வியாழன், 12 செப்டம்பர், 2019

மோட்டார் வாகன துறை சரிவுக்கு ஓலா ஊபர் காரணமாம் - நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் கண்டனம்


தினத்தந்தி :மோட்டார் வாகன துறை சரிவுக்கு வாடகை கார்கள்தான் காரணம் என கூறிய நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
மோட்டார் வாகன துறையில் ஏற்பட்ட தேக்கநிலைக்கு மெட்ரோ ரெயில், வாடகை கார் பயணம் ஆகியவையே காரணம் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.
அதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில், “பிரமாதம். வாக்காளர்கள் மீது பழிபோடுங்கள். பொருளாதார விவகாரத்தை பா.ஜனதா கையாண்டதை தவிர, வேறு எல்லாவற்றையும் குறை சொல்லுங்கள். இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. அதற்கும் எதிர்க்கட்சிகளை காரணம் சொல்வீர்களா? நல்லது நடந்தால் எங்களால் நடந்தது என்றும், கெட்டது நடந்தால் மற்றவர்களால் நடந்தது என்றும் கூறுகிறீர்கள்.
பிறகு எதற்கு மக்கள் உங்களை தேர்ந்தெடுத்தார்கள்?” என்று அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியும் தனது அதிகாரபூர்வ ‘டுவிட்டர்‘ பக்கத்தில் நிர்மலா சீதாராமனை விமர்சித்துள்ளது. “பஸ், சரக்கு லாரி விற்பனை சரிந்ததற்கும் மக்கள் அவற்றை வாங்கியதை நிறுத்தியதுதான் காரணமா? கடந்த 100 நாட்களில் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களின் பணம் ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் கோடி அழிந்து விட்டது. இதற்கெல்லாம், ஜி.எஸ்.டி., பணமதிப்பு நீக்கம், வரி பயங்கரவாதம் ஆகியவையே காரணம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: