தம் இடைத்தேர்தலில் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் பெற்று - கழக சட்டமன்ற உறுப்பினராக அமோக வெற்றி பெற்ற அவர் தொகுதி பிரச்சினைகளை சட்டமன்றத்தில் ஆக்கபூர்வமாக தொகுத்து வாதாடி அவையில் இருந்தவர்களை எல்லாம் வியக்க வைத்தவர். அவரது வாதத்திறமையை நேரில் கண்ட நான் - அவரை என்னருகில் அழைத்து பாராட்டியது இன்றும் என் கண் முன் வந்து நிழலாடுகிறது” என்று தெரிவித்தவர்,

“காத்தவராயனுக்கு “கழகப் பணியும்” “மக்கள் பணியும்” இரு கண்கள் போன்றது என்பதை நானறிவேன். என்றைக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மீது நீங்காப்பற்று வைத்திருந்த அவர் திமுகவின் அசைக்க முடியாத தூணாக குடியாத்தம் பகுதியில் விளங்கியவர்” என்று புகழ்ந்துள்ளார்.
எழில்

கருத்துகள் இல்லை: