சனி, 14 செப்டம்பர், 2019

இந்தி - யாவா?: அமித்ஷா கருத்துக்குத் தமிழகத்தில் எதிர்ப்பு!


இந்தியாவா? இந்தி-யாவா?: அமித்ஷா கருத்துக்குத் தமிழகத்தில் எதிர்ப்பு!  மின்னம்பலம:  இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதற்குத் தமிழகத்திலிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது,
தபால் துறை, ரயில்வே துறை ஆகிய தேர்வுகளை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே எழுத முடியும் என்ற அறிவிப்புக்குத் தமிழகத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, மீண்டும் மாநில மொழிகளிலேயும் தேர்வு எழுதலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. இவ்வாறு தமிழகத்தில் இந்தியைத் திணிக்க மத்திய அரசு முயல்கிறது என்று குற்றச்சாட்டும் அரசியல் கட்சிகள் தமிழ் மொழி உணர்வோடு விளையாடுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 14) இந்தி தினத்தை ஒட்டி உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரே நாடு ஒரே மொழி என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு, ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உண்டு, ஆனால் உலக அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த ஒரே மொழி இருப்பது மிகவும் முக்கியம். ஒரு மொழியால் நாட்டை ஒன்றிணைக்க முடியும் என்றால், அது பரவலாக பேசப்படும் இந்தி மொழியால் தான் முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ”மகாத்மா காந்தி மற்றும் சர்தார் வல்லபபாய் படேல் ஆகியோரின் கனவுகளை நனவாக்க இந்தி மொழியின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்” எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உள்துறை அமைச்சரின் இந்த பதிவுக்குத் தமிழகத்திலிருந்து கடும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன. அவரது கருத்தைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ”இந்தியாவா?’இந்தி-யாவா” என்று கேள்வி எழுப்பியுள்ள ஸ்டாலின் உள்துறை அமைச்சர் தனது கருத்தை மறுபரீசிலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், ”வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் இந்தியாவின் பண்பாட்டு அடையாளம்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா ’நாடு முழுமைக்கும் ஒரு மொழி என்பது மிகவும் அவசியம். அதுதான் உலகளவில் இந்தியாவிற்கான அடையாளத்தைத் தரும். அதிக மக்களால் பேசப்படும் இந்தமொழிதான் அந்த அடையாளத்திற்குரிய மொழி’எனக் கருத்து வெளியிட்டிருப்பது இந்தியாவில் பெரும்பான்மையாக உள்ள இந்தி பேசாத மக்கள் அனைவரையும் ‘இரண்டாம் தர குடிமக்களாக்கும் முயற்சியாகவே தெரிகிறது.
அதிகம் பேசப்படுவது இந்தி என்பதால் அதுதான் தேசிய மொழி என்றால், இந்தியாவில் அதிகம் பறக்கும் காக்கைதானே இந்தியாவின் தேசியப் பறவையாக இருந்திருக்க வேண்டும் என அன்றே அண்ணா கேட்டார். அன்று தொடங்கி இன்றுவரை இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து, தாய்த் தமிழைக் காத்து, பிற மாநில மொழிகளுக்கும் அரணாக விளங்கி வருகிறது திமுக. அரசமைப்பு சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளும் சமத்துவத்துடன் பேணப்பட வேண்டிய நிலையில், அதில் ஒரு மொழியான இந்தி மட்டுமே இந்தியாவின் அடையாளம் என்ற வகையில், இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும் வகையில், நாட்டின் உள்துறை அமைச்சரே தன் கருத்தை வெளியிட்டிருப்பது வேதனைக்குரியது மட்டுமல்ல; கடும் கண்டனத்திற்குரியது. இந்த கருத்தை அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். பிரதமர் மோடியும், இது குறித்து தன்னுடைய நிலையை தெளிவுபடுத்த வேண்டும். இல்லையெனில், திமுக இன்னொரு மொழிப்போருக்கு ஆயத்தமாகும்” என்று எச்சரித்துள்ளார்.
விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில், ”அமித்ஷாவின் கருத்து என்பது புதிதல்ல. அது அவர்களது நீண்ட கால கனவுத் திட்டம். சர்வாதிகார முறையில் முடிவெடுத்து கருத்து தெரிவிக்கிறார்கள். இது இந்தியாவின் பன்முகத் தன்மையைச் சிதைக்கும் வகையில் இருக்கிறது. இந்தியாவை இந்து தேசமாக்க வேண்டும் என்பது தான் இவர்களது நோக்கமே தவிர, உலக அளவில் இந்தியாவை உயர்த்த வேண்டும் என்பதல்ல” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
தற்போது உள்ள சூழலில், இந்தியை இணைப்பு மொழியாகக் கொண்டுவர முயன்றால் தமிழகம் மட்டுமல்லாது பிறமாநிலங்களிலும் எதிர்வினையே இருக்கும் என்று தெரிவித்துள்ள தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ”இந்தியை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் தமிழர்களுக்கு இல்லை” என்று கூறியுள்ளார்.
”இந்தியாவின் ஒரே மொழி இந்தியாக இருக்க வேண்டும் என்று சொல்லும் அமித் ஷா நாட்டின் பன்முக தன்மையை அழிக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துகிறார். இது பொருளாதார மந்தநிலைக்குப் பதில் சொல்ல முடியாத மோடி அரசின் மற்றுமொரு பிளவுவாத நடவடிக்கை” என்று சிபிஐஎம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: