புதன், 11 செப்டம்பர், 2019

வங்கிகளில் விவசாய நகை கடன் விரைவில் ரத்து

தினமலர் : புதுடில்லி: 'வங்கிகளில் விவசாயத்திற்கான நகை கடன் வழங்குவது குறைக்கப்பட்டு வருகிறது; அக். 1 முதல் 4 சதவீத வட்டியில் நகைக் கடன் என்ற திட்டம் இருக்காது' என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வங்கிகளில் விவசாயிகளுக்காக 7 சதவீத வட்டியில் நகை கடன் வழங்கப்படுகிறது. இதில் முறையாக திரும்ப செலுத்துவோருக்கு 3 சதவீத வட்டி தொகை மானியமாக வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் 1 லட்சம் ரூபாய் வரை ஆவணங்கள் இன்றியும் பட்டா, சிட்டா போன்ற ஆவணங்கள் இருந்தால் 3 லட்சம் ரூபாய் வரையும் கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை நிறுத்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக வங்கிகளில் நகை கடன் வழங்குவது குறைக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறியதாவது: விவசாயிகள் பயன் பெறுவதற்காக நகை கடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல் இதர வாடிக்கையாளர் களுக்கும் கடன் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் விவசாய நகை கடனுக்கான வட்டி குறைப்பால் வங்கிகளுக்கு ஏற்படும் இழப்பை சரிக்கட்ட 5 சதவீத தொகையை மத்திய அரசு வழங்கும். ஆனால் நடப்பு பட்ஜெட்டில் 5 சதவீதத்திற்கான நிதி ஒதுக்கப்படவில்லை. அதனால் வங்கிகள் நஷ்டத்திற்கு உள்ளாகும்.
இந்த காரணத்திற்காக விவசாய நகை கடன் திட்டத்தை நிறுத்த அனைத்து வங்கிகளும் திட்டமிட்டுள்ளன. அதன் துவக்கமாக விவசாய நகை கடன் வழங்குவது குறைக்கப்பட்டுள்ளது. வரும் அக். முதல் விவசாய நகை கடன் திட்டம் ரத்து செய்ய வாய்ப்பு இருக்கிறது. விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும். அதேநேரத்தில் 9 சதவீத வட்டியில் வழங்கப்படும் அனைவருக்குமான நகை கடன் தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர்

கருத்துகள் இல்லை: