செவ்வாய், 10 செப்டம்பர், 2019

நீதிபதி தஹில் ரமானியை மேகாலயாவுக்கு மாற்றியதற்கு எதிர்ப்பு: தமிழகம், புதுச்சேரியில் வக்கீல்கள் இன்று கோர்ட்டு புறக்கணிப்பு

ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தஹில் ரமானியை மேகாலயாவுக்கு மாற்றியதற்கு எதிர்ப்பு: தமிழகம், புதுச்சேரியில் வக்கீல்கள் இன்று கோர்ட்டு புறக்கணிப்பு தினத்தந்தி :  ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமானியை மேகாலயா ஐகோர்ட்டுக்கு மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வக்கீல்கள் இன்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். சென்னை,
 சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக வி.கே.தஹில் ரமானி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பதவி ஏற்றார். இவரை, நிர்வாக காரணத்துக்காக மேகாலயா ஐகோர்ட்டுக்கு மாற்றி, சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழு உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமானி விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து தன்னுடைய நீதிபதி பதவியை தஹில் ரமானி ராஜினாமா செய்தார்.


இதைத்தொடர்ந்து, சென்னை ஐகோர்ட்டுக்கு நேற்று அவர் வரவில்லை. ஐகோர்ட்டு பதிவுத்துறை ஏற்கனவே தயாரித்த வழக்கு விவர பட்டியலின் அடிப்படையில் அவரும், நீதிபதி எம்.துரைசாமியும் நேற்று 75 வழக்குகளை விசாரிப்பதாக இருந்தது.

ஆனால், ராஜினாமா கடிதம் அனுப்பியதை தொடர்ந்து தலைமை நீதிபதி ஐகோர்ட்டுக்கு வராததால் அவர் தலைமையிலான அமர்வு விசாரிக்க வேண்டிய வழக்குகளை மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி, நீதிபதி சி.சரவணன் ஆகியோர் விசாரிப்பார்கள் என்று ஐகோர்ட்டு பதிவுத்துறை நேற்று காலை அறிவித்தது. அதேபோல, நீதிபதி எம்.துரைசாமி தனியாக விசாரிக்க வேண்டிய வழக்குகளின் பட்டியலையும் வெளியிட்டது.

இதற்கிடையில், தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமானியை மேகாலயா ஐகோர்ட்டுக்கு மாற்றிய உத்தரவை திரும்ப பெறவேண்டும் என்று கோரி சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஐகோர்ட்டு நுழைவுவாயிலில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், மூத்த வக்கீல் ஆர்.வைகை, வக்கீல்கள் விஜயகுமார், என்.ஜிஆர்.பிரசாத், சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்க துணை தலைவர் ஆர்.சுதா, செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார், வக்கீல்கள் வி.சுரேஷ், நாகஷீலா, சீனிவாசராவ் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தின் கூட்டம், அதன் தலைவர் வக்கீல் ஜி.மோகனகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. அப்போது தலைமை நீதிபதியை இடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இதுபற்றி வக்கீல்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், “தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமானியை இடமாறுதல் செய்தது இந்திய அரசியலைப்பு சட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். எனவே, நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாக்கும் விதமாக இன்று ஐகோர்ட்டு உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களிலும் வக்கீல்கள் ஆஜராகக்கூடாது என்றும், கோர்ட்டை புறக்கணிக்க வேண்டும் என்றும் தீர்மானம் இயற்றப்பட்டு உள்ளது” என்று கூறப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் வக்கீல்கள் இன்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்

கருத்துகள் இல்லை: