புதன், 11 செப்டம்பர், 2019

அன்புமணி துணை முதலமைச்சர்? 2021 இல் கூட்டணி ஆட்சிக்கு பாமக அதிமுக தயார்?

டிஜிட்டல் திண்ணை: கூட்டணி ஆட்சி - ஸ்டாலினை வீழ்த்தத் தயாராகும் எடப்பாடி!மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.
“பொதுவாகவே கூட்டணி முடிவுகளையும், எத்தனை தொகுதிகளில் நிற்பது போன்றவற்றையெல்லாம் தேர்தல் தேதி அறிவித்த பிறகு முடிவு செய்வோம் என அரசியல்வாதிகள் பொத்தாம் பொதுவான ஒரு பதிலைச் சொல்லி முழு பூசணிக்காயைப் பேட்டிகளில் மறைக்க பார்த்திருக்கிறோம். இதில் டாக்டர் ராமதாஸ் வித்தியாசமானவராக இருக்கிறார். இதுகுறித்து அன்புமணியின் முப்படை என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் ஏற்கனவே செய்தி வெளியாகியிருக்கிறது. அதாவது அன்புமணியின் தம்பிகள் படை, தங்கைகள் படை, மக்கள் படை போன்றவை ஆரம்பிக்கப்பட்டு உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது என்றும் 80 தொகுதிகளில் பாமக பலமான சக்தியாக உருவெடுக்க ராமதாஸ் திட்டம் தீட்டி வருகிறார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் பாமக வாக்காளர் மாநாடு என்ற பெயரில் மாநாடு நடத்தப் போவதாகவும் மின்னம்பலத்தில் செய்தி வெளியிடப்பட்டது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாமக தனித்து நிற்பதற்கான வியூகத்தின் முன்னோட்டமே இது என்று பாமக நிர்வாகிகள் மத்தியில் பேசப்பட்டதையும் அச்செய்திகளில் குறிப்பிட்டிருந்தோம். இதற்கிடையில் டாக்டர் ராமதாஸின் திட்டமே வேறு என்று காதை கடிக்கிறார்கள் தைலாபுரம் தோட்டத்தின் தற்போதைய தட்பவெப்பத்தை அறிந்த சிலர்.

தமிழகத்தில் திமுக, அதிமுக தனித்து ஆட்சி என்ற நிலை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு கூட்டணி ஆட்சி என்ற நிலை உருவாக வேண்டும் என்பதை தனது கட்சி அளவில் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறார் ராமதாஸ். அதற்கு வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் ஒரு சரியான சந்தர்ப்பமாக இருக்கும் என்று இப்போது தனக்கு நெருக்கமான நிர்வாகிகளிடம் கூறி வருகிறார் அவர்.
2019ஆம் ஆண்டு சட்டமன்ற இடைத் தேர்தலிலும் மக்களவைத் தேர்தலிலும் அதிமுகவோடு கூட்டணி வைத்தபோது பாமக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. இந்த நிலையில் இதேபோன்றதொரு வெறும் தொகுதிக் கூட்டணியை அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலிலும் அமைப்பது சரியாக இருக்காது என்று ராமதாஸ் கருதுகிறார். அதாவது 2021 சட்டமன்றத் தேர்தலைக் கூட்டணி ஆட்சி என்ற கொள்கை முழக்கத்தோடும் அதற்கு உடன்பட்ட கட்சியோடும் சந்திக்க பாமக கொள்கை அளவில் முடிவு செய்திருக்கிறது.
இதன்படி திமுகவுடன் கூட்டணி என்பது சாத்தியமற்றதாகிறது. கடந்த காலங்களில் திமுக மத்தியில் கூட்டணி ஆட்சிகளில் இருந்தபோதும், மாநிலத்தில் கூட்டணி ஆட்சியை ஒட்டுமொத்தமாக நிராகரித்தே வந்திருக்கிறது. சமீபத்தில் திருப்பூரில் நடைபெற்ற ஒரு மண விழாவில் பேசிய ஸ்டாலின், ‘திமுக 1971இல் பெற்றதைப் போல 200 இடங்களில் வெற்றிபெறும்’ என்று கூறுகிறார். இதன் மூலம் கூட்டணி ஆட்சி என்பதையெல்லாம் ஸ்டாலின் ஓர் அரசியல் முடிவாகக் கூட கருதவில்லை என்பது தெரிகிறது.
அதேநேரம் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் அதிமுகவில் பன்னீர்செல்வம் புதிய சக்தியாக உருவெடுக்கவில்லை. தர்ம யுத்தம் என்ற பெயரில் அவருக்கு அந்த வாய்ப்பு காலத்தால் வழங்கப்பட்டபோதும் அவர் அதைத் தொடர்ந்து பயன்படுத்தாமல் எடப்பாடி தலைமையிலான அரசுடன் இணைந்து விட்டார். எனவே ஜெயலலிதாவுக்குப் பிறகான அதிமுகவில் தலைமை தாங்கும் ஆளுமை என்ற அளவில் பன்னீர்செல்வத்தை விட எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகிக்கிறார். இப்போது தான் வகிக்கும் முதல்வர் பதவி என்பது யானை தூக்கிப்போட்ட மாலை என்பது எடப்பாடி பழனிசாமிக்கு நன்கு தெரியும். ஆனால், அதற்காக அப்படியே இருந்துவிடாமல் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை தனக்கான தேர்தலாக, தன் தலைமையால் வெல்லக் கூடிய தேர்தலாக மாற்ற வேண்டும் என்பதில் உறுதியோடு இருக்கிறார் எடப்பாடி.
இந்த நிலையில் 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாமக கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்தை முன்வைத்தால் தன் தலைமையில் ஒரு வெற்றியைக் காண காத்திருக்கும் எடப்பாடி அதற்கு எடுத்த எடுப்பிலேயே தடை சொல்லி விட மாட்டார் என்று கருதுகிறார் ராமதாஸ்.
இதன் அடிப்படையில்தான் வரும் சட்டமன்றத் தேர்தலில் வடமாவட்டங்களில் 80 தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து அதில் அன்புமணி முப்படை அமைப்பை ஏற்படுத்தி பாமக சுமார் 50 தொகுதிகளில் வெற்றி பெறும் அளவுக்கு வியூகம் வகுத்து வருகிறார் ராமதாஸ்.
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு எதிராக ஒரு மகத்தான வெற்றி பெற வேண்டுமென்றால் கூட்டணி ஆட்சி என்ற கொள்கை முழக்கம் எடப்பாடிக்கு மிக உபயோகமாக இருக்கும் என்றும் தைலாபுரம் தோட்டத்திலிருந்து சேலம் நெடுஞ்சாலை நகருக்குத் தகவல் சொல்லப்பட்டுள்ளது.
2021 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் வேட்பாளர் அன்புமணி என்ற நிலைக்கும் பாமக தயாராகிவிட்டது. பாமக ஏற்கனவே திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைத்து விட்டது. அன்புமணியை முதல்வர் வேட்பாளராக நிறுத்தி தனித்துப் போட்டியிட்டு விட்டது. ஆனாலும் தங்கள் கட்சிக்கு உரிய அங்கீகாரமும் வெற்றியும் கிடைக்கவில்லை என்பதில் டாக்டர் ராமதாஸுக்குப் பெரிய வருத்தம் இருந்து வருகிறது. இந்த நிலையில் கூட்டணி ஆட்சி என்ற கொள்கை முழக்கத்தை வைத்துத் தேர்தலைச் சந்திப்பது என்பதும் அதன் மூலம் அன்புமணியை வலுவான துணை முதல்வர் ஆக்குவது என்பதும் இப்போது ராமதாஸின் வியூகமாக இருக்கிறது.
ஸ்டாலினை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும், அதிமுகவின் அடுத்த தலைவர் தானே என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற அரசியல் சூழலில் கூட்டணி ஆட்சி என்ற அஸ்திரம் எடப்பாடி பழனிசாமிக்கும் தேவையான ஒன்றாகவே இருக்கிறது. எனவே, டாக்டர் ராமதாஸின் நம்பிக்கையை எடப்பாடி நிஜமாக்கினாலும் ஆச்சர்யம் இல்லை என்பதே தற்போதைய நிலவரம்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப் லைனில் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: