வெள்ளி, 17 மே, 2019

நடவு வயல்களில் ஓஎன்ஜிசி - கெயில்: போராட்டத்தில் டெல்டா!

நடவு வயல்களில் ஓஎன்ஜிசி - கெயில்: போராட்டத்தில் டெல்டா!மின்னம்பலம்:  ’கொல்லாதே கொல்லாதே விவசாயிகளைக் கொல்லாதே... நிறுத்து நிறுத்து... கெயில் குழாய் பதிப்பதை நிறுத்து. நாசம் செய்யாதே நாசம் செய்யாதே பயிர்களை நாம் செய்யாதே...’
-இந்த முழக்கங்கள் ஏதோ தெருமுனைப் போராட்டங்களில் முன் வைக்கப்படுபவை அல்ல. நாற்றுகள் நிறைந்த வயல்களில் சேற்றில் நின்று நேற்றில் இருந்து (மே 16) விவசாயிகள் எழுப்பும் முழக்கங்கள் இவை.
கமல்ஹாசனின் இந்து தீவிரவாதி பற்றிய பேச்சுகளில் ஊடகங்கள் மூழ்கியிருக்கும் நேரத்தில், காவிரி டெல்டா பகுதியான மயிலாடுதுறை அருகே உள்ள கிராமங்களில் ஓஎன் ஜிசி நிறுவனத்தை எதிர்த்து விவசாயிகள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

காரணம் சீர்காழி தாலுகா மாதானம் முதல் தரங்கம்பாடி அருகே உள்ள மேமாத்தூர் வரை உள்ள 29 கிலோ மீட்டர் தூரத்துக்குள் பசுமையான வயல்கள் வழியாக ஹைட்ரோ கார்பன் கேஸ் கொண்டு செல்வதற்காக கெயில் நிறுவனத்தின் குழாய் பதிக்கும் வேலைகளில் சில நாட்களாக தீவிரமாகியிருக்கிறது .

மத்திய அரசின் ஓஎன்ஜிசி நிறுவனம். விவசாயிகள் கடுமையாக எதிர்த்தும் நாற்றுவிடப்பட்ட வயல்களில் கெயில் -ஓஎன் ஜிசி நிறுவனத்தின் சார்பில் கனரக இயந்திரங்கள் அதிகாலை, இரவு வேளைகளில் இறக்கப்படுகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த கனரக இயந்திரங்களை நாற்று நிலங்களில் போலீசார் உதவியோடு இறக்குவதால் மக்கள் கடுமையான கோபத்தில் இருக்கின்றனர்.
இது தொடர்பாக செம்பனார் கோவில் காவல் நிலையத்தில் முடிகண்ட நல்லூர் கிராம விவசாயிகள் சார்பாக புகார் கொடுத்திருக்கும் நிலம் நீர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் இரணியனிடம் மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி சார்பாக பேசினோம்.

“ஹைட்ரோ கார்பனை எடுத்துச் செல்வதற்காக கெயில் நிறுவனம் விளை நிலங்களில் குழாய்களை பதிக்க மயிலாடுதுறை பகுதியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. நடவு நட்டிருக்கும் நிலங்களில் கூட குழாய்களை பதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். நேற்று முடிகண்ட நல்லூரில் உள்ள நிலங்களில் குழாய் பதிப்பதற்காக குழி தோண்ட வந்திருக்கிறார்கள். அதை மக்களும் விவசாயிகளும் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள். இன்று மீண்டும் வந்து வயல்களில் குழி தோண்டும் நடவடிக்கையில் அதிகாலை முதல் இறங்கியுள்ளனர். அதை பெண்கள் உட்பட பலரும் எதிர்த்ததால் கனரக இயந்திரங்களைக் கொஞ்ச தூரம் தள்ளி எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.
மக்களுடைய கோரிக்கைகளைக் கேட்காமல் போலீசார் பாதுகாப்போடு இப்பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஏற்கனவே நான் போலீஸில் கொடுத்த புகாரின் பேரில் மேமாத்தூரில் குழாய் பதிக்கும் பணிகளை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இதேபோல வேட்டங்குடி, கருவி, திருநகரி போன்ற பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்தியதால் பணிகளை நிறுத்தியிருக்கிறார்கள். ஆனபோதும் அடுத்தடுத்த பகுதிகளில் குழாய் பதிக்கும் வேலையைத் தொடர எத்தனிக்கிறார்கள்.

எந்த விளக்கமும் தெரிவிக்காமல் முடிகண்டநல்லூரில் மூதாட்டியிடம் செக் கை திணித்துவிட்டுப் போயிருக்கிறார்கள் கெயில் அதிகாரிகள். அந்த செக் கை திரும்பக் கொடுக்க முடிவு செய்திருக்கிறோம். இன்று காலை 5 மணியில் இருந்து வயலில் போராடிக் கொண்டிருக்கிறோம். இதோ இப்போதுதான் (இன்று மே 17 பகல் 12) மீண்டும் புகார் கொடுப்பதற்காக செம்பனார் கோவில் காவல் நிலையத்துக்குக் கிளம்பிக்கொண்டிருக்கிறேன். போராட்ட நிலவரங்களை மீண்டும் மின்னம்பலத்துக்கு தெரிவிக்கிறேன்” என்றார் இரணியன்.
மக்களின் போராட்டத்தில் பங்கெடுக்க வேண்டிய மக்கள் பிரதிநிதிகள் எல்லாம் நான்கு தொகுதி இடைத் தேர்தல் பணிக்குப் போய்விட்டார்கள். மக்களோ தங்கள் கண்ணெதிரே நிற்கும் கனரக இயந்திரங்களை எதிர்த்து கண்ணீரும் கோபமுமாய் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இதுதான் டெல்டாவின் இப்போதைய நிலவரம்!

கருத்துகள் இல்லை: